4 லட்சம் பேருக்கு அழைப்பு, பாலிவுட் பிரபலங்கள் வருகை; மகள் திருமணத்தை ஆடம்பரமாக ...
4 லட்சம் பேருக்கு அழைப்பு, பாலிவுட் பிரபலங்கள் வருகை; மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தும் பீகார் MLA
பீகாரில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆனந்த் சிங். இவர் தனது இளைய மகள் சிவாங்கி சிங்கிற்கு வரும் 25ம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார். அவர் திருமணத்திற்குச் செய்து வரும் ஏற்பாடுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனந்த் சிங் சமீபத்தில் 9 பேரைக் கொலை செய்ததாகப் பெருமையுடன் சொல்லிவிட்டு அதனைப் பின்னர் மறுத்தார். உள்ளூர் மக்களால் 'சோட்டே சர்க்கார்' என்று அழைக்கப்படும் ஆனந்த் சிங், கொலை வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கொலை வழக்கு ஒன்றில் வரும் டிசம்பர் 3ம் தேதி கோர்ட்டில் சரணடையும் படி சுப்ரீம் கோர்ட் ஆனந்த் சிங்கிற்கு உத்தரவிட்டு இருக்கிறது. அதற்கு முன்பாக தனது மகள் சிவாங்கி சிங்கின் திருமணத்தை எந்த அளவுக்கு ஆடம்பரமாக நடத்த முடியுமோ அந்த அளவுக்கு ஆடம்பரமாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.
ஆனந்த் சிங்கின் மகளான சிவாங்கி சிங், வரும் 25ம் தேதி லட்மாவில் உள்ள அவர்களது பூர்வீக கிராமத்தில் இருக்கும் இல்லத்தில் ரிஷிகேஷ் குமாரை மணக்க உள்ளார்.

இத்திருமணத்திற்கு 4 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்காக தனி பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மணமக்களுக்காக 100 அடி நீளமுள்ள சிமெண்ட் மேடை ஒன்று உருவாக்கப்படுகிறது. இந்த முழு மேடையையும் 150 குவிண்டால் எடையுள்ள அலங்காரப் பொருட்களைக் கொண்டு அலங்கரிக்க உள்ளனர். அதன் மீது சிவாங்கி சிங்கும், அவரது வருங்கால கணவர் ரிஷிகேஷ் குமாரும் அமர்வார்கள்.
இத்திருமணத்திற்கு பாலிவுட் மற்றும் போஜ்புரி பிரபலங்களான சோனு சூட், மனோஜ் திவாரி, மைதிலி தாக்கூர், அக்ஷரா சிங், பவன் சிங் உள்ளிட்ட சுமார் முப்பத்தாறு பாலிவுட் நடிகர்கள் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகாரிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுவதிலுமிருந்து மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பு அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமண விழாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு கிடையாது. கலைஞர்களும் வருகிறார்கள். பிரதமர் மோடிக்கும் அழைப்பிதழ் வழங்கப்படும்," என்று கூறினார்.
திருமணத்தில் மணமகளுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் கார் பிறந்தநாள் பரிசாகக் கொடுக்கப்பட இருக்கிறது. மணமகளே அந்தக் காரைத் தேர்வு செய்து இருப்பதாக ஆனந்த் சிங்கின் மூத்த மருமகன் புனீத் குமார் தெரிவித்தார். இது தவிர ரூ.1 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார் ஒன்று ஆனந்த் சிங் இளைய மகனுக்காக வாங்கப்பட்டுள்ளது. இரண்டு கார்களும் ஏற்கனவே வந்து சேர்ந்துவிட்டது. திருமணத்தில் 150 வகையான உணவு பரிமாறப்பட இருக்கிறது.
அதோடு திருமணத்தையொட்டி பிரத்யேகமாக குதிரைப்போட்டி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக குதிரைப்போட்டி நடக்கும் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து குதிரைகள் வந்து கலந்து கொள்கின்றன.
இதில் வெற்றி பெறும் குதிரைக்கு கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. இத்திருமணம் தான் பீகார் முழுக்க பேசும்பொருளாக மாறி இருக்கிறது. திருமணம் முடிந்த சில நாட்களில் ஆனந்த் சிங் கோர்ட்டில் சரணடைந்து சிறைக்குச் செல்வார்.



















