பெரியார் நூலக விவகாரம்: 'அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்'- அண்ணாமலை
Scene Review: அட! புதிய பரிமாணத்தில் சூர்யா - ஜித்து மாதவன் காட்டும் ‘சீன்’ எப்படி?
ஐந்து முறை ராஜினாமா கடிதம் கொடுத்தும் பணியிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார் டி.எஸ்.பி இன்பராஜ் (சூர்யா). அவரது விசித்திரமான விசாரணை முறைகள் சலிப்பூட்டினாலும், புலனாய்வில் அவருக்கு இருக்கும் தனிப் பார்வையை இழக்க விரும்பாத குற்றப்பிரிவுத் தலைவர் ஸ்டீபன் (லால்), ராஜினாமாவை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில், ஏற்கெனவே இன்பராஜ் முடித்துவைத்த ஒரு தொடர் கொலை வழக்கை நினைவூட்டும் வகையில் மற்றொரு வழக்கு அவரிடம் வருகிறது. தடயம் எதுவும் சிக்காதபடி துல்லியமாகத் திட்டமிட்டு இந்தக் கொலைகளை நிகழ்த்துகிறார் புரொஃபஷனல் சீரியல் கில்லர் ஈஸ்வரன் (நஸ்லென்). இன்பராஜ் ஏன் பணியிலிருந்து விலகத் துடிக்கிறார், காவல்துறையின் உதவியின்றி தனக்கென ஒரு கோளாறான டீமை அமைத்துக்கொண்டு ஈஸ்வரனைப் பிடித்தாரா என்பதே ‘சீன்’.

நாயக பிம்பத்தை ஒதுக்கிவிட்டு, குறைகளும் விசித்திர குணங்களும் கொண்ட இன்பராஜாக சூர்யாவுக்கு நல்ல நடிப்புத் தீனி. உடல்மொழி, முகபாவனைகள், சிடு சிடு வசனங்கள் எனக் கதாபாத்திரத்துக்குத் தனி கலர் சேர்க்கிறார். குறிப்பாக, இன்பராஜின் பலவீனங்களை எந்தத் தயக்கமும் இன்றி வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. பதற்றத்தின் சுவடே இல்லாமல் கூலாகக் கொலைகளைச் செய்யும் ஈஸ்வரனாக நஸ்லென் கச்சிதம். திட்டம் நிறைவேறியதும் குழந்தையைப் போலத் துள்ளிக் குதிப்பதும், அடுத்த கணமே கொடூரமான திட்டங்களைத் தீட்டுவதுமாகக் கதாபாத்திரத்தின் இருவேறு முகங்களையும் ரசிக்கும்படி வெளிப்படுத்துகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குத் திரும்பியிருக்கும் நஸ்ரியாவின் துள்ளலும் எனர்ஜியும் துளியும் குறையவில்லை. மாயாவாக வசீகரிக்கும் அவருக்கும் சூர்யாவுக்குமான கெமிஸ்ட்ரி, படத்தின் இன்னொரு பலம்.
லால், ஆனந்தராஜ், கஜராஜ், ராஜ்ப்ரியன் எனத் துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்களும் தங்களது வேடங்களில் இயல்பாகப் பொருந்திப்போகிறார்கள். இன்பராஜை வெறுத்தாலும், அவரது ஆளுமையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாத போலீஸ் அதிகாரியாக சுரேஷ் மதியழகன் கவனம் பெறுகிறார். கூடவே, சில சர்ப்ரைஸ் கேமியோக்களும் உண்டு!
இயக்குநர் ஜித்து மாதவனின் தொலைநோக்கு பார்வைக்குக் கண்களாகச் செயல்பட்டிருக்கிறது அக்கட தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் தொழில்நுட்பக் குழு. வினீத் அகஸ்டியனின் ஒளிப்பதிவு, விசாரணைக் காட்சிகளின் மர்மத்தையும் இன்பராஜ் - ஈஸ்வரன் மோதல்களின் பதற்றத்தையும் நேர்த்தியாகக் கடத்துகிறது. அஜ்மல் சாபுவின் ஸ்டைலிஷான மேட்ச் கட்களும் டிரான்சிஷன்களும் கவனத்தைத் தக்கவைக்கின்றன. என்றாலும், சில இடங்களில் கத்திரியை இன்னும் இறுக்கமாகப் பிடித்திருக்கலாம்.
இன்பராஜின் வீடே ஒரு தனிக் கதாபாத்திரமாகத் தோன்றும் அளவுக்கு நுணுக்கமாக உழைத்திருக்கிறது கலை இயக்குநர் அஸ்வினி காலேவின் குழு. இன்பராஜின் தனித்தன்மைக்கேற்ற சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கும் சேத்தன் டிசோசாவும் கவனிக்க வைக்கிறார்.
படத்தின் ட்ரீட்மென்ட்டுக்குப் பெரிதும் கைகொடுத்திருக்கிறது சுஷின் ஷியாமின் இசை. வழக்கமான மாஸ் மீட்டருக்குள் சிக்கிக்கொள்ளாமல், கதாபாத்திரங்களின் மனநிலைக்கும் காட்சிகளின் இயல்புக்கும் ஏற்ப இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைக்கு இடமளித்தபடியே சஸ்பென்ஸையும் தக்கவைப்பதில் பின்னணி இசைக்குக் கணிசமான பங்கிருக்கிறது. ஆனால், பாடல்களில் 'ஏரோபிளேன் போல' மட்டுமே மனதில் நிற்கிறது.
‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ படங்களைத் தொடர்ந்து ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திலும் தனித்துவமான கதாபாத்திரங்கள், டார்க் ஹ்யூமர், எதிர்பாராத திருப்பங்கள், நேர்த்தியான காட்சியமைப்பு என அவரது டிரேட்மார்க் அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. சீரியஸான தொடர் கொலைக் கதைக்குள் நகைச்சுவையை இயல்பாகக் கலந்து, படத்தை ஜாலியாக நகர்த்தியிருக்கும் ட்ரீட்மென்ட் பெரிய ப்ளஸ். குறிப்பாக, ஒருபுறம் அடுத்து என்ன செய்வார் என்றே கணிக்க முடியாத இன்பராஜ்; மறுபுறம் எல்லாவற்றையும் நின்று நிதானமாகத் திட்டமிடும் ஈஸ்வரன் என இருவரையும் எதிரெதிரே நிறுத்தியிருப்பது திரைக்கதைக்குச் சுவாரஸ்யம் கூட்டுகிறது.
அதேநேரம், கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் குணாதிசயங்களை நிறுவுவதற்கே அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், திரைக்கதை ஆங்காங்கே தொய்வடைகிறது. சில நகைச்சுவைக் காட்சிகளும் எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை. இருப்பினும், ஆரம்பத்தில் நம் பார்வையில் தப்பும் சில விஷயங்கள், பின்னர் கதையின் முக்கியக் கண்ணிகளாக இணைவது சுவாரஸ்யம்.

சீரியஸான கிரைம் த்ரில்லருக்கான தொனியில் படம் பயணிக்கவில்லை என்றாலும், விசாரணைப் பகுதிகளில் இன்னும் சவாலான முடிச்சுகளைப் போட்டிருக்கலாம். சில சிக்கல்கள் மிகச் சௌகரியமாகத் தீர்க்கப்படுவது, நாயகன் – வில்லன் மோதலின் தீவிரத்தைக் குறைக்கிறது. வழக்கில் எந்த முன்னேற்றத்தையும் எட்டாமல், இன்பராஜைக் கண்காணிப்பதையே காவல்துறை முழுநேர வேலையாகப் பார்ப்பதும் உறுத்தல்!
விசாரணையில் இன்னும் ஆழம் தேவைப்பட்டாலும், வித்தியாசமான கதாபாத்திரங்கள், ரசிக்கவைக்கும் நடிப்பு, டார்க் ஹ்யூமர் என இந்த ‘சீன்’ களைகட்டுகிறது.


















