செய்திகள் :

தருமபுரியில் நடுகல் கல்வெட்டுகள் கண்டெடுப்பு – வரலாற்று முக்கியத்துவம் என்ன?

post image

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யாக்கை அறக்கட்டளை, பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவ்வமைப்பைச் சேர்ந்த குமரவேல் இராமசாமி, சுதாகர் நல்லியப்பன், பாலா ஆகியோர் தருமபுரி மாவட்டம் அரூர், பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில், இரண்டு நடுகல் கல்வெட்டுகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அவ்வமைப்பினர் கூறியதாவது, ”அரூர் வட்டம் மல்லூத்து எனும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டு பல்லவ மன்னன் சிங்கவிண்ணன் என்பவரின் பெயரைத் தாங்கியுள்ளது. இதன் காலம் பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டாகும். கல்வெட்டு வட்டெழுத்து வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. ‘கோவூர்நாடு’  எனும் நாட்டுப் பிரிவும் ‘உதப்பி’ எனும் ஊர்ப் பெயரும் கல்வெட்டில் உள்ளது. உதப்பி எனும் ஊரில் நிகழ்ந்த தொறுப் பூசலில் ‘கீரந்தை மாயான்’ என்பவர் இறந்த செய்தி பதிவாகியுள்ளது. இவர் கங்கிளவரைசர் எனும் உள்ளுர்த் தலைவரின் அடுத்தநிலை தலைவராகவும், சிங்கவிண்ணனார் என்பவரின் சேவகனாகவும் குறிக்கப்படுகின்றார்.  

நடுகல் கல்வெட்டு
நடுகல் கல்வெட்டு

வரலாற்றில் தருமபுரி மாவட்டம் ‘நடுகல் மாவட்டம்’ என்றழைக்கும் சிறப்புத் தகுதி வாய்ந்த மாவட்டமாகும். இங்கு பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து நடுகல் கல்வெட்டுகள் கிடைக்கத் தொடங்குகின்றன. அவை சமூக வரலாற்று எழுதியலுக்கு உரிய முக்கிய தரவுகளை வழங்கும் ஆவணங்களாகும். அவ்வகையில் மல்லூத்து நடுகல் கல்வெட்டு, பண்டைய சமூகத்தின் அதிகாரப் படிநிலைகள், பொருளாதார நிலைகளை அறிய உதவும் சான்றுகளை வழங்கியுள்ளது. பருமன், அரைசர், மக்கள், சேவகன் எனும் அதிகாரப் படிநிலையை இதில் காணமுடிகிறது.

இக்கல்வெட்டு மிகவும் நேர்த்தியான முறையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் மெய்யெழுத்து, எகர ஒகர குறில் எழுத்துகள் அனைத்தும் தெளிவாகப் புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளன. இது தொல்காப்பிய எழுத்ததிகார மரபைப் பின்பற்றி எழுதப்பெற்ற செவ்வியல் தன்மையாகும். தமிழ்நாட்டின் உள்நிலங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளிலும் செவ்வியல் தன்மையோடு பிழைகள் இன்றி எழுதப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. நடுகல் சிற்பம் சுமார் 72 செ. மீ. உயரமும் 89 செ. மீ. அகலமும் 11 செ. மீ. தடிமனும் கொண்டுள்ளது. சிற்பத்தில் வீரனின் வலது கையில் குக்கறி வகை குறுவாள், இடது கையில் கேடயம், இடுப்பில் அரையாடை உள்ளது. வீரனின் காது நீண்டிருப்பது அக்காலத்தில் காது வளர்க்கும் சமூகப் பண்பாட்டு வழக்கம் பரவியிருந்ததைக் காட்டுகிறது. 

நடுகல் கல்வெட்டு
நடுகல் கல்வெட்டு

பாலக்கோடு வட்டம் சொட்டாண்டஹள்ளி எனும் ஊரில் பொ.ஆ. 1299 ஆம் ஆண்டு வீரவிஸ்வநாதன் காலத்திய நடுகல் கல்வெட்டும் கள ஆய்வில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுள்ள பலகை சுமார் 94 செ. மீ. உயரமும் 110 செ. மீ. அகலமும் 17 செ. மீ. தடிமனும் கொண்டுள்ளது. கல்வெட்டில் அரசனின் பெயர் ‘வீரவிசையனாதேவர்’ என்றுள்ளது. வீரவிஸ்வநாதன் என்பதை மக்கள் வழக்கில் அவ்வாறு எழுதியுள்ளனர். இவரின் பாட்டனார் வீரசோமேஸ்வரன், தந்தை வீரராமநாதன் ஆவார்கள். இவர்கள் தகடூர் பகுதியில் ஆட்சிசெய்த போசாளர் அரச மரபினர் என்பது கல்வெட்டின் வழியாக உறுதி செய்யப்படுகிறது. மேலும் வீரவிஸ்வநாதன் காலத்திய கல்வெட்டுக்கள் வெகு அரிதாகவே தமிழ்நாட்டில் கிடைத்துள்ள சூழலில், தற்போது கிடைத்துள்ள இந்த நடுகல் கல்வெட்டு தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்று எழுதியலுக்கு மிக முக்கியமான ஆவணமாகும்.

 இக்கல்வெட்டு காட்டுப் பன்றிகளிடம் இருந்து ஊரைக் காக்கும் பணியில் மாண்ட ‘உமைதேவன்’ எனும் வீரனுக்கு எடுக்கப்பட்டுள்ளது. ‘சிமிடயாற்று புலிக்கல்’ எனும் ஊர்ப்பெயரும் ‘அதிகாரி வேழாலி புளியன்’ எனும் உள்ளூரத் தலைவரின் பெயரும் கல்வெட்டில் வந்துள்ளது. நடுகல் சிற்பம் சுமார் 123 செ. மீ. உயரமும் 113 செ. மீ. அகலமும் 16 செ மீ. தடிமனும் கொண்டுள்ளது. சிற்பத்தில் வீரனின் வலதுக் கையில் குறுவாள், காதில் குழை, கழுத்தில் ஆபரணங்கள், கைகளில் வீரக்காப்பு, இடுப்பில் அரையாடை ஆடைக்கச்சு வந்துள்ளது. மேலும் சிற்பத்தில் வேட்டை நாய்களும் காட்டுப் பன்றியும் காட்டப்பட்டுள்ளன.  இந்த கல்வெட்டுகள், பண்டைய தமிழ்நாட்டின் அரசியல், சமூக வரலாற்றிற்குப் புதிய தகவல்களை வழங்குகின்றன. மேலும் கல்வெட்டு எழுத்து, மொழி அமைப்பில் செவ்வியல் வழக்கு, வட்டார வழக்கு என இரு தன்மையில் எழுதப்பட்டிருப்பதை அறியச் செய்யும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன” எனத் தெரிவித்தனர்.

மலேரியா, மண்ணீரல் பாதிப்பு: உடல் நலம் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள்| மேட்டூர் அணை ஓசை 40

மலேரியா எதிர்ப்பு...உலகின் வெப்ப மண்டல நாடுகளில் மேட்டூர் போன்ற பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் மேம்பட்ட நீர் வழங்குதலுக்காக மேற்கொள்ளப்படுகிறது. ஏராளமான அகழ்வுகள், கற்களை தோண்டி எடுப்பதற்கும், மண்ணை அப்ப... மேலும் பார்க்க

மேய்ச்சல் நிலத்தின் நாயகர்கள்; காவிரி கரையோர கிராமங்களின் வேர்களைத் தேடி... | மேட்டூர் அணை ஓசை 39

‘ஹொசள்ளி’ வெங்கட்ராஜு’நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதேபோல எந்த நதிக்கும் இரு கரைகள் உண்டல்லவா? காவிரி ஆற்றின் வலது புறக்கரையிலிருந்து மக்கள் புலம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கும், மாதேஸ்வரன் மல... மேலும் பார்க்க

காவிரிக் கரையோர விதை; பேயாறும் பஞ்சமும்... கைகொடுத்த ஒரே உணவு `இருளைக்கிழங்கு' | மேட்டூர் அணை ஓசை 38

விமானப்படை வீரர் மேட்டூர் தனபாலன்தற்போது அணை நீரில் மூழ்கி கிடக்கும் சாம்பள்ளி கிராமத்தில் முன்பு பிறந்த மண்ணின் மைந்தர்களான சகோதரர்கள் இருவரை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாம்பள்ளி - கா... மேலும் பார்க்க

100 பேர் கொள்ளும் பரிசல்; கஞ்சி தொட்டி; கலவரச் சூழல்... நினைவுகளைச் சுமக்கும் நண்பர்கள்| அணை ஓசை 37

வெங்கடேஷ் மற்றும் சுகுணசேகரன்தற்போது மேட்டூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற பொறியாளர் திரு.N.P.K. வெங்கடேஷ் இந்த மேட்டூர் அணை தொடர் எழுத உதவி புரிந்தவர்களில் முக்கியமானவரும் முதன்மையானவரும் ஆவார். நான்க... மேலும் பார்க்க