விஜய்க்காக அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்; தவெக தொண்டர் கைது; இன்ஸ்பெக்டரைக...
ISRO : 9ம் வகுப்பு மாணவர்களே... இஸ்ரோ உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது! - முழு விவரம்
உலகமே திரும்பிப் பார்த்து வியக்கும் அளவுக்கு ISRO (Indian Space Research Organisation) விண்ணில் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறது. பல நாடுகள் முயன்றும் இயலாமல் போன நிலவுப் பயணத்தையும் ISRO சாத்தியப்படுத்தியது.
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சந்திரயான்-4 மற்றும் நிலவின் துருவப்பகுதியை ஆய்வு செய்யும் Lunar Polar Exploration Mission (LUPEX) போன்ற திட்டங்களிலும் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி, பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் (Gaganyaan) திட்டமும் தயாராகி வருகிறது. 2035-க்குள் இந்தியாவுக்கான சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளும் நடைபெறுகின்றன.

பூமி கண்காணிப்பிற்காக நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கும் NISAR திட்டம், வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான சுக்கிரயான்-1 (Venus Orbiter Mission), சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-L1 மற்றும் பிரபஞ்சத்தின் எக்ஸ்-ரே கதிர்களை ஆய்வு செய்யும் XPoSat என பல முக்கியத் திட்டங்களை ISRO செயல்படுத்தி வருகிறது.
ISRO எப்போதுமே மாணவர்களுக்கு கனவுலகம் தான். இந்தக் கனவுலகத்தில் 2 வாரங்கள் தங்கி பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு. இத்திட்டத்தில் பங்கேற்க பிப்ரவரி 27ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
'யுவிகா 2026' (YUVIKA - Young Scientist Programme) திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த இரண்டு வார இலவச உறைவிடப் பயிற்சி முகாம், எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் ஒரு அருமையான வாய்ப்பாகும்.
"Catch them young" அதாவது இளம் வயதிலேயே திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த துறைகளில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக இஸ்ரோ இந்த திட்டத்தை 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த முகாமில் மாணவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடலாம், விண்வெளி ஆய்வகங்களைப் பார்வையிடலாம். செய்முறைப் பயிற்சிகளில் ஈடுபடலாம்.
இந்த ஆண்டுக்கான (2026) 'யுவிகா' பயிற்சிக்கு பிப்ரவரி 27 முதல் மார்ச் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1, 2026-ம் தேதியின்படி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசுப்பள்ளி, சிபிஎஸ்இ உள்பட அனைத்து மாணவர்களுமே இதற்கு விண்ணப்பிக்கலாம். மே 11 முதல் மே 22 வரை பெங்களூரு, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் திருநெல்வேலி அருகே உள்ள மகேந்திரகிரி உட்பட இஸ்ரோவின் 9 முக்கிய மையங்களில் இந்த இரண்டு வாரப் பயிற்சி நடைபெறும்.

இந்த பயிற்சிக்குத் தேர்வாக எந்த நுழைவுத் தேர்வும் இல்லை! மாணவர்களின் 8-ம் வகுப்பு மதிப்பெண்கள் (50%), ஆன்லைன் வினாடி வினா (10%), அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்பு (10%), என்.சி.சி / என்.எஸ்.எஸ் (NCC/NSS) மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மெரிட் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்தும் சமமான அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
குக்கிராமத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு சென்று சேர வேண்டும் என்பதற்காக, பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேர்வில் 15% கூடுதல் வெயிட்டேஜ் (Weightage) வழங்கப்படுகிறது. தேர்வாகும் மாணவர்களுக்கான தங்குமிடம், உணவு, பயிற்சி உபகரணங்கள் என அனைத்துச் செலவுகளையும் இஸ்ரோவே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் வந்து செல்வதற்கான இரண்டாம் வகுப்பு ஏசி (II AC) ரயில் அல்லது பேருந்து கட்டணமும் திருப்பி வழங்கப்படும்.
தயாரா மாணவர்களே... இஸ்ரோ உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது!



















