Doctor Vikatan: ஸ்ட்ரோக் பாதிப்பு; பார்வை மற்றும் பேச்சுக் குறைபாட்டை குணப்படுத்...
111 போலி நிறுவனங்கள், ரூ.1000 கோடி மோசடி; வெளிநாட்டில் இருந்து இயக்கிய சைபர் கும்பல் - CBI அதிர்ச்சி
நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்லைன் போலி பங்குவர்த்தகம், வேலை வாய்ப்பு, எம்.எல்.எம் என பல்வேறு வழிகளில் இணையத்தள மோசடிகள் நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் தினமும் கோடிக்கணக்கான பணத்தை இழக்கின்றனர், ஆனால் குற்றவாளிகள் சிக்காமல் தப்பித்து விடுகின்றனர்.
ஆன்லைன் நிதி மோசடி தொடர்பாக சி.பி.ஐ.க்கும் தொடர்ச்சியாக புகார்கள் வந்திருந்தன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
நாடு முழுவதும் இதுவரை பல புகார்கள் வந்திருந்தன. ஆரம்பத்தில் இதனை தனித்தனி புகாராக சி.பி.ஐ. அதிகாரிகள் நினைத்தனர்.
விசாரணையில் மொபைல் செயலியை பயன்படுத்தி பேமெண்ட் கேட்வே போன்ற சகல வசதிகளுடன் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்தது.

அதோடு கூகிளில் விளம்பரம், மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது, ஒரே நேரத்தில் பல சிம்கார்டுகளை பயன்படுத்தி மெசேஜ் அனுப்புவது, கிளைட் சர்வர் என அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் அக்கும்பல் இயங்கி வந்ததையும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஜார்கண்ட், ஹரியானா போன்ற மாநிலங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தி, டிஜிட்டல் கருவிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இம்மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 3 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இம்மோசடியை வெளிநாட்டு கும்பல் வெளிநாடுகளிலிருந்து கொண்டு இயக்கி வந்தது தெரிய வந்தது.
அடுத்தவர்களிடம் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு வாங்கி, அதன் மூலம் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். போலி ஆவணங்கள் மற்றும் போலி முகவரிகள் மூலம் 111 கம்பெனிகளை திறந்து, அதன் மூலம் வங்கிக் கணக்குகளையும் திறந்துள்ளனர்.
அவர்கள் பயன்படுத்திய 150-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் ரூ.1000 கோடி வெளிநாட்டிலிருந்து வந்துள்ளது. ஒரு வங்கி கணக்கிற்கு மட்டும் மிகவும் குறுகிய காலத்தில் ரூ.152 கோடி வந்திருந்தது. அந்த கம்பெனி சீன பிரஜைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அந்த பணத்தை உடனுக்குடன் அவர்கள் கிரிப்டோகரன்சியாக மாற்றி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தனர். இதில் நான்கு வெளிநாட்டு பிரஜைகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் இருவர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து, நான்கு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 27 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிக அளவில் நடந்து வருகிறது, அதிலும் குற்றவாளிகள் சிக்காமல் தப்பித்து வருகின்றனர்.

















