`மறுமணம் செய்து கொள்ளுங்கள்'- கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு மகனுடன் 18வது மாடியில...
48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிக்காத வாரன் பஃபெட்: ரகசியம் உடைத்த பில் அக்மேன்!
தினமும் கோக்... கோடிகளில் முதலீடு: வாரன் பஃபெட்டின் விசித்திரப் பழக்கம்!
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவரும் உலகின் தலைசிறந்த முதலீட்டாளருமான வாரன் பஃபெட், கடந்த 48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிப்பதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை பெர்ஷிங் ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பில் அக்மேன் பகிர்ந்துள்ளார். தண்ணீருக்குப் பதிலாகச் செர்ரி கோக் உள்ளிட்ட குளிர்பானங்களையே பஃபெட் பருகி வருகிறார். முதலீட்டு உலகின் பிதாமகனாகப் பார்க்கப்படும் பஃபெட்டின் இந்த விசித்திரப் பழக்கமும், கோகோ கோலா நிறுவனத்துடனான அவரது நீண்டகால பந்தமும் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
தண்ணீருக்கு நோ... கோக்குக்கு எஸ்!
'Equity Mates Investing' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பில் அக்மேன், வாரன் பஃபெட்டுடன் தான் கலந்துகொண்ட தனிப்பட்ட இரவு விருந்து அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அப்போது பஃபெட்டுக்குத் தண்ணீர் பரிமாறப்பட்டபோது, அவர் சாதாரணத் தண்ணீரையும் கார்பனேற்றப்பட்ட தண்ணீரையும் மறுத்துவிட்டு, செர்ரி கோக் கேட்டுப் பெற்றார். மேலும், 48 ஆண்டுகளாகத் தான் தண்ணீரே குடிப்பதில்லை என்று பஃபெட் தன்னிடம் கூறியதாகவும் அக்மேன் குறிப்பிட்டிருந்தார்.
பஃபெட்டுக்குக் குளிர்பானங்கள் மீது இருக்கும் இந்த அதிகப்படியான பிரியம் புதிதல்ல. ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து கேன்கள் வரை கோகோ கோலா பருகுவதாகவும், தனது அன்றாட உணவில் ஜங்க் ஃபுட்களுக்கே முதலிடம் தருவதாகவும் அவரே பல்வேறு நேர்காணல்களில் ஒப்புக்கொண்டுள்ளார்.

பெப்சி டு செர்ரி கோக்!
வாரன் பஃபெட்டின் குளிர்பானப் பயணம் ஆரம்பத்தில் பெப்சியுடன் தான் தொடங்கியது. இளமைப் பருவத்தில் தீவிர பெப்சி ரசிகராக இருந்த அவர், பின்னரே கோகோ கோலாவுக்கு மாறினார்.
1985-ல் கோகோ கோலா நிறுவனத்தின் தலைவராக இருந்த டொனால்ட் கீஃப், பஃபெட்டுக்குச் செர்ரி கோக்கை அறிமுகப்படுத்தினார். பெப்சியில் செர்ரி சிரப் கலந்து குடிக்கும் பழக்கம் பஃபெட்டுக்கு இருந்ததை அறிந்திருந்த டொனால்ட் கீஃப், இந்த புதிய சுவையை அவருக்குப் பரிந்துரைத்தார். செர்ரி கோக்கின் சுவை பிடித்துப்போகவே, பஃபெட் அதற்கு அடிமையானார். அதே ஆண்டில் நடைபெற்ற பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்திலும் செர்ரி கோக் வழங்கப்பட்டது. இதன்மூலம் பஃபெட்டின் தனிப்பட்ட விருப்பம், அவரது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளிலும் இடம்பிடிக்கத் தொடங்கியது.

ஆறு வயதுக் குழந்தையின் உணவு முறை!
'Fortune' இதழுக்கு அளித்த நேர்காணலில், தனது அன்றாட உணவுப் பழக்கம் குறித்துப் பேசிய பஃபெட், தினமும் சுமார் 2,700 கலோரி உணவுகளை எடுத்துக்கொள்வதாகவும், அதில் 25 சதவீதக் கலோரிகள் கோகோ கோலா போன்ற குளிர்பானங்கள் மூலமே கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
அவரது அன்றாட உணவுப் பட்டியலில் மெக்டொனால்ட்ஸ் பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், ஐஸ்கிரீம் போன்றவையே நிறைந்திருக்கின்றன. தனது இந்த உணவு முறையைப் பற்றிக் கேட்கும்போது, "நான் ஒரு ஆறு வயதுக் குழந்தையைப் போல உண்கிறேன்" என்று நகைச்சுவையாகப் பதிலளிப்பார்.
எனினும், பஃபெட்டின் இந்த உணவு முறையை அனைவரும் பின்பற்ற முடியாது. அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களைத் தொடர்ந்து பருகி வருவது உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கோக்கில் கோடிகள்: முதலீட்டுப் பின்னணி
பஃபெட்டின் கோக் விருப்பம் வெறும் சுவையோடு நிற்காமல், அவரது முதலீட்டுப் பயணத்திலும் எதிரொலித்தது. 1988 முதல் 1994 வரையிலான காலகட்டத்தில், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் கோகோ கோலா பங்குகளை வாங்கச் சுமார் 1.3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. பங்குகளின் பிரிப்புக்குப் பிறகு, இது சுமார் 40 கோடி பங்குகளாக உருவெடுத்தது.
உலகளாவிய விற்பனை பிணையம், வலுவான பிராண்ட் மதிப்பு, நுகர்வோரின் பிரிக்க முடியாத பழக்கம் ஆகியவை கோகோ கோலாவின் வணிக பலத்திற்கு முக்கியமான காரணங்கள். இந்த நம்பிக்கையில்தான் பெர்க்ஷயர் ஹாத்வே இன்னமும் கோகோ கோலாவில் தனது முதலீட்டைத் தக்கவைத்துள்ளது.
இருப்பினும், பஃபெட்டின் தனிப்பட்ட விருப்பத்திற்காக மட்டுமே இந்த முதலீடு செய்யப்படவில்லை. ஒரு நிறுவனத்தின் வணிக மாதிரி, வருவாய் ஈட்டும் திறன் மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றை ஆராய்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சீனாவில் கேன்களில் வந்த முகச்சாயல்!
கோகோ கோலா நிறுவனத்துடனான பஃபெட்டின் பிணைப்பு முதலீட்டையும் தாண்டி வணிக விளம்பரமாகவும் மாறியது. 2017-ல் சீனாவில் செர்ரி கோக் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பஃபெட்டின் உருவப்படம் அச்சிடப்பட்ட சிறப்புப் பதிப்பு கேன்களும் பாட்டில்களும் சந்தைக்கு வந்தன.
பஃபெட்டின் இந்த உணவுப் பழக்கம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்ததாக இருந்தாலும், உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலாவுடனான அவரது பிணைப்பை மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசுபொருளாக்கி வருகிறது.
முதலீட்டுச் சந்தையில் நிதானமான, தீர்க்கமான முடிவுகளுக்குப் பெயர் பெற்ற வாரன் பஃபெட்டின் வாழ்க்கையில் செர்ரி கோக்கும் துரித உணவுகளும் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. ஆனால், அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த உணவுப் பழக்கம்தான் காரணம் என்று உடனே முடிவுக்கு வர முடியாது. அது முற்றிலும் அவரது தனிப்பட்ட உடல்வாகு சார்ந்த விருப்பம் மட்டுமே.















