செய்திகள் :

72 ஆண்டுகளாகத் தீபாவளி இல்லை - முன்னோர் வாக்குக்குக் கட்டுப்படும் சிங்கம்புணரி 12 கிராமங்கள்!

post image

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுச் சத்தம், தித்திக்கும் பலகாரங்கள் என ஊரே கோலாகலமாக இருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம மக்கள் கடந்த 72 ஆண்டுகளாகத் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதே இல்லை.

சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ்.மாம்பட்டி, ஒப்பில்லாம்பட்டி, சந்திரபட்டி, தும்பைபட்டி, இடையப்பட்டி, கிலகிலுப்பைப்பட்டி, திருப்பதிப்பட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கலுங்குபட்டி, தோப்புப்பட்டி மற்றும் இந்திரா நகர் ஆகிய 12 கிராமங்கள் இந்த விசித்திரக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றன.

சிங்கம்புணரி 12 கிராமங்கள்



தீபாவளி நாளில் இந்தப் பகுதிகளில் பட்டாசு சத்தமும் இல்லை; புத்தாடைகள் அணிந்த மனிதர்களையும் காண முடியாது. வழக்கம் போல விவசாயிகள் தங்களின் விளைநிலங்களுக்குப் பணி செய்யச் சென்றுவிடுகிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்பதைக் கண்டறிய, எஸ்.மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உலகநாதனை (57) தொடர்புகொண்டு பேசினோம்.

வட்டிக்கு வாங்கிய கடனும்... சமத்துவத்திற்கான ஊர்க்கூட்டமும்!

" எங்கள் பகுதியில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில்தான் விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெறும். முந்தைய காலத்தில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் இருந்ததால், வட்டிக்குக் கடன் வாங்கியே விவசாயப் பணிகளைச் செய்து வந்தனர். தை மாதம் அறுவடை முடிவடைந்த பிறகே, வட்டிக்கு வாங்கிய கடனுக்காக நெல் தானியங்களைக் கொடுப்பார்கள்.

இத்தகைய சூழலில், ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளிப் பண்டிகை அனைவருக்கும் பெரும் பொருளாதாரச் சுமையாக மாறியது. கையில் பணமில்லாததால், மேலும் கடன் வாங்கித் தீபாவளியைக் கொண்டாட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அன்றைய காலத்தில் 100 ரூபாய் கடனுக்காக ஒரு மூட்டை நெல்லை வட்டியாகக் கொடுக்க வேண்டியிருந்தது விவசாயிகளுக்குப் பெருஞ்சுமையாக இருந்தது.

இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த எங்கள் பகுதி மக்கள், 1954-ம் ஆண்டு ஊர்க்கூட்டம் கூட்டி, "இனிமேல் தீபாவளி கொண்டாடுவதில்லை" என உறுதியான முடிவை எடுத்தனர். அன்றிலிருந்து கடந்த 72 ஆண்டுகளாக அந்த முடிவை மாற்றாமல் விடாப்படியாகப் பின்பற்றி வருகிறோம்.

"பட்டாசு, பலகாரத்தை விட முன்னோர்களின் பாடம்தான் பெரிது!" :

"அப்போது எல்லாரும் வறுமை நிலையில்தான் இருந்தார்கள். இருக்கிற பொருள், காசு, பணம் எல்லாத்தையும் விவசாயத்தில் போட்டுவிட்டு, வெறும் கையோடு இருக்கிற காலகட்டத்தில்தான் இந்தத் தீபாவளி வந்துவிடுகிறது. கிராம மக்கள் எல்லோரும் விவசாயத்தையே நம்பியிருப்பதால், விவசாய அறுவடைக்காலமான கோடை காலம், வசந்த காலம் என்று சொல்லக்கூடிய தை மாதத்தில் எல்லாரும் விவசாயப் பணியெல்லாம் பண்ணி முடித்துவிட்டு ஓய்வில், சந்தோஷமாக இருக்கக்கூடிய காலகட்டத்தில் வரக்கூடிய தைப்பொங்கல், புரவி எடுப்புத் திருவிழா, கோவில் திருவிழான்னு எங்கள் கிராமத்தில் சிறப்பாகக் கொண்டாடுவோம்.

விவசாயக் காலத்தில் தீபாவளி வருவதுனால, இந்தத் தீபாவளியை மட்டும் நிறுத்திவிட்டு, திருக்கார்த்திகை திருவிழாவிலிருந்து மற்ற விழாக்களைச் சந்தோஷமாகக் கொண்டாடுவோம்னு அந்த காலத்தில் 70 வருஷத்துக்கு முன்னாடி கிராம முன்னோர்கள் எல்லாம் கூடி எடுத்த முடிவின்படி நடக்குறோம். இன்றைக்குப் பொருளாதாரத்தில் வளர்ந்திருந்தாலும், எல்லாரும் கொண்டாட முடியும் என்ற நிலை இருந்தாலும், முன்னோர்கள் காட்டிய அந்தப் பக்குவம், ஒற்றுமை, கட்டுப்பாடு, ஒழுக்கம், முன்னோர்களை மதிக்கக்கூடிய பண்பாடு இதையெல்லாம் இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் தெரிஞ்சுக்குறதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பா இன்னமும் இருக்கு.

 அந்தக்காலத்தில் தீபாவளி அன்னைக்கு மட்டும்தான் பலகாரம் பண்ணுவாங்க; அதே மாதிரி புது வேட்டி, சேலை கட்டுவாங்க. இன்றைய வசதியில் எல்லா வீட்லயும் புது வேஷ்டி, புதுச் சேலையை அடிக்கடி கட்டிக்கிட்டே இருக்காங்க. பிள்ளைகள் எல்லாம் நிறைய புது ஆடை உடுத்திட்டு இருக்காங்க. அதனால அது ஒரு பெரிய விஷயம் இல்ல.

ஆனா, முன்னோர்கள் காட்டிய அந்த ஒற்றுமையும் கட்டுப்பாடும், பக்குவமும் இன்றைக்குப் பல இடங்களில் இல்லாம இருந்தாலும் கூட, நம்ம அதைப் பின்பற்றணும் அப்படிங்கிற அடிப்படையில்தான் அதை நாங்கள் இன்னைக்கும் பின்பற்றிட்டு இருக்கோம்."

'தலை தீபாவளி' கிடையாது:


வெளி ஊர்களில் இருந்து எங்கள் ஊருக்கு மணமுடித்து வரும் மருமகள்களுக்கு தீபாவளிப் பண்டிகை குறித்த விவரம் முன்பே தெரிந்திருக்கும். பெரும்பாலானோருக்குத் தெரிந்தே திருமணம் முடிந்து வருவார்கள். ஒருவேளை தெரியாத பெண்களாக இருந்தாலும், இந்த ஊருக்கு வந்தவுடன் அவர்களும் இந்த ஊரின் நடைமுறைக்குப் பழகிவிடுவார்கள். எனவே, எங்கள் ஊர்ப் பெண்களுக்கும் சரி, வெளியூரிலிருந்து இங்கு வரும் மருமகள்களுக்கும் சரி, எங்கள் ஊரில் 'தலை தீபாவளி' விருந்து கொடுக்கும் வழக்கமோ அல்லது தீபாவளியைக் கொண்டாடும் முறையோ கிடையவே கிடையாது.


இன்றைய காலகட்டத்தில் நம் கிராம இளைஞர்களிடம் கருத்துச் சுதந்திரம் இருந்தாலும், முன்னோர்கள் வகுத்தளித்த இந்தச் சுயக் கட்டுப்பாடும், பண்பாடும் நமது பரம்பரையின் ஒற்றுமையைக் காக்கும் அரணாக விளங்குவதை அவர்கள் உணர்ந்துள்ளனர். எங்களின் இந்தச் செயல் பல இடங்களில் வியப்பாகப் பார்க்கப்பட்டாலும், அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்தச் சுய ஒழுக்கத்தைக் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்." என்கிறார் பூரிப்புடன்

வறுமையின் காரணமாகவும், சமூகச் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும் அன்று ஊர்க்கூடி எடுத்த ஒரு முடிவை இன்றுவரை கடைப்பிடித்து வருவது இந்த 12 கிராமங்களின் அசைக்க முடியாத ஒற்றுமையின் அடையாளமாகவும், தலைமுறை மாறினாலும் பண்பாட்டைப் பாதுகாக்கும் தனித்துவ அடையாளமாகவும் விளங்கி வருகிறது.

நிலச்சரிவில் பறிபோன குடும்பம்; விபத்தில் பலியான காதலன்... வயநாடு ஸ்ருதிக்கு புதுவாழ்வு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் வெள்ளார்மலை அரசு பள்ளி அருகே வசித்துவந்த சிவண்ணனின் 9 பேர் கொண்ட குடும்பத்தில் மூத்த மகள் ஸ்ருதியைத் தவிர மற்ற அனைவரும் மண்ணில் புதைந்து இறந்தனர். சிவண்ணன்... மேலும் பார்க்க

"7வது முறையாக என்னை கொலை செய்ய முயற்சி" - திரிணாமுல் எம்.பி.அபிஷேக் பானர்ஜி மீது மீண்டும் தாக்குதல்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியாக இருக்கும் அபிஷேக் பானர்ஜி மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதுவும் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல... மேலும் பார்க்க

பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர் மிரட்டல்... லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி ஹரி பாக்ஸர் அமெரிக்காவில் கைது!

சமீப காலமாக மும்பையில் பாலிவுட் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி ஹரி பாக்ஸரை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. அவர் அமெரிக்காவில் பதுங்கி இருந்தார். இய... மேலும் பார்க்க

'தூங்கியும் சம்பாதிக்கலாம்' - 60 நாட்கள் தூங்கி ரூ.9.6 லட்சம் வருமானம் ஈட்டிய பெண்

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தூங்குவதை லாபகரமான வாய்ப்பாக மாற்றி, தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று ரூ.9.6 லட்சம் பெற்றுள்ளார். வேக்பிட் என்ற நிறுவனம் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்து இருந்தது. அ... மேலும் பார்க்க

மும்பையில் அனுமதியின்றி பஸ் நிறுத்தத்தை நீக்கிவிட்டு புது பஸ் நிறுத்தத்தை நிறுவிய சிவசேனா எம்.எம்.ஏ

மும்பை முழுக்க பயணிகளின் வசதிக்காக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தங்கள் மும்பை மாநகராட்சியின் நிதியில் கட்டப்படுகிறது. அதில் மாநகராட்சி சின்னம் மற்றும் பஸ்கள் வரும் நேரம் குறித்த... மேலும் பார்க்க

நெல்லை: களைகட்டிய தீபாவளி விற்பனை; பட்டாசு, ஐவுளி கடைகள், சந்தைகளில் நிரம்பிய மக்கள் கூட்டம் |Album

நெல்லையில் களைகட்டிய தீபாவளி விற்பனை! பட்டாசு,ஐவுளி கடைகள், சந்தைகளில் நிரம்பிய மக்கள் கூட்டம் மேலும் பார்க்க