நகராட்சி நிர்வாகத் துறையில் மோசடி: KN நேரு வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்...
டாடா பிரச்னை: 'அமித்ஷா வீட்டில் டாடா நிர்வாகிகளுக்கு விருந்து?' - ராகுல் vs நிர்மலா சீதாராமன்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமையிலும், அந்த நிறுவனத்தைப் பட்டியலிடுவதிலும் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் நீடிக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்றும் டாடா சன்ஸ் நிறுவனம் விரும்புகிறது.
ஆனால், டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடாவோ இந்த இரண்டையுமே விரும்பவில்லை.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு
இதையொட்டி, நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “டாடா நிறுவனம் குற்றவியல் ரீதியாகச் சீரழிக்கப்பட்டு வருகிறது.
இந்தியத் தொழில்துறை என்பது மோடி உடைய... ஷாவின் உடைய விளையாட்டுப் பொருள் அல்ல” என்று மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

நிர்மலா சீதாராமன் பதில்
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில், “எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்காதீர்கள்.
மேலும், சாதாரண வணிகம் மற்றும் சட்ட ரீதியான விவகாரங்களை கிரிமினல் குற்றம் என மிகச் சாதாரணமாக முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
தொழிலதிபர்களைத் தூண்டிவிட்டு...
இந்தியத் தொழில்துறையின் வெற்றிகளையும் நமது தொழில்முனைவோரையும் நீங்கள் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறீர்கள். இப்போது நமது தொழில் அதிபர்களையும் தூண்டிவிட்டு, அவர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு நம்பிக்கையின்மையையும் நச்சுத்தன்மையையும் பரப்ப முயல்கிறீர்களா?
பல தசாப்தங்களாக, உங்களது கட்சி கொண்டுவந்த மூச்சுத்திணற வைக்கும் ‘லைசென்ஸ்-கோட்டா ராஜ்’ முறையின் கீழ், இந்தியத் தொழில்முனைவோரின் ஆர்வத்தை நசுக்கி, கோடிக்கணக்கான இந்தியர்களை வறுமையில் தள்ளினீர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், இந்தியத் தொழில்துறையை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சக்தியாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இயக்கும் இயந்திரமாகவும் மதிக்கிறது.
நமது கொள்கைகள் தொழில்களை எளிதாக நடத்தவும், தொழில்துறையை ஆதரிக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலுமே வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை...
நமது தொழில்துறையை ஆதரிப்பதிலும், விவசாயிகளை வலுப்படுத்துவதிலும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும் அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் என அனைவருக்கும் சம பங்கு உள்ளது.
எனவே, உங்களின் குறுகிய அரசியல் லாபங்களுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் அவசியம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனது குடிமக்கள் அனைவருக்கும் நீதியை உறுதி செய்கிறது.
இல்லாத பூதத்தை...
மேலும் அதை நிலைநிறுத்தும் பொறுப்பு நமது மாண்புமிகு நீதிமன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்களும், உங்கள் கட்சியும், உங்கள் கட்சியைச் சேர்ந்த பிரதமர்களும் நீதித்துறையை எவ்வாறெல்லாம் தரம் தாழ்த்தினீர்கள் என்பதற்கு வரலாறே சாட்சி.
அதனால் ராகுல் ஜி, இல்லாத பூதத்தைத் தேடிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் கேள்வி
இதற்குப் பதில் தருவது போல, ராகுல் காந்தி மீண்டும் தனது எக்ஸ் பக்கத்தில் நிர்மலா சீதாராமனிடம் கேள்விகள் கேட்டுள்ளார்...
“அன்புள்ள திருமதி. சீதாராமன் அவர்களுக்கு,
1. டாடா அறக்கட்டளை மற்றும் டாடா சன்ஸ் நிர்வாகிகளை அமித் ஷாவின் இல்லத்திற்கு அழைத்து விருந்தளிக்க வேண்டிய அளவிற்கு அப்படி என்ன “சட்ட மற்றும் வணிக ரீதியான விவகாரம்” இருந்தது?
2. உங்கள் முதன்மைக் கூட்டாளி எப்போது களத்தில் இறங்கப்போகிறார்? டாடாவின் எந்தெந்தப் பங்குகளை அவர் கைப்பற்றப் போகிறார்?
இறுதியாக, உங்களின் 3-4 கூட்டாளிகளைத் தவிர, இந்தியாவின் அனைத்துத் தொழிலதிபர்களும் ஏற்கெனவே உங்கள் அனைவரையும் வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
அவர்களைத் தூண்டிவிட யாருடைய அவசியமும் தேவையில்லை.”













