BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!
Chicken 65: மெரினேட் சிக்கனை ஃப்ரிட்ஜில் எத்தனை நாள் வைக்கலாம்? உணவியல் நிபுணர் விளக்கம்!
வேலை... வேலை என வாரம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, தினமும் சமைப்பது பெரிய வேலையாக மாறிவிட்டது.
அதனால்தான் சிலர் வீக் எண்டிலேயே தேவையான சிக்கனை வாங்கி, மசாலாக்களைச் சேர்த்து மெரினேட் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுகிறார்கள்.
இன்றைக்குக் கொஞ்சம், நாளைக்குக் கொஞ்சம் என்று ஒரு வாரத்துக்கான சிக்கனை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் சமையல் நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது உண்மைதான்.

ஆனால், மெரினேட் செய்த சிக்கனை எத்தனை நாள்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம்... சாதாரண குளிர்சாதனப் பெட்டியிலா, ஃப்ரீசரிலா... எப்போது கெட்டுப்போகும் போன்ற கேள்விகளுக்கான பதில்களை, உணவியல் நிபுணர் சங்கீதா விளக்குகிறார்.
அமெரிக்க வேளாண்மைத் துறையின் உணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதல்படி, மெரினேட் செய்த சிக்கனை ஃப்ரிட்ஜில் அதிகபட்சம் 2 நாள்கள் வரை வைத்திருக்கலாம்.
அதற்கும் மேல் வைத்தால், மெரினேட்டில் உள்ள அமிலம் போன்றவை இறைச்சியின் திசுக்களை அதிகமாகப் பாதித்து, அவற்றை மென்மையாக்கி, குழைந்துபோன தன்மைக்கு மாற்ற வாய்ப்புள்ளது.
ஃப்ரிட்ஜா? ஃப்ரீசரா?
ஃப்ரெஷ்ஷான கோழி இறைச்சியைச் சாதாரண ஃப்ரிட்ஜில் வைத்தால், 1–2 நாள்களுக்குள் பயன்படுத்திவிடுவது நல்லது.
அதற்கு மேல் வைக்க வேண்டுமானால், சிக்கனை முறையாகப் பேக் செய்து ஃப்ரீசரில், அதாவது -18°C அல்லது அதற்குக் குறைவான வெப்பநிலையில் வைக்கும்போது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளர்வதற்கான வாய்ப்பு குறைவுதான்.

சிக்கனை எப்படி ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது?
சிக்கனை வாங்கியதும் அப்படியே ஒரு தட்டில் வைத்து ஃப்ரிட்ஜுக்குள் வைப்பதைவிட, நன்றாக மூடப்பட்ட பாத்திரத்தில் அல்லது காற்று புகாத கன்டெய்னரில் வைத்துச் சேமிப்பது நல்லது.
இந்தச் சிக்கனைச் சமைத்த உணவுகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றுடன் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்திருக்க வேண்டும்.
சிக்கனில் இருக்கும் கிருமிகள் அதன் சாறு மூலம் மற்ற உணவுகளுக்குப் பரவாமல் இருப்பதுதான் இங்கு முக்கியம்.
ஏற்கெனவே மெரினேட் செய்த சிக்கனைக் கடைகளில் இருந்து வாங்கலாமா?
பாக்கெட் மெரினேட் சிக்கன் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதாது.
பாக்கெட்டில் இருக்கும் பேக்கிங் தேதி, ‘Use by’ அல்லது ‘Expiry’ தேதி ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். குறிப்பாக இந்தத் தேதிகள் எங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன, தயாரிப்பு எவ்வளவு காலத்துக்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கவனிக்க வேண்டும்.
அதோடு, அந்தச் சிக்கனை எந்த வெப்பநிலையில் சேமிக்க வேண்டும் என்று லேபிளில் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் பார்க்கலாம்.
அடுத்து, சிக்கனில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதையும் ஒரு முறை பார்த்துவிட வேண்டும்.

மெரினேட் சிக்கன் என்பதால் மசாலா மட்டும் இருக்காது; உப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
அதனால், குறிப்பாக அடிக்கடி வாங்குபவர்கள் லேபிளில் இருக்கும் ஊட்டச்சத்து விவரங்களையும் கவனிப்பது நல்லது.
பாக்கெட் கிழிந்திருந்தாலோ, வீங்கியிருந்தாலோ அல்லது சாறு கசிந்துகொண்டிருந்தாலோ அதை வாங்காமல் இருப்பது பாதுகாப்பானது.















