Nvidia: உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தொழில்நுட்ப அரசன்; Jensen Huang-ன் எழுச்...
"Online டெண்டர் வேண்டாம் என்பது சட்டவிரோதம்"- ஊழியர் சங்கம்; என்ன நடக்கிறது ஊரக வளர்ச்சித் துறையில்?
அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடும்போது நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ஆன் லைனில் (மின்) மட்டுமே டெண்டர் விட வேண்டுமென 2023 ம் ஆண்டு அரசாணை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. ஆனால் அதை மதிக்காமல் தற்போது மேனுவலாக ஓபன் டெண்டர் விடச் சொல்லி அதிகாரிகள் வாய் மொழி உத்தரவிட்டிருக்கிறார்களாம்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் இது தொடர்பாக துறை உயரதிகாரிகளுக்கு எழுதியிருக்கும் கடிதம் அரசு வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது.
என்ன விவகாரம் என விரிவாகப் பார்க்கலாம்.
மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த அந்தப் பணிகளை அரசு டெண்டர் விட்டு டெண்டரில் குறைவான தொகையில் அந்த வேலையைச் செய்து தரச் சம்மதிக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் தருவதுதான் வழக்கமான நடைமுறை.
எந்த கட்சி ஆட்சியிலிருக்கிறதோ அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்குப் பெரும்பாலும் இந்தக் காண்ட்ராக்டுகள் கிடைத்து வந்ததுதான் கடந்த காலங்களில் நடந்து வந்தது.

கட்சிக்காரர்கள் சம்பாதித்து விட்டுப் போகட்டுமென ஆட்சித் தலைமையும் இதை அனுமதிக்கும்.
ஆனால் அரசியல் பின்புலம் இல்லாத சில நிறுவனங்கள் இந்த டெண்டர் விவகாரத்தில் முறைகேடுகள் நடப்பதாகத் தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வந்ததால் ஒரு கட்டத்தில் டெண்டர் நடைமுறையை ஆன்லைனுக்கு வேறு வழியில்லாமல் மாற்றியது கடந்த திமுக அரசு.
இதன்படி 2023 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அனைத்துத் திட்டப் பணிகளையும் மின் ஒப்பந்த முறை வழியாக மட்டுமே செயல்படுத்த வேண்டுமென்கிறது தமிழக அரசின் அரசாணை.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அமைச்சராக இருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆணையரிடமிருந்து அதிகாரிகளுக்கு ஒரு செய்தி சென்றிருக்கிறது. அதாவது ரூபாய் பத்து லட்சம் வரையிலான திட்டப் பணிகளை திறந்த வெளி ஒப்பந்த முறையில் செயல்படுத்த உத்தரவிடப்பட்டதாம்..

இந்த உத்தரவு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிச் சட்டம் 1998 மற்றும் 2000க்கு எதிரானது என்கிறார் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சீ. காந்திமதிநாதன்.
''அரசு உத்தரவுகள் ஒண்ணுக்கொண்ணு முரணா இருந்தா செயல்படுத்தறப்ப பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும். மின் டெண்டர் மட்டும்தான் விடணும்னு ஏற்கனவே ஆர்டர் இருக்குறப்ப இப்ப 10 லட்சத்துக்குக் குறைவான தொகைன்னா திறந்த வெளி டெண்டர் விடலாம்னு சொன்னா எப்படி?
சில தினங்களுக்கு முன்னாடி நடந்த கானொளிக் கூட்டத்தில் இந்தத் திறந்த முறை டெண்டரை அமல்படுத்தச் சொல்லி வாய் மொழியாகவே உத்தரவிட்டிருக்காங்க. அதை எழுத்து பூர்வமா தாங்கனு கேட்டிருக்கோம்’' என்கிறார் இவர்.

தலைமைச் செயலக வட்டாரத்தில் சிலரிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேச்சுக் கொடுத்தோம்.
‘’ஆளுங்கட்சியைச் சேர்ந்தவங்களுக்குக் காலங்காலமா கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேலைதான். திமுக ஆட்சியில வேற வழியில்லாம மின் டெண்டர் முறையைப் புகுத்தினாங்க. இந்த அரசு வந்ததும் யாரையும் தவறாச் சம்பாதிக்க விட மாட்டேனு முதல்வர் சொன்னார். ஆனா அவருடைய கட்சிக்காரங்க எத்தனை நாளுக்குச் சும்மா இருப்பாங்க? அவங்க அழுத்தம்தான் இந்த மாதிரி ஒரு உத்தரவுக்குக் காரணம்.
இது அமைச்சர்கள் வரையில் முடிவான உத்தரவா அல்லது தலைமை வரைக்கும் தெரிஞ்சுதான் நடக்குதான்னு தெரியல. ஆனா இந்த ஒரு துறையில் இதை அனுமதிச்சா இதையே உதாரணாமா வச்சு எல்லா துறையிலும் கொண்டு வந்துடுவாங்க. பிறகு பழைய கதையே திரும்பிடும்'' என்கிறார்கள்.
திமுக அரசு செய்த முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம் எனத் தொடர்ந்து பேசி வருகிற அமைச்சர்கள் இந்தத் திறந்த வெளி டெண்டர் விஷயத்தில் என்ன சொல்லப் போகிறார்கள்? துறையின் அமைச்சர் ஆனந்த் இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


















