IVF: `சட்டவிரோதமாக பெண்களின் கருமுட்டையை பிரித்தெடுத்த கும்பல்' - 8 பேர் கைது; 4...
கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கதைகள்… சேலம் அருங்காட்சியகத்தில் ஒரு வரலாற்றுப் பயணம்!
சில கற்கள் பேசுவதில்லை. ஆனால், அவற்றைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் ஒரு காலத்தின் கதையைச் சொல்லத் தொடங்கிவிடும்! ஒரு கற்சிற்பத்தின் உருவம், வீரனின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல், கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் எனச் சேலம் அரசு அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அவற்றின் பின்னணியைத் தெரிந்துகொண்டால், சிற்பங்களைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அவை உருவான காலத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
கற்சிற்பத்தின் உருவங்களில் தெரியும் சிற்பக்கலை!
அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிற்பங்களைப் பார்க்கும்போது, வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகள் ஒரே இடத்தில் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்க்கிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கிடைத்த சண்டிகேஸ்வரர் சிற்பம் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதற்குப் பிறகு, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர் சிற்பத்தைச் சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

அதே 12-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பார்சுவநாதர் சிற்பம் நாமக்கல் மாவட்டம், பருத்திப்பள்ளியில் கிடைத்தது. பார்சுவநாதர் சமண சமயத்துடன் தொடர்புடையவர். தெய்வச் சிற்பங்களுடன் இந்தச் சிற்பத்தையும் பார்க்கும்போது, இப்பகுதியில் வெவ்வேறு சமய மரபுகள் இருந்த வரலாற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது.
14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமால் சிற்பம் திருமணிமுத்தாறு பகுதியில் கிடைத்தது. அதே காலகட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி சிற்பம் நாமக்கல் மாவட்டம், கதிராநல்லூரில் கிடைத்தது. வலசையூரில் கிடைத்த தட்சிணாமூர்த்தி, சேலத்தில் கிடைத்த ஆறுமுகன், பெரியசீரகாபாடியில் கிடைத்த சிவலிங்கம் ஆகியவை 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இவற்றுடன், தியாகனூரில் கிடைத்த மலைமகள், பேளூரில் கிடைத்த தேவி போன்ற 16-ம் நூற்றாண்டுச் சிற்பங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர், திருமகள் சிற்பங்களையும், 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன், திருமகள் சிற்பங்களையும் காணலாம். 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அன்னபூரணி, அம்மன், நிலமகள் சிற்பங்களும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

பத்தாம் நூற்றாண்டில் உருவான சிற்பத்துக்கும், அதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உருவான சிற்பத்துக்கும் என்ன வேறுபாடு? இங்கு இடம்பெற்றுள்ள சிற்பங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெவ்வேறு காலகட்டங்களில் பின்பற்றப்பட்ட கலை வடிவங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
வீரர்களின் நினைவுகளைச் சுமக்கும் நடுகற்கள்!
கற்சிற்பங்களிலிருந்து நடுகற்களுக்குச் செல்லும்போது, இங்குள்ள கற்கள் சொல்லும் வரலாறு வேறொரு திசையில் பயணிக்கிறது. இவை வழிபாட்டுக்காக உருவாக்கப்பட்டவை மட்டுமல்ல; வீரர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் அடையாளங்களும்கூட.
சேலத்தில் கிடைத்த வீரக்கல் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நாமக்கல் மாவட்டம், ரெட்டிப்பட்டியில் கிடைத்த வீரக்கல் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்தகைய நடுகற்கள், அக்காலத்தில் வீரர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் மரபு இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கிடைத்த 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் மற்றொரு குறிப்பிடத்தக்க சான்று. இதில் அந்தக கார்கண்டன் என்ற வீரரைப் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. ஒரு வீரரின் பெயரும் அவருடன் தொடர்புடைய நிகழ்வும் கல்லில் பதிவு செய்யப்பட்டிருப்பது, நடுகற்கள் வரலாற்றை அறிந்துகொள்ள எவ்வளவு உதவுகின்றன என்பதை உணர்த்துகிறது.
திருச்செங்கோட்டில் கிடைத்த குதிரை மீது அமர்ந்த வீரனின் சிற்பமும் இங்கு இடம்பெற்றுள்ளது. அதேபோல், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் கிடைத்த புலிக்குத்திப்பட்டான் கல் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. புலியை ஈட்டியால் தாக்கும் வீரனின் உருவம் அதில் செதுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் கிடைத்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏறுதழுவுதல் நடுகல் மற்றொரு சுவாரஸ்யமான சான்று. கருமந்துறையில் நடைபெற்ற ஏறுதழுவுதலில் உயிரிழந்த கோவூரைச் சேர்ந்த கங்கன் என்ற வீரரைப் பற்றிய செய்தி இதில் பொறிக்கப்பட்டுள்ளது.
ஏறுதழுவுதலில் உயிரிழந்த ஒரு வீரரின் பெயரும் நினைவும் பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் ஒரு கல் வழியாக நம்மை வந்தடைகின்றன. இதுபோன்ற நடுகற்கள், அக்கால மக்களின் வாழ்க்கையையும் வீர விளையாட்டுகளுடன் அவர்களுக்கு இருந்த தொடர்பையும் புரிந்துகொள்ள உதவுகின்றன.
கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துகளும் குறியீடுகளும்!
சிற்பங்களும் நடுகற்களும் உருவங்களின் வழியாக வரலாற்றைச் சொன்னால், கல்வெட்டுகள் எழுத்துகளின் வழியாகச் செய்திகளைப் பாதுகாக்கின்றன.
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலக் கல்வெட்டும், சேலம் மாவட்டம், நத்தமேட்டில் கிடைத்த 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவை என்பதால், அக்கால எழுத்துப் பயன்பாடு மற்றும் காலத்தைக் குறிப்பிடும் முறைகள் குறித்து அறிந்துகொள்ள உதவுகின்றன.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், பழங்காலத்தில் தூரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட கல். அதில் இடம்பெற்றுள்ள ‘க’ என்ற குறியீடு ‘ஒன்று’ என்பதைக் குறிக்கிறது. மைல் கல்லாகப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கல், பயண வழிகளையும் தூரத்தையும் குறிப்பிடுவதற்கு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட முறைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
இன்று நாம் பயணத்தின்போது தூரத்தைக் கணக்கிடப் பல நவீன முறைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கற்களும் குறியீடுகளும் அன்றைய மக்களின் பயண முறைகள் மற்றும் அளவீடுகள் பற்றிய தகவல்களை நமக்குத் தருகின்றன.

இவ்வாறு பல நூற்றாண்டுகளின் வரலாற்றுச் செய்திகளைத் தாங்கி நிற்கும் கல்வெட்டுகள், தூண் கல்வெட்டுகள் உள்ளிட்ட கல்வெட்டுச் சான்றுகளும் இங்கு பாதுகாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மன்னர்களும் அவர்களது மனைவியரும்!
அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள மன்னர்கள் மற்றும் அவர்களது மனைவியரின் சிற்பங்கள் மற்றொரு வகையான வரலாற்று நினைவுகளை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.
15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வணங்காமுடி மற்றும் அவரது மனைவியின் சிற்பம் சேலம் மாவட்டம், அமரகுந்தியில் கிடைத்தது. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த லட்சுமண நாயக்கர் மற்றும் அவரது மனைவியின் சிற்பம் பேளூரில் கிடைத்தது. சின்னப்ப நாயக்கர் மற்றும் அவரது மனைவியின் சிற்பம் குறிச்சியிலும், ராமச்சந்திர நாயக்கர் மற்றும் அவரது மனைவியின் சிற்பம் வாழவந்தியிலும் கிடைத்தன. அமரகுந்தியில் கிடைத்த சிலைக்கட்டி மற்றும் அவரது மனைவியின் சிற்பமும் இதே நூற்றாண்டைச் சேர்ந்தது.

மன்னர்களைப் பற்றிய வரலாற்றை நாம் பெரும்பாலும் அவர்களது ஆட்சி, போர்கள், வெற்றிகள் வழியாகவே அறிந்திருக்கிறோம். ஆனால், அவர்களையும் அவர்களது மனைவியரையும் இணைத்து வடிக்கப்பட்ட சிற்பங்கள், அக்காலத்தில் பின்பற்றப்பட்ட உருவ அமைப்புகளையும் சிற்பக்கலை மரபுகளையும் அறிந்துகொள்ள உதவுகின்றன.
ஒரு சிற்பத்தைப் பார்ப்பது என்பது அதன் உருவத்தை மட்டும் பார்ப்பதல்ல; அது எந்தக் காலத்தைச் சேர்ந்தது, எங்கு கிடைத்தது, எதற்காக உருவாக்கப்பட்டது என்பதையும் தெரிந்துகொள்வதுதான். தெய்வச் சிற்பங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள், மன்னர்களின் உருவங்கள் எனச் சேலம் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் இந்த வரலாற்றுச் சான்றுகள், நமது கடந்த காலத்தை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.


















