"நீட் தேர்வு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம்" - காரணத்தை விளக்கும் அன்...
Doctor Vikatan: மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதா?
Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர் தினமும் மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக்கொள்கிறார். அது தவிர, ஒருநாள் விட்டு ஒருநாள் பூண்டும் சாப்பிடுகிறார். இவை இரண்டையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், ஹார்ட் அட்டாக்கே வராது என்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை... எல்லோரும் இவற்றை எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

'விருந்தும் மருந்தும் மூன்று நாள்களுக்கு' என்று சொல்வார்கள். அந்த வார்த்தைகளை இந்த விஷயத்தில் பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்ளுங்கள். எந்த மருந்தையும் யாரும் அவசியமின்றி எடுக்கக்கூடாது.
பூண்டும் மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்துக்கு நல்லது செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இவை கொழுப்பு சேராமல் தடுக்கும். இவற்றிலுள்ள உயிர்சத்துகள், ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் இதயநலன் காக்கும். ஆனால், இவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் நிச்சயம் கூடாது.
மீன் எண்ணெயில் வைட்டமின் ஈ சத்தும், பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் இருப்பது உண்மைதான். ஆனாலும் வைட்டமின் சத்தும்கூட அளவு தாண்டும்போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
உதாரணத்துக்கு, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தேவையே இல்லாமல் வைட்டமின் சத்துகளை அதிகம் எடுத்துக்கொள்வதால், அவருக்குப் பிறக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தேவையே இல்லாமல் மருந்துகளையும் சத்து மாத்திரைகளையும் எடுக்கும் பழக்கம், நம் சமுதாயத்தில் பரவிவருகிறது. 'நான் ஒமேகா 3 சப்ளிமென்ட் எடுக்கிறேன், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் எடுக்கிறேன்...' என்றெல்லாம் சொல்லிக்கொள்வதைப் பலரும் ஆரோக்கியமான விஷயமாக நினைக்கிறார்கள்.
அனாவசியமாக எடுக்கப்படும் எந்த மருந்தும் ஆபத்தானதே... அது கல்லீரலையோ, சிறுநீரகங்களையோ பாதிக்கக்கூடும். பூண்டு நல்லது என்பதற்காக அதை தேவையின்றி அதிகம் எடுக்கக்கூடாது. ரசத்திலோ, வேறு சமையலிலோ சேர்த்துச் சாப்பிடுவதில் பிரச்னையில்லை. அது தவிர்த்து பச்சையாகவோ, அளவுக்கதிகமாகவோ அதைச் சாப்பிடுவது அறிவுபூர்வமானதல்ல.
உங்களுடைய இதயம் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்திலும், கொழுப்பு இல்லாமல் இருக்கும் பட்சத்திலும் ஒருவர் ஏன் தேவையின்றி பூண்டையும் மீன் எண்ணெய் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்? ஒருவேளை அந்த நபருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் பட்சத்தில் இவையெல்லாம் அதை மேலும் குறையச் செய்யும்.
எனவே, அவசியமிருந்தால் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். சத்து மாத்திரைகளே என்றாலும் தேவையின்றி எடுப்பதும் அளவுக்கு அதிகமாக எடுப்பதும் அறிவுறுத்தத்தக்கதே அல்ல.
சித்த மருத்துவர் வரலட்சுமி:
சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் பணிபுரிகிறார். இத்துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















