ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அத...
Aamir Khan: ``அதை நினைத்து அப்போது வீட்டிற்கு வந்ததும் அழுவேன்!'' - மனம் திறந்த ஆமிர் கான்
ஆமிர் கான் தற்போது அவருடைய அடுத்தப் படத்திற்கான பணிகளில் இருக்கிறார்.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடனான படத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. கூடிய விரைவில் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் நடத்திய `தி லீடர்ஷிப் சம்மிட்' நிகழ்வில் தன்னுடைய கரியரின் தொடக்க காலம் குறித்தும், அப்போது அவர் எடுத்த தவறான முடிவுகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஆமிர் கான்.

ஆமிர் கான் பேசுகையில், “எனது முதல் திரைப்படமான ‘கயாமத் செ கயாமத் தக்’ (QSQT) மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரே இரவில் நான் நட்சத்திரமாக மாறினேன்.
அதன் பிறகு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் பணியாற்ற விரும்பிய இயக்குநர்களிடமிருந்து வாய்ப்புகள் எனக்கு வரவில்லை.
எனக்கு விருப்பமான இயக்குநர்களின் பட்டியல் ஒன்று இருந்தது. ஆனால் அவர்களில் ஒருவர் கூட என்னை அணுகவில்லை.
அப்போது சூப்பர் ஹிட் படத்திற்குப் பிறகும் என்னை நட்சத்திரமாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. பிறகு எனக்கு வந்தப் படங்களில் நான் நடிக்கத் தொடங்கினேன்.
ஆனால் அந்தப் படங்களின் படப்பிடிப்பு தொடங்கியதும், நான் செய்தது பெரிய தவறு என்பது புரிந்தது. அப்போது நான் செய்து வந்த பணிகளில் எனக்கு அதிருப்தி ஏற்பட்டது.
என்னுடைய முதல் படத்திற்குப் பிறகு எனது சினிமா கரியரின் முதல் இரண்டு ஆண்டுகளில் நான் மகிழ்ச்சியாக இல்லை. எனது உணர்வுக்கு ஏற்றவாறு பணியாற்றியவர்களுடன் ஒத்துப் போகவில்லை.

நான் நடித்த அந்தப் படங்களும் ஒவ்வொன்றாக வெளியாகத் தொடங்கின. அத்தனை படங்களும் தோல்வியே அடைந்தன. நான் ‘ஒன் ஃபிலிம் வொண்டர்’ என்று முத்திரை குத்தப்பட்டேன்.
அந்த தோல்விப் படங்கள் என்னை அந்த நிலைக்குக் கொண்டு வந்தன. ‘இப்படியே எனது கரியர் வீணாகப் போய்விடும்!’ என்று நினைத்தேன். தினமும் மாலையில் வீடு திரும்பியதும் அதை நினைத்து அழுவேன்.
அப்போது, நான் எனது பணியில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்று எனக்கு நானே சத்தியம் செய்துகொண்டேன்.” எனக் கூறியிருக்கிறார்.

















