தாராபுரம்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோவையில் திடீர் கைத...
Doctor Vikatan: கண்ணாடி... எத்தனை ஆண்டுகளுக்கொரு முறை மாற்ற வேண்டும்?
Doctor Vikatan: பரிசோதனை செய்து கண்ணாடி அணிபவர்கள் அந்தக் கண்ணாடியை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தலாம்...? மீண்டும் எப்போது கண் பரிசோதனை செய்ய வேண்டும்... கூடவே, கண்ணாடியைப் பராமரிக்கும் முறைகளையும் விளக்க முடியுமா...?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

கண்ணாடி அணிபவர்கள் அனைவரும் கட்டாயம் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை (Eye Checkup) செய்துகொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றின் பயன்பாட்டினால், இன்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் கண்ணாடி பயன்படுத்தும் சூழல் உள்ளது.
உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப விழிப்பந்தும் (Eyeball) வளர்வதால், சிறுவயதினருக்கு ஒவ்வோர் ஆண்டும் கண்ணாடி பவரில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே, லேசிக் (LASIK) போன்ற ஒளிவிலகல் அறுவை சிகிச்சைகளை (Refractive Surgeries) 21 வயது அடைந்த பிறகே செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய 'டயாபட்டிக் ரெடடினோபதி' (Diabetic Retinopathy), கண அழுத்த நோய் (Glaucoma), மற்றும் லென்ஸ் மாற்றத்தால் ஏற்படும் 'கண்புரை பாதிப்பு' (Cataract) போன்ற பாதிப்புகள் உள்ளனவா என்பதைத் தெரிந்துகொள்ள இது அவசியம். நோய்களைக் கண்டறிவதுடன், பவர் மாறுபாட்டிற்கு ஏற்ப கண்ணாடியை மாற்றவும் இது உதவும்.

கண்ணாடியைப் பயன்படுத்தாத போது அதை எப்போதும் அதற்குரிய பெட்டியில்தான் (Case/Box) வைக்க வேண்டும். கண்ணாடியை சட்டை அல்லது கைக்குட்டையால் (Handkerchief) துடைக்கக் கூடாது. லென்ஸ்களைத் துடைப்பதற்கென்றே உள்ள பிரத்யேக மைக்ரோஃபைபர் துணியை (Microfiber Cloth) மட்டுமே பயன்படுத்த வேண்டும். லென்ஸ் கிளீனிங் சொல்யூஷன் (Lens Solution) பயன்படுத்திச் சுத்தம் செய்யலாம்.
சொல்யூஷன் இல்லாத பட்சத்தில், சுத்தமான தண்ணீரை (Running Water) பயன்படுத்திக் கழுவலாம். இது கீறல்கள் (Scratches) விழுவதைத் தடுக்கும். லென்ஸ்கள் உருகிப் பாழாகாமல் இருக்க, அதிக வெப்பம் உள்ள பகுதிகளுக்கு அருகில் கண்ணாடியை வைக்கக் கூடாது.
கண்ணாடியைக் கழற்றும் போதும், அணியும் போதும் இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டும். ஒரே கையால் இழுத்துக் கழற்றினால் கண்ணாடியின் ஃபிரேம் லூசாகவாய்ப்புள்ளது. சரியான பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் லென்ஸ்களில் கீறல்கள் விழுவதைத் தடுத்து, கண்ணாடியின் ஆயுளை அதிகப்படுத்தலாம்.
டாக்டர் விஜய் ஷங்கர்:
சென்னை, ஆர்.ஏ.புரம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் சங்கர் ஐ கேர் கிளினிக் வைத்து நடத்துகிறார். இத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.










.jpeg)









