சடலமாக மீட்கப்பட்ட 5 மீனவர்கள்: ``புயல் நேரத்தில் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தத...
Doctor Vikatan: விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த... இந்த உணவுகளை அவசியம் சேர்த்துக்கொள்ளுங்கள்!
Doctor Vikatan: ஆண்களின் விந்தணு ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான சத்துகள், சாப்பிட வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டியவை என ஏதேனும் உள்ளனவா... விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த விரும்புவோர் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்க முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் மகாலட்சுமி

ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை முக்கியமான ஒன்று. ஆனால், அதிக விந்தணுக்கள் இருந்தால் மட்டும் போதாது. அவற்றின் இயக்கம், வடிவம் மற்றும் தரம் ஆகியவையும் முக்கியம்.
விந்தணுக்கள் உருவாக சுமார் இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் தேவைப்படும். உணவுப்பழக்க வழக்கங்கள், உடல் எடை, தூக்கம், மன அழுத்தம், வாழ்க்கைமுறை ஆகியவை விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்தோடு நெருங்கிய தொடர்புடையவை. தொடர்ந்து கருத்தரிப்பதில் பிரச்னைகள் இருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம்.
விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட உணவு வகை அல்லது பானம் மட்டும் போதாது. அன்றாட உணவில் பலவகையான காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், விதைகள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரிவிகித உணவே இலக்காக இருக்க வேண்டும்.
விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த....
துத்தநாகம் (ஜிங்க்): பூசணி விதைகள், எள், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, முட்டை போன்ற துத்தநாகம் (ஜிங்க்) நிறைந்த உணவுகள் ஆண்களின் இனப்பெருக்கச் செயல்பாட்டுக்கு அவசியமானவை.
ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி: ஆன்டிஆக்ஸிடன்ட் என்னும் செல் பாதுகாப்பு சத்துகள் கொய்யாப்பழம், நெல்லிக்காய், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி ஆகியவற்றில் உள்ளன. இவற்றில் வைட்டமின் சி சத்தும் அதிக அளவில் இருக்கும்.
ஆரோக்கியமான கொழுப்புகள் & ஒமேகா-3: கொழுப்பு என்றாலே அது ஆரோக்கியத்திற்கு எதிரானது அல்ல. ஆரோக்கியமான கொழுப்புகள் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும், விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கும் தேவை. ஆரோக்கியமான கொழுப்புகள் வால்நட், பாதாம், ஆளி விதைகள், சியா விதைகள், மற்றும் மீன்களில் இருந்து கிடைக்கிறது. இவற்றில் ஒமேகா-3 என்ற ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இவை விந்தணுக்களின் இயக்கம் மற்றும் தரத்தை வெகுவாக மேம்படுத்துகின்றன.

புரதம் & ஃபோலேட் (வைட்டமின் B9): புரதம் மற்றும் ஃபோலேட் என்னும் பி9 வைட்டமின் சத்து, முட்டை, மீன், பால், தயிர், பாசிப்பயறு, சிறுதானியங்கள் போன்றவற்றில் இருக்கின்றன.
முழு தானியங்கள் & காய்கறிகள்: கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், கீரைகள், பீன்ஸ், கேரட், பீட்ரூட் ஆகியவை உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துகளைக் கொடுக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
துரித உணவுகள், அதிக எண்ணெயில் பொரித்த உணவுகள், திரும்பத்திரும்ப பயன்படுத்தப்படும் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி இவற்றைத் தவிர்க்க வேண்டும். காரணம்... இவை உடல் பருமனை அதிகரித்து வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். விந்தணுக்களின் தரத்தை பாதிக்கக்கூடும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மதுப்பழக்கமும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியம்.
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி தேவை.
ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும்.

மன அழுத்தம் எல்லோருக்கும் இருப்பதுதான். ஆனால், அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை, ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இசை கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது, தோட்டக்கலை போன்ற பிடித்த செயல்களில் ஈடுபடும்போது மன அழுத்தம் தானாக குறையும். இப்படி உணவோடு, வாழ்க்கைமுறை மாற்றங்களிலும் கவனம் செலுத்தினால் விந்தணு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகாலட்சுமி:
திருச்சி, காவேரி மருத்துவமனையில் Senior Clinical Dietitian.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















