'அவதூறு, உண்மைக்குப் புறம்பானவை; என் ராஜினாமாவின் ஒரே நோக்கம்.!'- மீண்டும் எல்.ம...
பாசனக் கால்வாய்; மேட்டூர் நீர் மின் நிலையத் திட்டம் | மேட்டூர் அணை ஓசை 42
மேட்டூர் திட்டத்தில் இறுதியாக முடிவெடுத்த படி, நீர்ப்பாசனத்திற்கான கீழ் மட்ட மதகுகள் ஐந்து எண்ணிக்கையிலும், மேல் மட்ட மதகுகள் 8 எண்ணிக்கையிலும் அணையில் அமைக்கப்பட்டுள்ளன. 5 கீழ்மட்ட மதகுகள் அணையின் நீளத்தில் அளவுக்கு சரி பாதி தூரத்தில் அமைக்கப்பட்டு, அதிலிருந்து வெளியேற்றப்படும் நீர், கால்வாய் மூலம் ஒரு அரை வட்ட வளைவான பாதையில் திரும்பி, அணைக்கு வெளியே அமைந்துள்ள “அணை முனியப்பன் கோவில்” பீடத்தை தொட்டபடி, காவிரி ஆற்றில் சென்று கலக்கிறது.
மேல்மட்ட மதகுகள் 8 எண்ணிக்கையிலிருந்து, வெளியேறும் நீர் பாசனத்திற்கென்று தனியாக வெட்டப்பட்ட கால்வாய் வழியாக மேட்டூரில் மேற்கு திசையில் அமைந்துள்ள பாலமலை அடிவாரத்தில் ஓரமாக ஓடிச் சென்று "காவேரி கிராஸ்" என்ற இடத்தில் இரண்டாகப் பிரிந்து, ஒரு கால்வாய் நேராக தெற்கு நோக்கியும், மற்றொன்று காவிரி ஆற்றை குறுக்காக குழாய் வழியாக கடந்து சென்று வனவாசி மலை ஓரமாக வெட்டப்பட்ட கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு பாயும். இது தற்போதைய நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஊரின் ஊடாக சென்று சில ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை அளிக்கிறது.
கீழ் மட்ட கால்வாய் மதகுகள் ஐந்தும் 7 அடி அகலமும் 14 அடி ஆழமும் கொண்டது. இதிலிருந்து வெளியேறும் நீரின் வேகம் ஒரு விநாடிக்கு 60 அடி. மேல்மட்ட கால்வாய் மதகுகள் 10 அடி அகலமும் 16 அடி ஆழமும் கொண்டது. இந்த மதகுகள் தேவைப்படும்போது வெள்ள காலத்தில் 48 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றும் திறன் கொண்டது. மேல்மட்ட மதகுகள் வழியாக வெளியேறும் நீர் செல்லும் இடம் மிகவும் எழில் கொஞ்சும் அருமையான இடமாகும். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் டெல்டா மாவட்டங்களுக்கு தமிழக முதல்வர் அல்லது அமைச்சர்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது இந்த மேல் மட்ட மதகுகளை தான். அணையின் மேல் பகுதியில் இருந்து நீர் திறந்து விடும் நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகளில் கண்டிருப்பார்கள். தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த உயிர் ஆதார நுழைவாயில் இது என்றால் மிகையில்லை!

குறைந்த அளவு சாய்மானத்தில் அமைந்த இடமாக இது அமைந்துள்ளது. 100 அடி நீளத்துக்கு கற்பாறைகள் அமைந்த பகுதி இது. வெளியேறும் நீர் இந்த பாறைகளின் வழியாகச் செல்லும் போது வேகம் மட்டுப்படுத்தப்பட்டு, எதிர்வரும் காலங்களிலும் எந்தவித பயமின்றி இருக்கக்கூடிய இடமாக அமைந்தது. நீரின் வேகத்தை குறைத்து மட்டுப்படுத்த வேறு எந்த அமைப்பும் இங்கு தேவைப்படவில்லை. இந்த கால்வாய் செல்லும் இரு கரைகளிலும் கட்டி எழுப்பப்பட்ட ஆழமான சுவர்கள் மிகுந்த பாதுகாப்பை அளிக்கும் வல்லமை பெற்றதாக அமைந்துள்ளது.
ஆற்றின்-அணையின் வலது புறத்தில் அமைந்துள்ள இந்த உயர்மட்ட மதகுகள் வழியாக மேட்டூர் நகரின் மேற்கு பகுதி ஓரமாக ஊரின் ஊடாகச் சென்று, மேட்டூர்-பவானி சாலையில் அமைந்துள்ள காவேரி கிராஸ் என்ற இடத்தில் குழாய்கள் வழியாக முழுவதுமாக கிழக்கு திசையில் காவிரி ஆற்றை கடக்கிறது இந்தக் கால்வாய். இதன் ஒரு பகுதி நீர் தொடர்ந்து தெற்கு நோக்கி பயணித்து ஈரோடு, அந்தியூர் பகுதியில் உள்ள நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இதனால் அங்கு 40 கி.மீ நீளத்துக்கு இது பாய்ந்து அங்குள்ள நிலங்கள் பயன்பெறுகின்றன.
ஏற்கனவே குறிப்பிட்ட கிழக்கு திசை நோக்கி ஆற்றைக் கடக்கும் இடதுபுற கால்வாய் மேற்கிலிருந்து கிழக்காக புவியீர்ப்பு விசையின் மூலமாகவே ஆற்றைக் கடக்கும் அமைப்பை பெற்றிருப்பது இதன் சிறப்பம்சம். இதன் மூலம் விநாடிக்கு சுமார் 1000 கன அடி நீர் வெளியேற்ற இயலும். 45,000 ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் ஒட்டு மொத்தமாக பயன்பெறுவது இந்த அமைப்பின் சிறப்பு! 28,000 ஏக்கர் நிலங்கள் இன்றைய சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலும், 17,000 ஏக்கர் நிலங்கள் முன்பு குறிப்பிட்ட ஈரோடு மற்றும் அந்தியூர் பகுதி நிலங்களும் பயன்பெறுகின்றன.

மேட்டூர் அணை கட்டப்பட்ட போது கீழ் மட்ட கால்வாய் மதகுகள் அமைப்பு 1931 மே மாதம் துவங்கி 1932 ஆகஸ்ட் மாதம் கட்டி முடிக்கப் பட்டது. மேல் மட்ட கால்வாய் மதகுகள் 1932 ஜூலை மாதம் தொடங்கி 1933 செப்டம்பர் மாதம் நிறைவு பெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 137 நாட்கள் தொடர்ந்து இந்த கால்வாய்களின் மூலம் நீர் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும். இந்த கால்வாய்கள் தொடர்ந்து 70 வருடங்களாக பயன் தந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் செழிப்பாக இருக்க இந்த பாசனத்திட்டம் வழி வகுக்கிறது. இந்த கால்வாய் திட்டம் பிரிட்டிஷ் காலத்தில் துவக்கப்பட்டாலும், 1955-ல் காமராஜர் காலத்தில் முழுமை பெற்று இன்றளவும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பயன் அளித்து வருவது சிறப்பு!
சுமார் 46 வருடங்களுக்கு முன்பு, இந்த மேற்குக் கரை கால்வாய் பராமரிப்பு பணியில் பணிபுரிந்த குமாரபாளையத்தை சேர்ந்த பொறியாளர் P.செந்தில், தன்னுடைய ஆரம்ப கால பணி குறித்தும், கால்வாய்களின் சிறப்பு குறித்தும் நம்மிடையே பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு இந்தத் தொடர் எழுதும் போது சிவில் பொறியியல் குறித்த பல்வேறு சந்தேகளுக்கு விளக்கம் அளித்து உறுதுணையாக இருந்தார் என்பதையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். இவர் எனது கல்லூரி கால நண்பர் என்பது கூடுதல் சிறப்பு!
மேட்டூர் நீர் மின்சக்தி திட்டம், மெட்ராஸ் மாகாணத்தின் படிப்படியான மின்மயமாக்கல் மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள முற்போக்கான நாடுகளில் அமைந்திருப்பது போன்ற மலிவு விலையில் மின்சார வசதிகளை வழங்குவதற்கான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த தேசியத் திட்டம் அப்போது கீழ்கண்ட 9 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. மேட்டூர், பைக்காரா, விசாகப்பட்டினம், மெட்ராஸ், பாபநாசம், ரிஷ்வாடா, அனந்தபூர், பெரியார், லம்மசிங்கி போன்றவை அவை! மேட்டூர் மின் பகுதி மேட்டூர் நீர் மின் அமைப்பின் கட்டுமானத்தின் மூலம் தொடங்கப்பட்டது. சில மின்சாரப் பகுதிகள் இணைந்து செயல்படும். இதனால், ஒவ்வொரு உற்பத்தி ஆலையும் சிறந்த சாதகமாக இயக்கப்படும் வாய்ப்பை பெற்றதாக அமையப் பெற்றது.
மேட்டூர் அணை உலகின் மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்றாகும். இந்த அணை மொத்தம் 176 அடி உயரம் கொண்டது. மேலும் அணையில் 93,500 கன அடி நீர் சேமித்து வைக்க இயலும். இந்த சேமிப்பு, நீர்ப்பாசனத்தை முதன்மையான நோக்கம் எனக்கருதி செயல்படும். அதேசமயம், நீர்ப்பாசனத்திற்கென திறந்து விடப்படும் நீர் மூலமாக, மின்சார உற்பத்தியை ஏற்படுத்தி அதன் மூலம் பலனளிக்கக் கூடிய திட்டமாகும்.

அணை கட்டும்போது, 8.5 அடி விட்டம் கொண்ட 4 குழாய்கள் அணை கட்டமைப்பின் உள்ளே பொருத்தப்பட்டு தேவையான வால்வுகள், கதவுகள், ஸ்கிரீன் மற்றும் இதர அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த குழாய்களின் பயன்பாடு என்பது கட்டுமான காலத்தில் நீர்த்தேக்கத்தின் பின் பகுதியில் இருந்து உபரியாக வரும் நீர் வழிந்து ஓடவும், அணை கட்டுமானம் முடிந்த பிறகு மின் உற்பத்திக்கு பயன்படுத்திக் கொள்ளவும் வடிவமைக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு மட்டும் 10,80,000 ரூபாய் மொத்தமாக செலவானது.
பொருத்தப்பட்ட ஒவ்வொரு குழாய் வழியாகவும் 1250 கன அடி தண்ணீர், மின்சார உற்பத்திக்கான வெளியேறும் அமைப்பு கொண்டது. பாசன வசதிக்காக தண்ணீர் மூடப்படும் காலங்களில் இந்த 4 குழாய்கள் வழியாக தண்ணீர் தொடர்ந்து வெளியேறி, மின்சார உற்பத்தி நடைபெறும் வகையில் இதற்கான பயிர் பருவத்தை முடிவெடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது.
19000 HP மின்சார உற்பத்தி இங்கு சாத்தியமாயிற்று! இங்கு மின் நிலையம் 317 அடி நீளம், 46 அடி அகலமும் கொண்ட கட்டிடத்தில் இயங்கியது. வெளிப்புறத்தில் அமையும் மின்மாற்றி, (Transformer) பைக்காரா நிலையத்தில் உள்ளது போலவே அமைக்கப்பட்டது. மின்சாரம் ஸ்டீல் டவர் மூலம் மேட்டூர் - மெட்ராஸ் மின் பரிமாற்ற அமைப்புடன் இணைக்கப்பட்டது. பைக்காரா அமைப்புடன் இணைந்த இரட்டை பகிர்மானம், மேட்டூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே இணையாக அமைக்கப்பட்டு அவை திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு மின்சாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதற்காக ஈரோட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த மின் திட்டம் குறித்து, மெட்ராஸ் மாகாணம் முழுவதும், இதன் பரிமாற்ற அமைப்புகள் குறித்த பல்வேறு அம்சங்களை பற்றி பல தரவுகள் உள்ளன.
ஆனால், நாம் மேட்டூர் அணை குறித்த விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அது குறித்து அவற்றை இந்நூலில் முழுமையாக பகிர்வதை நோக்கமாகக் கொண்டதால், மின் திட்ட விவரங்களில் மிகவும் முக்கிய தகவல்கள் மட்டுமே இங்கு பகிரப்பட்டுள்ளன.

மேலும், மெட்ராஸ் மின் கட்டமைப்பு கடந்த பல தசாப்தங்களில் பல்வேறு மாற்றங்களை, கூடுதல் இணைப்புகள் (UPDATE) போன்றவற்றை சந்தித்ததால், 1936 -ல் இது குறித்த தகவல்கள், இந்த மின் திட்டத்தை பொறுத்தவரை இப்போது சில பொருத்தமற்றதாகவும், போதுமானதாக இல்லாமலும் அமையக்கூடும்.
இந்தத் திட்டத்தால் பலன் அடைந்த மாவட்டங்கள் வட மற்றும் தென் ஆற்காடு, சித்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், செங்கல்பட்டு மற்றும் மெட்ராஸ். இந்த மின் திட்டத்தின் அடிப்படையில் விவசாய நிலங்களுக்கு பம்பு மோட்டார் இயங்க மின் இணைப்பு, நிலத்தடி நீர் இறைக்க இணைப்பு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேட்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைப்பதின் உறுதித் தன்மையால் பல்வேறு வகையான சிறப்பு தொழிற்சாலைகள் தொடங்க திட்டங்கள் தீட்டப்பட்டது.
இந்த மேட்டூர் நீர் மின் திட்டம் பல தொழில் முனைவோர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியிலும் மிகவும் சிறப்புற்று விளங்கியது. இந்த மின் திட்டத்தின் இயந்திரங்கள் மற்றும் பகிர்மான கட்டமைப்பு குறித்த வேலைகள் 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. முழுமையடைந்து ஜூலை 1935 க்குள் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மின் பகிர்மான கட்டமைப்பில் பயனுறும் சில உதிரி பாகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் பயன்படுத்தத்தக்க உபகரணங்கள் மேட்டூர் பணிமனையில் தயாரிக்கப்பட்டது என்பது இன்னும் கூடுதல் சிறப்பு!
இந்த அத்தியாயம் மிகுந்த முக்கியமானது.
திட்ட மதிப்பீட்டில் தேவையான நிலம் கையகப்படுத்தி அதன் அளவு மதிப்பிடப்பட்டு மக்களுக்கு ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, நீர்த்தேக்கத்தின் நீர் பரப்பின் எல்லை நிர்ணயம், திட்டத்தின் ஆரம்பத் திட்டமிடுதலின் போதே மேற்கொள்ளப்பட்டது.
மைசூர் - மெட்ராஸ் நடுவர் மன்ற வழக்கின் விளைவாக, நீர்த்தேக்கத்தில் அதிக கொள்ளளவு அனுமதித்ததன் விளைவாகவும், 1924 -ல் ஏற்பட்ட அசாதாரண வெள்ளம் காரணமாக, அணை அமைய வேண்டிய இடத்திலிருந்து வேறு இடத்தை தேர்வு செய்ததன் விளைவாகவும், + 785 அடி MSL என்ற அளவில் இருந்து + 790 அடி MSL என்ற அளவு குறிக்கப்பட்டது.
இந்த நீர்மட்ட உயர்வு ஏற்பட்ட காரணத்தால் அணை முழு கொள்ளளவை எட்டும் போது நீரில் மூழ்கக்கூடிய வாய்ப்புள்ள பகுதியின் வரம்புகள் மற்றும் கையகப்படுத்தப்பட வேண்டிய கூடுதல் நிலங்களை நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு எல்லை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவையும் எழுந்தது.

முழு நீர்த்தேக்க மட்டத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்காக ஒரு உதவி பொறியாளர் நான்கு சர்வேயர்கள் மற்றும் 14 ‘லஸ்கர்ஸ்’ எனப்படும் உதவியாளர்கள் கொண்ட சிறப்பு உட்பிரிவு, எட்டு மாத காலத்திற்கு அரசால் அனுமதிக்கப்பட்டது.
மேலும், இதே காலத்தில் உதவி பொறியாளருக்கு உதவ மூன்று பியூன்கள் மற்றும் ஒரு கிளார்க் ஆகியோரும் அனுமதிக்கப்பட்டனர். இந்த முழு நீர்த்தேக்கத்தின் மட்டத்தை வரையறுக்கும் பணி மிக முக்கியமானதாக கருதப்பட்டதால், இரண்டு சர்வேயர்களுக்கு பதிலாக இரண்டு சூப்பர்வைசர்கள் நியமிக்கப்பட்டனர். தற்காலிகமாக இந்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படியே ஆட்கள் பணியில் சேர்ந்தனர்.
உதவிப் பொறியாளர் 1927 -ம் ஆண்டு பிப்ரவரி 2 -ம் தேதி பொறுப்பேற்ற போது, துணைப் பிரிவு உருவாக்கப்பட்டது. இரண்டு சர்வேயர்களில் ஒருவர் பிப்ரவரி மாதம் மத்தியிலும், மற்றொருவர் ஏப்ரல் மாதத்திலும் வேலையில் இணைந்தனர். ஒரு கண்காணிப்பாளர் ஜூன் 8-ம் தேதி 1927 -ம் ஆண்டில் மற்றொருவர் அதே ஆண்டில் ஆகஸ்ட் 10 -ம் தேதியும் அணியில் சேர்ந்தனர்.
இந்த தாமதம் காரணமாக இந்த உட்பிரிவு மேலும் 6 மாத கால நீட்டிப்புக்கு அரசு அனுமதித்தது. அதாவது இதன் ஆயுள் ஏப்ரல் 2 -ம் தேதி, 1928 வரை என்று நிர்ணயித்த போதும், முழு வெளி வேலைகளும் 1927 டிசம்பர் 21 -ம் தேதி முடிவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கண்காணிப்பாளரும் இரண்டு சர்வேயர்களும் இந்த வேலை முடிந்த அன்றே பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அலுவலக வேலை மற்றும் நீர் பரவி நிற்கும் வரைபட பகுதி போன்ற வேலைகள் முடிவடைந்து, 1928 ஜனவரி 26 -ம் தேதி அன்று அந்த உட்பிரிவு கலைக்கப்பட்டது. அதாவது, இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்த பணி நிறைவடைந்து விட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பணியாளர்களின் திறனை இது எடுத்துக் காட்டுகிறது.
திட்ட தலைமை பணிகளின் விரிவான கணக்கெடுப்பு மற்றும் வடிவமைப்பு இந்திய அரசாங்க "சர்வே" குழுவினரால் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டது. இவர்கள் குறித்த அளவுகள் "கிரானைட்" கற்களில் பதிக்கப்பட்டு அவை கான்கிரீட் மூலம் நிலங்களில் பதிக்கப்பட்டது.

இந்த மதிப்புமிக்க வேலைகளுக்கு முன்னதாக பல வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக திட்ட அறிக்கை தயார் செய்த 'கர்னல் எல்லீஸ்' அவர்களின் தலைமையிலான குழுவின் அளவுகளுக்கும், புதிய குழுவின் அறிக்கைக்கும் சிறிய வேறுபாடு தெரிந்தது. இரண்டும் ஒத்துப் போகவில்லை. அதாவது அளவில் வேறுபாடு தெரிந்தது (MIS MATCHING). இரண்டு குழுக்களின் தரவும் MSL என்ற MEAN SEA LEVEL, அதாவது கடல் மட்ட அளவை அடிப்படையாகக் கொண்டது.
மேட்டூருக்கு அருகில் உள்ள G.T.S எனப்படும் குறியீடு ஈரோடு ரயில் நிலையம் ஆகும். இது ஏற்கனவே குறிக்கப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ இடமாகும். அங்கிருந்து அளவுகளை மேற்கண்ட இரு குழுக்கள் எடுத்த அளவுகளோடு ஒப்பிட்டு பார்த்து எது நம்பகத்தன்மை அதிகமாக பொருந்துகிறது என்று கண்டறிவது விரும்பத்தக்கதாக கருதப்பட்டது. எனவே எல்லை நிர்ணயம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
ஒரு “ஆபீசர்” உபகரணங்களுடன் ஈரோட்டில் இருந்து மேட்டூர் வரை சுமார் 37 மைல்கள் சமநிலை மட்டத்தை அளந்து தரவுகளை குறித்துக் கொண்டு வந்தார். அதே சமயம், வேறு ஒரு “சர்வேயர்” அதே போல் அதே இடங்களை வேறு ஒரு உபகரணத்துடன் அளந்து குறித்துக் கொண்டு வந்தார். அதாவது ஒரே சமயத்தில், ஒரே இடத்தில், இருவரும் தனித்தனியாக அளந்து தங்கள் குறிப்புகளை தனித்தனியாக பதிய வைத்து வந்தனர். இதே போல மேட்டூரில் இருந்து நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட இடங்களை அளந்து அளவு கற்கள் நடப்பட்டன. நடப்பட்ட கற்கள் அனைத்துக்கும் வெள்ளை சாயம் பூசப்பட்டது. எளிதில் அடையாளம் கண்டு கொள்ள இப்படி செய்யப்பட்டது. கிடைத்த தரவுகளை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது "கர்னல் எல்லீஸ்" குழு அளந்து குறித்த "அளவு கல்" இந்திய அரசு சர்வே குழுவின் அளவைவிட மிகவும் நெருங்கி வந்தது உணரப்பட்டது. அதாவது "கர்னல் எல்லீஸ்" குறித்து வைத்த அளவுகள் ஏறக்குறைய பொருந்தியது எனலாம்.
பொதுப்பணித்துறை குறித்து வைத்திருந்த அணையின் அருகாமையில் அமைந்திருந்த "அளவு கல்" எண் 27ல் M.S.L. + 659.48 அடி என்றிருந்தது.
"கர்னல் எல்லீஸ்" குழு அளவு இதிலிருந்து 0.74 அடி மட்டுமே குறைவாக இருந்ததை பதிவு செய்திருந்தது. எனவே இதையே அடிப்படை அளவாக எடுத்துக் கொண்டு அணை கட்ட மற்றும் அனைத்து வேலைகளுக்கும் அடிப்படை “குறிப்பாக” கருதப்பட்டது.
எனவே, நீர் தேங்கி நிற்கும் எல்லையை வரையறை செய்ய எல்லைக் கோடு இந்த அளவை வைத்து குறிக்கப்பட்டது. + 790 அடி M.S.L என்ற அளவு நிர்ணயித்து குறிக்கப்பட்டது.
எல்லைக்கோட்டை வரையறை செய்து கொண்டு வர மூன்று பேர் கொண்ட குழுவாக செயல்பட்டனர். ஏற்கனவே கிராம வரைபடம், ஈரோடு M.S.L மற்றும் +790 அடி என்ற உயர்ந்த பட்ச நீரின் தேக்கம் போன்ற அளவுகளை வைத்து, கிராம வரைபடங்களில் எல்லைக் கோடுகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன.
மிகத் துல்லியமாக இந்த பணிகள் நடந்தேறியது என்றே கூற வேண்டும். இதனால் நீரில் மூழ்கக் கூடிய கிராமங்களின் நிலங்கள், அதன் வரைபடங்கள் இவற்றை நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளுக்கு அளித்து அவர்கள் வேலையை துரிதப்படுத்த முடிந்தது. நீர்த்தேக்கத்தில் நீர் முழுதும் நிரம்பிய நிலையில் சில "ரிசர்வ் ஃபாரஸ்ட்" காடுகள் உள்ள இடங்களில் எல்லை கோடுகள் வந்தன. அதுவும் குறிப்பாக ஒகேனக்கல் அருவியில் இருந்து பாலாறு, காவிரியுடன் கலக்கும் இடம் வரை உண்டான 14 மைல் நீளமான, அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. இந்த அடர்ந்த காடுகளை வெட்டி சீர்படுத்துவது மிக மிக கடினம். அதே சமயத்தில் நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவு நீர் நிரம்பி நின்றால் இந்த காட்டுப் பகுதியில் விவசாயிகள் எவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் சூழ்நிலை அங்கு நிலவவில்லை. ஏனெனில், அந்த இடம் முழுவதும் அடர்ந்த காடுகளாகவே இருந்தன.
தனியார் நிலங்கள் ஏதுமில்லை. எனவே அந்த இடங்களில் ஓரளவு கணிப்பு செய்து வரைபடத்தில் குறிக்கப்பட்டது. இறுதியில் அணைப்பகுதியில் இருந்து ஒகேனக்கல் அருவி வரை நீர் நிரம்பி நிற்கும் இடங்கள் குறித்த குறிப்புகளுடன் முழு வரைபடம் தயாரானது. நீர் தேங்கி நிற்கும் முழு நிலப்பரப்பு 59.25 சதுர மைல்கள் என கணக்கிடப்பட்டு அதில் குறிக்கப்பட்டது.
இந்த சமயத்தில் சில விடயங்களை கண்ணுறுவது பொருத்தமாக இருக்கும். பொதுவாக, வெளியிடங்களில் வேலை செய்வது என்பது மிகவும் கடினமான பணி என்பது அனைவரும் அறிந்ததே! சுகாதாரம் இல்லாத கடின நாட்டுப்புறங்கள் மற்றும் இணைந்த காட்டுப்பகுதிகள் போன்ற பல இடங்கள் அங்கிருந்தன. வேலை செய்யும் இடத்துக்கு அருகாமையில் சுகாதாரமான "கேம்ப்" போட நிகழ்விடங்கள் இல்லை. அங்கு செல்ல ஒழுங்கான சாலைகளோ, வண்டித்தடங்களோ ஏன் நடந்து செல்லக் கூட வழியில்லாத பல இடங்கள் இருந்தன. விலங்குகள் மற்றும் பலவித ஆபத்துகளும் எதிகொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவியது. இது போன்ற இடங்களில் தான் மேற்கண்ட நபர்கள் தங்கள் வேலையை செய்தாக வேண்டும் என்ற நிலை இருந்தது.
வேலை செய்யும் இடங்களுக்கு அளக்கும் கருவிகளை எடுத்துச் செல்ல எந்தவித வண்டி வாகனங்களும் செல்ல முடியாத அளவுக்கு இடங்கள் காட்டுப் பகுதியில் அமைந்திருந்தது. அந்த இடங்களுக்கு கருவிகளை கைகளால் தூக்கிச் சென்று இந்த அளக்கும் வேலையை அந்தப் பணியாளர்கள் செய்து முடித்தனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் தங்கி இருந்த "டெண்டுகளில்" (TENTS) இருந்து வேலை செய்யும் இடத்துக்கு சாதாரணமாக குறைந்தது சுமார் மூன்றிலிருந்து எட்டு மைல் தொலைவு இருந்தது. நடந்தே சென்று வர வேண்டும் என்பதே ஒரே வழி!
எருமானூர், நாகமரை போன்ற குக்கிராமங்கள் மற்றும் தொப்பையாறு பள்ளத்தாக்குகள் செட்டிப்பட்டி, காவேரிபுரம் போன்ற குக்கிராமங்களில் வேலை செய்தது மிகவும் பிரமாண்டமான கடினமான பணியாகும். இவற்றை வெற்றிகரமாக எதிர் கொண்டு முடித்த இந்தக் குழுவின் எந்த ஒரு அங்கத்தினரும் அப்போது மோசமாக உடல் நலம் பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமான செய்தியாகும். காரணம், துடிப்பு மிகுந்த ஆற்றல் மிக்க, ஆரோக்கியமான இளைஞர் பட்டாளம் தான் இதை செய்து முடித்தது. பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் இவர்கள். குறிப்பாக தமிழ்ச் சமூகம் மற்றும் இந்நாட்டு மக்கள் இவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளனர். இவர்களுக்கு நம்மால் ஆனது- ஒரு சல்யூட் வைப்போம். நன்றி தோழர்களே!
1930 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும், நீண்ட தூரத்திற்கு அனுப்புவதிலும் பெறப்பட்ட செயல்திறன் தொழில்துறைக்கு ஊக்கமளித்தது. எனினும், மலிவு விலை மின்சாரம் மற்றும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது புதிய தொழிற்சாலை அமைவதற்கு முக்கிய காரணிகள். மேட்டூர் இத்தகைய வசதிகளை ஏற்படுத்தித் தந்தது. தொழில் துறை நோக்கங்களுக்காக போதுமான தண்ணீர் கிடைப்பது, பருத்தி மற்றும் நிலக்கடலை விளையும் பகுதிகளுக்கு அருகாமையில் இருப்பது, நல்ல தகவல் தொடர்பு மற்றும் போதுமான உழைப்பு வழங்க நல்ல தொழிலாளர்கள் கிடைப்பது போன்ற வசதிகளை அப்போது மேட்டூர் தன்னகத்தில் கொண்டிருந்தது.
மேட்டூர் அணை கட்டிய போது தொழிலாளர்களின் செயல்திறன் மற்றும் அவர்களின் உழைப்பு பெரும் பாராட்டுதல்களை பெற்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவையனைத்தும் மேட்டூர் ஒரு தொழில்துறை மையமாக மாறுவதற்கு உண்டான தேவைகளை பூர்த்தி செய்தது என்ற உறுதி ஏற்பட்டது! இங்கு நிலவும் தட்பவெப்ப நிலை, அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் காரணமாக காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்றவை ஜவுளி ஆலைகளுக்கு உகந்ததாக உணரப்பட்டது. இந்த சமயத்தில் இது போன்ற பல நிறுவனங்களிடமிருந்து இங்கு தொழில் தொடங்க விசாரணைகள் வர ஆரம்பித்தன.

மேட்டூர் டவுன்ஷிப்பில் ஏராளமான புதுப்பித்த தங்குமிடங்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்குமிடங்கள் வேலை செய்யத் தொழிலாளர்கள் என அனைத்து வசதிகளும் எளிதாக கிடைக்கும் வண்ணம் சூழ்நிலை நிலவியது. இப்பகுதியில் உள்ள சரளை நிலம் தொழிற்சாலை அமைக்க, கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏற்ற இடமாக விளங்கியது.
மேட்டூர் அணையின் அருகாமையில் உள்ள மலைகளில் உள்ள மூங்கில் காடுகளில் விளைந்திருந்த மூங்கில்களை, மேட்டூருக்கு கொண்டு செல்வதற்கான மலிவான நீர் போக்குவரத்து வசதிகள் அந்த இடத்தில் மரக்கூழ் மற்றும் காகித தொழிற்சாலைகள் அமைக்க வாய்ப்பு அளிக்கும் என்று நம்பப்பட்டது. குறைந்த விலையில் மின்சாரம் கிடைத்தவுடன் ரசாயன ஆலைகள் நிறுவுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கிடைக்கும் இரும்பு தாதுக்களை உருக்கும் தொழிற்சாலைகளும் தேவை ஏற்படலாம் என்ற நிலை. இந்த மாவட்டத்தில் கிடைக்கும் இரும்பு தாதுக்கள் மிகவும் தரம் வாய்ந்தவையாக இருந்தன. இவற்றைப் பிரித்து எடுப்பதற்கான மலிவான எரிபொருள், மலிவான மின்சாரம் கிடைப்பது போன்ற வசதிகள், மாவட்டத்தில் இரும்பு உற்பத்திக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையை விதைத்தது. இரும்பைத் தவிர சேலம் மாவட்டத்தில் மிகச்சிறந்த ‘மேக்னசைட்’ என்ற தாதுப்பொருட்களின் மிக விரிவான படிவங்கள் இருந்தன. இவை கட்டடத்தில் தரையில் பயன்படும் கலப்புத் தரையையும் மற்றும் பிற பொருட்களை தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்களையும் கொண்டு இருந்தன. இவை உலகின் மிக சிறந்த ஒன்றாகவும் அந்த சமயத்தில், அதன் தரத்தின் அடிப்படையில் கருதப்பட்டது.

மெட்ராஸ் மாகாணத்தின் தொழில் துறை இயக்குநர் மேட்டூரில் தொழில் துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை, தொழில் துறையினருக்கு எடுத்துக் கூற பணிக்கப்பட்டார். அரசு எடுத்த முற்ச்சிகளின் பலனாக, மேற்கண்ட வசதிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு நாளடைவில் பல தொழிற்சாலைகள் இங்கு உருவாக தொழில் முனைவோர் முன்வந்தனர். அவற்றுள் சில ...
1. மேட்டூர் பியெர்ட்செல் என்ற மிகப்பெரிய ஜவுளி ஆலை. (ஸ்பின்னிங் மற்றும் வீவிங் துறை)
2. மேட்டூர் ஸ்பின்னிங் மில்ஸ் (ஜவுளி ஆலை)
3. மேட்டூர் சந்தன ஆலை
4. டான்சி
5. மால்கோ எனும் மெட்ராஸ் அலுமினியத் தொழிற்சாலை.
6. மேட்டூர் கெமிக்கல்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.,
7. திருவான்கூர் கெமிக்கல்ஸ் மற்றும் ஏராளமான சிறிய தொழிற்சாலைகள் மேட்டூரில் தங்கள் தொழிற்சாலைகளை அப்போது நிறுவின.
8. பல எண்ணிக்கையில் சிறிய இரசாயணத் தொழிற்சாலைகளும் இதில் அடங்கும். இவற்றில் பல இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது சிறப்பு! தேவையான தண்ணீர் கிடைக்கிறது என்ற காரணத்தால் சென்ற நூற்றாண்டின் இறுதியில் மேட்டூரில் பெரிய அளவில் அனல் மின் நிலையம் கட்டப்பட்டு 4 x 210 MW மின்சாரம் இங்கு தயாரிக்கப் படுகிறது. 600 MW நிலையம் ஒன்று மேலதிகமாக பின்னர் நிறுவப்பட்டது.
நீர் மனித உயிர்களுக்கு அடிப்படை ஆதாரம் என்பது மீண்டுமொரு முறை மேட்டூரில் நிரூபிக்கப்பட்டது! நீர் நிலைகளை உயிரென மதித்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் மக்கள் மனதில் வேரூன்ற வேண்டும் என்ற அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்ந்து பயணிப்போம்!
காவிரி நன்னீர் சிறப்பு:



















