வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வடகோவை ரவுண்டானா; கோவை தீபாவளி கொண்டாட்டம்! - பருந்...
"இந்த வருஷம் தீபாவளி மதுரையிலுள்ள மாமனார் வீட்டுலதான்!" - மீனாட்சி அம்மன் கோயிலில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தற்போது 'சேயோன்', 'பார்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
'சேயோன்' படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. அதனால் மதுரையில் இருக்கும் சிவகார்த்திகேயன், இந்த வருடம் தீபாவளியையும் அங்கேயே கொண்டாட இருக்கிறார்.

'சேயோன்' படத்தை 'தாய்க்கிழவி' இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். மதுரையில் இருக்கும் அவர் இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், "'சேயோன்' படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதற்காகத்தான் மதுரை வந்திருக்கிறேன்.
படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. தீபாவளி இந்த வருடம் மதுரையிலுள்ள என் மாமனார் வீட்டில்தான். நேற்று பிள்ளையார்பட்டி கோயிலுக்குச் சென்றிருந்தோம்.

இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறோம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அனைவரும் கவனமாகப் பட்டாசு வெடியுங்கள்" என்றவர், "மதுரை எப்போதும் ஸ்பெஷல்தான். என் மனைவி ஆர்த்தி மதுரையைச் சேர்ந்தவர்தான். அதனால், மதுரையின் மாப்பிள்ளை என்பதில் சந்தோஷமும் பெருமையும்!" என்றார்.




















