`காவல்துறையின் அன்றாட சில்லறை செலவின நிதி உயர்த்தி அறிவிப்பு!' - தமிழ்நாடு அரசு
ராஜ ராஜ சோழனின் 1,041-வது சதய விழா - விழாக்கோலத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில்!
தஞ்சாவூர் பெரிய கோயில் உலக புகழ் பெற்று திகழ்ந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் வானுயுரந்த விமான கோபுரத்துடன் பிரமாண்டமாக காட்சியளிக்கும் பெரிய கோயில் கட்டுமானம் குறித்து இன்றைக்கும் உலகமே வியந்து அதிசயித்து பேசி வருகிறது. தமிழர்களின் அடையாளமான தஞ்சாவூர் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்த நாள், சதய விழாவாக ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றும், நாளையும் 1,041வது சதய விழா வெகு விமர்சையாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பெரிய கோயில் மட்டுமன்றி தஞ்சை நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அலங்கார நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டன. இதனால் நகரமே அழகு ஜொலிக்க காட்சியளிக்கிறது. சதய விழாவுக்காக நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரிய கோயில் வளாகத்தின் இடது புறத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் திருமுறை மங்கள இசையுடன் விழா தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர் ரேவதி, எம்.எல்.ஏ விஜய் சரவணன், சதய விழா குழுத் தலைவர் சரவணன், அறங்காவலர் போன்ஸ்லே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், கவியரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக மாமன்னன் ராஜ ராஜ சோழனின் நகர்வலம் நடைபெற்றது.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இருந்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் தமிழர்களின் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் உணர்த்தும் வகையில், நூற்றுக்கணக்கான நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் கொம்பு இசை, கரகம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என இசைத்தபடி ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக பெரியகோயிலுக்கு வந்தனர்.
இன்று மாலை 1,041 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சதய விழாவின் இரண்டாம் நாளான நாளை, அரசு சார்பில் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். சதய விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவதால், தஞ்சாவூர் விழாக்கோலத்தில் களைக்கட்டியுள்ளது.


















