தொடர் தோல்வி; 3 ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்த் கிஷோரை அழைத்து பேசிய பிரியங்கா காந்...
Bengaluru: பார்ட்டியில் குறுக்கிட்ட போலீஸ்; பைப் வழியாக தப்ப முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய பார்டியில் சச்சரவு ஏற்பட்டதால் ஞாயிறு அதிகாலை ஹோட்டலுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். அதிர்ச்சியில் காவலர்களிடமிருந்து தப்பிக்க வடிகால் குழாய் வழியாக கீழே செல்ல முயன்ற 21 வயது இளம்பெண், பால்கனியிலிருந்து விழுந்து படுகாயம் அடைந்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஆன்டனி புகார் அளித்துள்ளார். அதன்படி, அவருடைய மகள் தனது ஏழு நண்பர்களுடன் சேர்ந்து புரூக்ஃபீல்டில் உள்ள 'சீ எஸ்டா லாட்ஜ்' (Sea Esta Lodge) என்ற ஹோட்டலில் ஒரு பார்டிக்கு சென்றிருக்கிறார்.
அவர்கள் அங்கு மூன்று அறைகளை முன்பதிவு செய்து, அதிகாலை 1 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை கேளிக்கைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த பார்ட்டி நடந்துகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் வசித்தவர்கள் சத்தம் மற்றும் தொந்தரவு காரணமாக 112 உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சத்தமாகவும் அமளியாகவும் பார்ட்டியில் ஈடுபட்டதால் அருகில் வசிப்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாகக் கூறி, அந்தக் குழுவினரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, அந்த இளைஞர்களிடம் பணம் கேட்கப்பட்டதாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டு இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

போலீஸார் வந்ததால் அந்தப் பெண் அதிர்ச்சிக்குள்ளாகி, அறையின் பால்கனியில் இருந்து கீழே இருந்த வடிகால் குழாயைப் பிடித்து இறங்கி நான்காவது தளத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது, சமநிலையை இழந்த அவர் கீழே விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்துத் தந்தையின் புகாரின் அடிப்படையில், 'சீ எஸ்டா லாட்ஜ்' உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பால்கனியில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால், விடுதி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தனது மகளுக்கு நீதி கிடைக்க, அவரது நண்பர்கள், விடுதி ஊழியர்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் பணியாளர்கள் ஆகியோரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தப் புகார் வலியுறுத்தியுள்ளது.
இந்த வழக்கில் பொறுப்பு யார் என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணை நடந்து வருவதாகப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















