Scene: ``ஷூட்டிங்குக்கு அப்புறம் மனநிலை ஜாம்பி நிலைக்குப் போயிடும்" - நடிகர் நஸ்...
40 ரிசார்ட், வில்லாக்கள்... பதவியைப் பயன்படுத்தி முறைகேடு; சிக்கிய ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் தம்பதி!
ராஜஸ்தான் மாநிலத்தில் கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் சிகர் அகர்வால். இவரது மனைவி பிரஷகா மாதூர். இவர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவர்கள் இரண்டு பேரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ராஜஸ்தானின் பல்வேறு இடங்களில் வில்லாக்கள் மற்றும் ரிசார்ட்களை விலைக்கு வாங்கி அதனை வாங்கிய நிறுவனத்திற்கே குத்தகைக்கு விட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. மாநில தொழில்துறைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய அகர்வால் தான் வாங்கிய வில்லாக்கள் மற்றும் ரிசார்ட்களை அனந்தா பிராண்டின் கீழ் ஹோட்டல்களையும் ரிசார்ட்டுகளையும் நடத்தி வரும் கோயல் பேஷன்ஸ் நிறுவனத்திடம் குத்தகைக்கு விட்டு இருந்தார்.
கோயல் பேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், உதய்பூரில் உள்ள புஜ்தா மற்றும் அல்வாரில் உள்ள அஜப்கர் உள்ளிட்ட இடங்களில் அனந்தா பிராண்டின் கீழ் ரிசார்ட்டுகளையும் ஹோட்டல்களையும் நடத்தி வருகிறது.

அகர்வால், தனது மனைவி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் இரண்டு அனந்தா ரிசார்ட்களில் 40 வில்லாக்கள் மற்றும் காட்டேஜ்களை இரண்டரை ஆண்டுகளில் ரூ.6.16 கோடிக்கு வாங்கி, அவற்றை விற்ற நிறுவனத்திடம் மீண்டும் குத்தகைக்கு விட்டு, ஆண்டுக்கு ரூ.1.8 கோடி சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
இதற்காக அகர்வால் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி கோயல் நிறுவனம் ஒப்பந்தங்களைப் பெற உதவி இருக்கிறார். அதன் மூலம் சந்தை விலையைவிட குறைவான விலையில் வில்லாக்கள் மற்றும் ரிசார்ட்களை விலைக்கு கோயல் நிறுவனத்திடம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து அகர்வாலும், அவரது மனைவியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோயல் பேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தேவையற்ற சலுகைகள் வழங்கியது மற்றும் குறைந்த விலைக்கு சொத்துக்களை வாங்கியது தொடர்பாக அகர்வால் மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
அகர்வால் உதய்பூர் மாவட்ட ஆட்சியர், ராஜஸ்தான் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மற்றும் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலர் போன்ற பதவிகளில் இருந்துள்ளார். அவர் பதவியில் இருந்தபோது கோயல் நிறுவனம் ரிசார்ட் கட்டுமான பணிகளுக்கு சலுகைகள் வழங்கியது, கட்டாயச் சான்றிதழ்களின் சரியான சரிபார்ப்பு இல்லாமல் ஒப்புதல்கள் வழங்கியது மற்றும் சிறப்பு நிதி வழங்கியது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. எனவே அகர்வாலுக்கும் கோயல் நிறுவன இயக்குநர்களுக்கும் இடையே உள்ளதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு உதய்பூரில் உள்ள புஜ்தாவில் உள்ள ரிசார்ட்டில் அகர்வால் குடும்பம் 20 வில்லாக்களை வாங்கியது. அதோடு கடந்த மார்ச் மாதம் அவர்கள் அல்வாரில் உள்ள அஜப்கரில் உள்ள ரிசார்ட்டில் மேலும் 20 வில்லாக்களை வாங்கினார்கள். அகர்வால் மற்றும் மனைவி ஆகியோர் தலா 10 வில்லாக்களை உதய்பூர் ரிசார்ட்டில் தலா 15 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.
அல்வார் ரிசார்ட்டில், எட்டு வில்லாக்கள் தலா ரூ.16.5 லட்சத்தில் அவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களது இரண்டு மகன்களும் தலா ரூ. 15 லட்சத்துக்கு நான்கு வில்லாக்களை வாங்கியதாகவும், மேலும் நான்கு வில்லாக்கள் அகர்வால் மனைவியின் பெற்றோரின் பெயரில் தலா ரூ. 16.5 லட்சத்துக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கோயல் பேஷன் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக ரூ.6.16 கோடிக்கு சொத்துக்கள் வாங்கப்பட்டன.

















