"Biggbossக்கு அப்புறம் நிறைய வாய்ப்புகள் வரும்னு நினைச்சேன்.. ஆனா!"- Mr & Mrs Of...
CEOA பள்ளியின் 13-வது தமிழ்நாள் விழா கோலாகலக் கொண்டாட்டம்!
CEOA பள்ளியின் 13-வது தமிழ்நாள் விழா (நவம்பர் 14) அன்று மிகுந்த எழுச்சியுடனும், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் பறைசாற்றும் வகையிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் வீரமாமுனிவரின் பிறந்த நாளான நவம்பர் 8-ஆம் நாளைத் தமிழ்நாள் விழாவாகக் கொண்டாடி வரும் CEOA பள்ளி, இவ்வாண்டு தனது 13-வது தமிழ்நாள் விழாவைச் சிறப்பாக நடத்தியது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராகத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஔவை நா. அருள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினருக்கு உலா முறையில் சிறப்பான வரவேற்பு!
இவ்வாண்டின் விழாக் கருப்பொருளாகச் சிற்றிலக்கியம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிற்றிலக்கியத்தின் ஒரு கூறான 'உலா' முறையில், சிறப்பு விருந்தினர் அழகிய அலங்காரத் தேரில் அமர்த்தப்பட்டு, மேளதாளம், ஆடல், பாடல் எனத் தமிழர் மரபையும் பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐந்து அகவைச் சிறுமியர் முதல் பேரிளம் பெண்கள் வரை பல்வேறு வயதுப் பிரிவினர் பங்கேற்று உலா நிகழ்வைச் சிறப்பித்தனர்.
96 வகைச் சிற்றிலக்கியங்களின் கண்கவர் காட்சிப்படுத்தல்!
தமிழில் உள்ள 96 வகையான சிற்றிலக்கியங்களும் பள்ளியின் அரங்குகளிலும் திறந்தவெளித் திடலிலும் அழகுறக் காட்சிப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு சிற்றிலக்கியத்தின் தனித்துவமும் அதன் இலக்கியச் சிறப்பும் மாணவர்களின் நடிப்பு, நடனம், பாடல் மற்றும் விளக்க உரைகள் வாயிலாக உயிரோட்டத்துடன் எடுத்துரைக்கப்பட்டன.

மேடை நிகழ்ச்சிகளில் தமிழின் இனிமை!
தொடர்ந்து நடைபெற்ற ஏழு மேடை நிகழ்ச்சிகளிலும் சிற்றிலக்கியத்தின் பல்வேறு கூறுகள் வில்லுப்பாட்டு, ஆடல், பாடல் மற்றும் நாடக வடிவங்களில் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. மாணவர்களின் கலைத்திறனும் தமிழார்வமும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
இவ்விழாவிற்குத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஔவை நா. அருள் தலைமை தாங்கினார். பள்ளியின் நிறுவனத் தலைவர் டாக்டர் எம். ராஜா கிளைமாக்ஸ், தலைவர் டாக்டர் ஏ. சாமி, CEOA கல்விக் குழுமத்தின் இயக்குநர்கள், அசோகராஜ் ,விக்டர் தனராஜ், ஜெயச்சந்திர பாண்டியன்,பிரகாஷ் , முதன்மை முதல்வர் செல்வி பி.டி. கலா, முதல்வர் திருமதி மஞ்சுளா மற்றும் கவிஞர் ஹைக்கூ ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தனர்.

தமிழ்மொழியின் தொன்மை, இலக்கிய வளம், பண்பாட்டுப் பெருமை ஆகியவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்துடன் நடைபெற்ற இவ்விழா, மாணவர்களிடையே தமிழ்ப்பற்றையும் இலக்கிய ஆர்வத்தையும் விதைக்கும் மறக்க முடியாத விழாவாக அமைந்தது.
















