"இந்த வயசுல குழந்தை பிறக்குறது நல்ல விஷயம் தானே" - Raj Ayyappa | Bhanu Prakash |...
மும்பை ரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை? ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் கையை இழந்த சோகம்
மும்பையில் எப்போதும் புறநகர் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் ரயிலில் ஏறி இறங்குவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். பெண்களுக்கு தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், பொது பெட்டியில் பெண்கள் பயணிப்பது வழக்கம்.
இது போன்ற நேரங்களில் ஆண் பயணிகளின் கை பெண்கள் மீது பட்டு தகராறு ஏற்படுவதுண்டு. மும்பை போரிவலியைச் சேர்ந்த ஸ்நேகா என்ற இளம்பெண் போரிவலியில் இருந்து விரார் செல்லும் ரயிலில் ஏறினார். ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது ஆண் பயணி ஒருவர் அப்பெண்ணைத் தொட்டதாகத் தெரிகிறது. இதனால் அப்பெண் தனது செருப்பை எடுத்து அந்தப் பயணி மீது வீசியதாகத் தெரிகிறது. இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சக பயணிகள் தலையிட்டு மோதலைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் ஆண் பயணி அப்பெண் வீசிய செருப்பை எடுத்து மீண்டும் அப்பெண் மீது வீசினார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ரயில் நைகாவ் ரயில் நிலையம் வந்தது. நைகாவ் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது அப்பெண்ணை ஆண் பயணி வெளியில் பிடித்து தள்ளினார். இதனால் பெண் பயணி வெளியில் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே இரண்டு ரயில் பெட்டிகளுக்கு இடையே இருக்கும் இடத்திற்குள் விழுந்தார். அதிலிருந்து அப்பெண் மேலே ஏறி வர முயன்றார். ஆனால் அதற்குள் ரயில் கிளம்பி விட்டது. இதனால் அப்பெண்ணின் ஒரு கையில் ரயில் ஏறியதில் அப்பெண் தனது ஒரு கையை இழந்தார். அப்பெண்ணை ரயில்வே போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்பெண்ணைத் தள்ளிவிட்ட நபர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார். ஆனால் சில மணி நேரத்தில் அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
இது குறித்து ஒரு கையை இழந்த பெண் கூறுகையில், ''நான் நைகாவிற்குச் சென்று கொண்டிருந்தேன். போரிவிலியில் ரயிலில் ஏறினேன். நைகாவ் ரயில் நிலையம் நெருங்கும்போது, என்னைத் தகாத முறையில் தொட்டு ஒரு நபர் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார்.
நான் அதனை எதிர்த்தேன். நான் ரயிலில் இருந்து இறங்கிய பிறகும், அவர் என்னைத் தகாத முறையில் தொட்டார். நான் அவரிடம் உங்களுக்கு வீட்டில் அம்மா இல்லையா? என்று கேட்டேன். ஆனாலும், அவர் தொடர்ந்து என்னைத் துன்புறுத்தினார்.

நான் அவரை என் செருப்பால் அடித்து விரட்ட முயன்றபோது, அவர் தனது சொந்த செருப்பால் என்னைத் தாக்கினார். பிறகு, அவர் என்னை ரயிலில் இருந்து தள்ளிவிட்டார், எனக்கு நீதி வேண்டும். என் வாழ்க்கை முழுவதும் நாசமாகிவிட்டது. நான் என் குடும்பத்தில் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டேன்.
என் ஒரு கையால் எதையும் செய்ய முடியாது. எனக்கு தலையில் 16 தையல் போடப்பட்டுள்ளது. என்னைத் தள்ளிவிட்டவர் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று கூறினார்.



















