செய்திகள் :

நீங்களும் ஆகலாம் IAS: 'சேவையைத் தேர்ந்தெடுங்கள்; பதவியை அல்ல..' - சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாம்

post image

ஆனந்த விகடன் மற்றும் KingMakers IAS Academy இணைந்து நடத்திய 'நீங்களும் ஆகலாம் IAS' விழிப்புணர்வு நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில், குடிமைப் பணித் தேர்வுகளுக்கான தயாரிப்பு முறைகள், வெற்றிக்கான உத்திகள், தேர்வர்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், நிகழ்வில் நடைபெற்ற உதவித்தொகைத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஐந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், கிரேட்டர் சென்னை தெற்குப் பகுதி சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவின் இணை ஆணையரும் ஐபிஎஸ் அதிகாரியுமான டாக்டர் பி. விஜயகுமார், KingMakers IAS Academy இயக்குநர் டாக்டர் சத்யஸ்ரீ பூமிநாதன், குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சியாளர் ஆதில் பெய்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீங்களும் ஆகலாம் IAS
நீங்களும் ஆகலாம் IAS

'முதல் முயற்சியிலேயே வெல்ல முயலுங்கள், தோல்வியால் துவண்டுவிடாதீர்கள்!'

நிகழ்வில் சிறப்புரையாற்றிய டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், "குடிமைப் பணியில் சேர்வதற்கான நோக்கம் குறித்து மாணவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். IAS, IPS உள்ளிட்ட பல்வேறு பணிகளின் பொறுப்புகளைப் புரிந்துகொண்டு உங்களுக்கான இலக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அதில் உள்ள ஆர்வம் மற்றும் பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் பயிற்சி செய்வது, தவறுகளை ஆராய்வது, படித்தவற்றைத் தொடர்ந்து திருப்புதல் (Revision) செய்வது ஆகியவை மிக முக்கியம். முதல்நிலைத் தேர்வைக் கடினமானதாக நினைத்து எதிர்மறையான மனநிலையுடன் அணுகக் கூடாது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற முயல வேண்டும்; அதேநேரத்தில், தோல்வி ஏற்பட்டால் மனம் தளர்ந்துவிடக் கூடாது. முதன்மைத் தேர்வில் விடையெழுதும் உத்தி, நேர மேலாண்மை, குறிப்பிட்ட பக்க வரம்புக்குள் கருத்துகளை வெளிப்படுத்துதல் ஆகியவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, இணையத்தையும் செயற்கை நுண்ணறிவையும் (AI) விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும்; அவற்றுக்கு அடிமையாகிவிடக் கூடாது" என்றும் வலியுறுத்தினார்.

நீங்களும் ஆகலாம் IAS
நீங்களும் ஆகலாம் IAS

'புத்திசாலித்தனத்தைவிடத் தொடர்ச்சியான முயற்சியே முக்கியம்!'

சென்னை தெற்குப் பகுதி சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு இணை ஆணையர் டாக்டர் பி. விஜயகுமார் ஐபிஎஸ் பேசுகையில், "குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெறுவதற்குப் புத்திசாலித்தனத்தை விடத் தொடர்ச்சியான முயற்சியும் நிலையான உந்துதலுமே அவசியம். உங்களுடைய இலக்கில் தெளிவாக இருங்கள்.

மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பது, அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவது போன்ற பொறுப்புகளை வகிக்கின்றனர். காவல் துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். எனவே, நீங்கள் விரும்பும் பணியின் பொறுப்புகளைப் புரிந்துகொள்வது தயாரிப்புக்கு உதவும்.

NCERT பாடப்புத்தகங்கள் மூலம் அடிப்படைகளை வலுப்படுத்துவதுடன், செய்தித்தாள்களை வாசித்து நடப்பு நிகழ்வுகள் குறித்த புரிதலை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாதிரித் தேர்வுகளில் பங்கேற்று, விடைகளை ஆராய்ந்து, விடையெழுதும் திறனை மேம்படுத்த வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்தால், எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்டறிந்து மீண்டும் முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வதைத் தவிர்த்து, மனநலத்திற்கும் உடல்நலத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம்" என்றார்.

நீங்களும் ஆகலாம் IAS
நீங்களும் ஆகலாம் IAS

'தேர்வுக்கான சரியான திட்டமிடல் அவசியம்!'

KingMakers IAS Academy இயக்குநர் டாக்டர் சத்யஸ்ரீ பூமிநாதன் பேசுகையில், "குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என முடிவெடுப்பதே பாராட்டுக்குரிய விஷயம். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் தலைமைப் பண்புகளும் மாணவர்களிடம் வளர வேண்டும். UPSC, TNPSC தேர்வுகளின் கட்டமைப்பு, தகுதிகள், வயது வரம்பு, தேர்வு நிலைகள், பாடத்திட்டம், மதிப்பெண் வரம்புகள் ஆகியவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு, அங்கீகாரம், ஊதியம், மனநிறைவு எனப் பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் அரசு வேலையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், எந்த நோக்கத்துடன் பணியில் இணைந்தாலும் சமூகத்திற்கு நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே முதன்மையானது" என்றார்.

'உங்கள் இலக்குக்கான காரணத்தைக் கண்டறியுங்கள்!'

KingMakers IAS Academy-யில் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சியாளராக இருக்கும் ஆதில் பெய்க் பேசுகையில், "பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதுடன் அவற்றை அடைவதற்கான உள்மன உந்துதலையும் (Self-motivation) வளர்த்துக்கொள்ள வேண்டும். வெளிப்புற ஊக்கம் தற்காலிகமாக உதவலாம்; ஆனால் தொடர்ந்து ஓடத் தேவையான உந்துதல் உங்களுக்குள்ளிருந்தே வர வேண்டும். சுயமாகத் தயாராகும் மாணவர்கள் முதலில் பாடத்திட்டத்தையும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களையும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். பயிற்சி நிறுவனங்கள் வழிகாட்டுதலை மட்டுமே வழங்க முடியும்; அதைச் செயல்படுத்துவதற்கான உழைப்பு மாணவர்களிடமே இருக்க வேண்டும். UPSC, TNPSC ஆகிய இரண்டு தேர்வுகளின் தேவைகளையும் தனித்தனியாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்" என்றார்.

நீங்களும் ஆகலாம் IAS
நீங்களும் ஆகலாம் IAS

தோல்விகளைக் கடந்து வென்றவர்களின் அனுபவப் பகிர்வு!

நிகழ்வில் வெற்றியாளர்களின் அனுபவப் பகிர்வும் இடம்பெற்றது. KingMakers IAS Academy-யின் முன்னாள் மாணவரும், இந்திய அஞ்சல் பணியில் (IPoS) இணைந்துள்ளவருமான ஹம்சா பேசுகையில், "முதல் மூன்று முயற்சிகளில் எனக்கு முதல்நிலைத் தேர்விலே வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் பணியாற்றிக்கொண்டே தயாராகி, ஐந்தாவது முயற்சியில் வெற்றி பெற்றேன். கல்லூரியில் படிக்கும்போதே தேர்வுக்குத் தயாராகத் தொடங்குவது நல்லது என்றாலும், கல்லூரிப் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவு முக்கியமானது; சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் முயற்சியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்" என்றார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த KingMakers IAS Academy-யின் முன்னாள் மாணவர் அன்லின் பேசுகையில், "கட்டடக் கலையில் பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகே குடிமைப் பணிக்கு வந்தேன். குடிமைப் பணியில் சேர்வதற்கான காரணத்தைத் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்வதே தயாரிப்பின் முதல் படி. ஒருவர் எந்தப் பின்னணியில் இருந்து வருகிறார் என்பதைவிட, அவரது தொடர் உழைப்பே வெற்றியைத் தீர்மானிக்கும்" என்றார்.

ஐந்து மாணவர்களுக்குத் தலா ரூ.1.3 லட்சம் கல்வி உதவித்தொகை!

நிகழ்வின் ஒரு பகுதியாக, காலையில் நடைபெற்ற உதவித்தொகைத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் ஐந்து மாணவர்களுக்குத் தலா ரூ.1.3 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அஷ்வினி தேவன், அஜய் தேவன், சத்யா, நெல்லையப்பன், பூர்ணிமா ஆகிய ஐந்து மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற்றனர்.

நீங்களும் ஆகலாம் IAS
நீங்களும் ஆகலாம் IAS

மேலும், பங்கேற்ற மற்ற தேர்வர்களுக்கும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பயிற்சிக் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் துல்லியமான வழிகாட்டுதலையும் கல்வி வாய்ப்பையும் வழங்கும் நோக்கில் இந்நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுற்றது.