``வி.எஸ் பாபு ICU-வில் இருக்கிறார்..!" - கொளத்தூர் எம்.எல்.ஏ உடல்நிலை குறித்து அ...
காலை 6 மணி சிறப்புக் காட்சி: சீமான் கண்டனத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அதிருப்தி; விளக்கும் சீமான்
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருந்தது. இதனை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், ``போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே?" எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.
இதற்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் T. சிவா, பொருளாளர் G. தனஞ்ஜெயன் ஆகியோர் சீமானுக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
அந்தக் கடிதத்தில், ``மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய, பிரபல நடிகர்கள் நடித்த தமிழ்த் திரைப்படங்கள், வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா/தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில், அதிகாலை 6 மணிக்கே வெளியாகிவிடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அத்திரைப்படங்கள் காலை 9 மணிக்குத்தான் திரையிடத் தொடங்குகின்றன.
அதற்குள் தவறான விமர்சனங்களும், படத்தைக் குறித்த எதிர்மறையான கருத்துகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, இங்கு திரைப்படம் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு பிரச்னைகளை தமிழ்த் திரையுலகம் சந்தித்து வருகிறது.
அதற்கு தீர்வாகதான் அதிகாலை 6 மணிக்கு சிறப்புக்காட்சி அனுமதி தரப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தக் கடிதத்துக்குப் பதிலளிக்கும் விதமாக சீமான் தன் எக்ஸ் பக்கத்தில், ``புதிய திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி முதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாகத் தாங்கள் எழுதிய கடிதத்தைப் படித்தேன். வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தமிழ்த் திரைப்படங்கள் முன்னதாகவே வெளியாகும்போது, அவற்றைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் பரப்பப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
திரைப்பட உருவாக்கத்தின் பின்னாலுள்ள உழைப்பையும், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளையும் திரைத்துறையைச் சேர்ந்தவனாக நானும் அறிவேன்.
From the Desk Of #TFAPA
— Nikil Murukan (@onlynikil) November 5, 2026
நவம்பர் 5, 2026
திரு. செந்தமிழன் சீமான் அவர்கள்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
மதிப்பிற்குரிய திரு. சீமான் அவர்களுக்கு,
பொருள்: புதிய திரைப்படங்களின் முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது குறித்த தங்களின் கடிதம்… pic.twitter.com/iaRNZpDFta
தமிழ்த் திரையுலகம் நலிவடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை; அது வளர வேண்டும் என்பதே எனது விருப்பமும். நாங்கள் அரசமைத்தால், ‘திரைக்கலை மேம்பாடு’ என்பதன் கீழ் தமிழ்த் திரையுலகம் மேம்படப் பல திட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவர விரும்பி தமிழில், தமிழ் மொழி, பண்பாடு மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் திரைப்படங்களுக்கு அரசு பொருளாதார உதவி வழங்குவதோடு, சிறந்த திரைப்படங்களை அரசே வாங்கி வெளியிடுவது; திரைப்படங்களை இணையத்தில் அத்துமீறி வெளியிடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பது; திரையரங்குக் கட்டணம், ஊர்தி நிறுத்தக் கட்டணம், உணவுப்பொருட்களின் விலையை முறைப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை எங்களது ஆட்சிச் செயற்பாட்டு வரைவில் முன்வைத்திருக்கிறோம்.
சமூகத்தின் மீதும், மக்களின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் கொண்டுள்ள ஆழமான பற்றுதலும் அக்கறையுமே எனது எதிர்ப்பிற்குக் காரணம் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படம் மகிழ்ச்சியையும் சிந்தனையையும் தரும் ஓர் உயர்ந்த கலை. அந்தக் கலையின் மீது எனக்கிருக்கும் நேசத்திற்கு இணையாக, அதைக் காணும் மக்களின் கல்வி, உழைப்பு, வாழ்வாதாரம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மீதும் எனக்கு அக்கறை இருக்கிறது.
பண்டிகை நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் என்பது தேவையா என்ற கேள்வியைத்தான் முன்வைத்தேன்.
அன்பிற்கினிய தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அண்ணன் சிவா மற்றும் ஐயா தனஞ்செயன் அவர்களுக்கு,@tfapatn@TSivaAmma@Dhananjayang
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) November 6, 2026
வணக்கம்!
புதிய திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி முதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாகத்…
வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும் போது அவற்றை அதிகாலையிலேயே காண்பதற்கு ஆண்டின் எல்லா நாட்களிலும் நம் வீட்டு இளந்தலைமுறைப் பிள்ளைகள் திரையரங்க வாயில்களில் காத்திருப்பதையும் அன்றாடப் பணிகளில் இருந்து விலகி கேளிக்கைகளில் திளைத்திருப்பதையும் எண்ணிப் பார்க்கவே மனம் வலிக்கிறது. இதுபோன்ற மிதமிஞ்சிய கேளிக்கைகளில் ஈடுபட மக்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பது எத்தகைய சமூகச் சூழலை உருவாக்கும் என்பதே என் பெருங்கவலை. அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்க வேண்டிய அரசின் முன்னுரிமைகள் குறித்தே எனது அறிக்கையில் கேள்வி எழுப்பினேன். ஆகவே, தங்கள் கோரிக்கையின் நோக்கத்தை அறியாமல் நான் கருத்துத் தெரிவித்ததாகக் கருத வேண்டாம்.
திரைத்துறையின் தேவையை மட்டும் தாங்கள் முன்வைப்பதுபோல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி எனது கருத்தை முன்வைத்தேன். காலை 6 மணிக் காட்சிக்கு ஆதரவாகத் தாங்கள் கூறியுள்ள காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், தங்கள் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளதால், இதுகுறித்து மேலும் ஏதும் கருத்துச் சொல்லாமல் மௌனமாகிறேன். தமிழ்த் திரையுலகமும், அதனை வாழவைக்கும் தமிழ் மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி" என்று தெரிவித்துள்ளார்.

















