GST Collection Data | ITC Fall Why? | Vodafone Idea Up - Why? | IPS Finance - 40...
2025 தந்த பாடம், 2026 தரவிருக்கும் வாய்ப்பு... புத்தாண்டில் சீரான முதலீட்டுப் பாதையில் பயணிப்போம்!
2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். புத்தாண்டு என்றாலே பலரும் பலவித சபதங்களை எடுப்போம். கடந்த வருடம் நாம் கற்ற பொருளாதாரப் பாடங்களின் அடிப்படையில், இந்தப் புதிய ஆண்டில் நமது நிதிப்பழக்கங்களை சீர்ப்படுத்திக்கொள்ளும் சபதத்தை எடுத்துக்கொள்ளலாம். அதற்கு, முதலில் நம்மை சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டும்.
நம் நிதி நிலையைப் பலப்படுத்த நாம் செய்யும் விஷயங்கள் என்னென்ன, செய்யாமல் விட்டவை என்னென்ன, நமது சேமிப்பு மற்றும் முதலீடுகளில் எவை லாபம் தந்துள்ளன, எவை நஷ்டத்தில் உள்ளன... இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும். பதில்களின் அடிப்படையில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
‘சம்பளத்தைவிட அதிகமாகச் செலவு செய்கிறேன்’ என்பவர்கள் புதிய ஆண்டில் செலவுகளைக் குறைக்கலாம். ‘கிரெடிட் கார்டில் தேவையில்லாத பொருள்கள் வாங்குகிறேன்’ என்பவர்கள் கிரெடிட் கார்டு செலவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். ‘கடன் வாங்கி சுற்றுலா செல்கிறேன்’ என்பவர்கள் இனி அந்தத் தவறைச் செய்யாமல் இருக்கலாம். ‘இதுவரை காப்பீடு எடுக்கவே இல்லை’ என்று சொல்பவர்கள் இந்த ஆண்டிலாவது காப்பீடு எடுக்கலாம்.
எதிர்பாராத நிகழ்வுகளும், திருப்பங்களும் அதிகமாக நடக்கக்கூடிய காலகட்டத்தில் இருக்கிறோம். நிச்சயமற்ற நிதிச் சூழல்களைச் சமாளிக்க எப்போதுமே நாம் தயாராக இருக்க வேண்டும். எனவே, இதுவரை சேமிப்பு, முதலீடுகளைத் தொடங்காதவர்கள் நிச்சயம் இந்த ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும். ஏற்கெனவே முதலீடுகளைச் செய்பவர்கள், இன்னும் கூடுதல் கவனத்துடன் அவற்றைக் கையாள வேண்டும்.
முடிந்த 2025-ம் ஆண்டு, பொருளாதார ரீதியாக கவனம் குவித்த ஆண்டு. பங்குச் சந்தை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பலர் அதில் நேரடியாகவும், மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாகவும் முதலீடு செய்வது அதிகரித்தது. அந்நிய முதலீடுகள் வெளியேறிய நிலையிலும், 2025-ல் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.67 லட்சம் கோடியிலிருந்து ரூ.81 லட்சம் கோடியாக உயர்ந்தது. இன்னொரு பக்கம், பங்குச் சந்தையை விட தங்கம், வெள்ளி விலையேற்றம் சக்கை போடு போட்டது. பலரும் இந்த உலோகங்களில் முதலீட்டை குவிக்க ஆரம்பித்தார்கள். நிபுணர்கள், ‘தினசரி செய்திகளையும், திடீர் ஏற்றங்களையும் நம்பி, உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு முதலீட்டில் இறங்கிவிட வேண்டாம். ஒருவரது போர்ட்ஃபோலியோ, கலவையாக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்கள்.
புத்தாண்டில், செலவுகளைக் குறைப்பதன் மூலம் கடனைக் குறைப்போம். வருமானத்தை அதிகரிக்கும் வழிகளைத் தேடுவோம். உடனடி லாபத்துக்கு ஆசைப்படாமல், நீண்டகால வளர்ச்சியை அடையும் நோக்கில் முதலீடுகளைத் திட்டமிடுவோம். வங்கிகள், நுகர்வுப் பொருள்கள், தொழில்நுட்பம் போன்ற எதிர்கால வளர்ச்சிக்கான துறைகளில் கவனம் செலுத்தி புதிய முதலீட்டுப் பாதையை வகுத்துக்கொள்வோம். 2026-ம் ஆண்டு வளமாக அமையும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
- ஆசிரியர்
















