கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்
Serial Update: விசாரித்த போலீஸ்,'நான் அவனில்லை'என்ற நடிகர்; சீரியல் தயாரிப்பில் பிஸி ஆகிவிட்ட நீலிமா
மீண்டும் தயாரிப்பில் பிஸி
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நீலிமா ராணி. வளர்ந்த பின் சீரியல் சினிமா என ஒரு ரவுண்டு வந்தார். ஐம்பதுக்கும் அதிகமான சீரியல்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். நடிப்புக்காக விருதுகளையும் வாங்கியிருக்கும் இவர், ஒருகட்டத்தில் சீரியல் தயாரிப்பாளராக உயர்ந்தார். 'நிறம் மாறாத பூக்கள்' ஜீ தமிழ் சேனலில் இவர் தயாரிப்பில் ஒளிபரப்பான தொடர்தான். அந்தத் தொடருக்குப் பிறகு இன்னொரு சீரியலையும் தயாரித்தார்.
தற்போது இவரது அடுத்த சீரியல் ஒளிபரப்புக்குத் தயாராகிவிட்டது. இன்று (24/11/26) முதல் ஜீ தமிழ் சேனலில் பிற்பகல் 2.30 க்கு ஒளிபரப்பாகவிருக்கிற 'அண்ணாமலை குடும்பம்' நீலிமா ராணியின் தயாரிப்பில் உருவானதுதான்.

ஹீரோவாக `முத்தழகு', `சூர்யவம்சம்' ஆகிய தொடர்களில் நடித்த ஆஷிஷ் சக்ரவர்த்தி நடிக்க ஷாமிலி, `கோலங்கள்' அபிஷேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
திறமையான நடிகையாக வலம் வந்தவர் நீலிமா. மீண்டும் நடிப்பு பக்கம் எப்போது வருவாரென அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதற்கு வாய்ப்பு உள்ளதா என விசாரித்தால், 'மேடம் இப்ப திரும்பவும் தயாரிப்பில் பிஸி' என்கிறார்கள் அவர தரப்பில்.
நான் அவனில்லை
சின்னத்திரையின் பிரபல தம்பதி ராகவ் - ப்ரீத்தா. நடிப்பு இசை என பன்முகத் திறமை கொண்டவர் ராகவ். 'எந்திரன்', `நஞ்சுபுரம்' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கும் ராகவ்விடம் சில தினங்களுக்கு முன் போலீஸ் விசாரணை நடத்தியது. என்ன விவகாரம் என அவரிடமே கேட்டோம். 'சென்னை திருவல்லிக் கேணியில் தனியாக வசித்த முதியவர் ஒருவர் சமீபத்தில் இறந்திருக்கார். அவருடைய உறவினர்கள் சிலர் என்னுடைய போட்டோவை போலீஸுக்கு கொடுத்து 'இவர்தான் அவருடைய மகன்'னு சொல்லியிருக்காங்க.

எங்கிட்ட போலீஸ் கேட்டாங்க. என் அப்பா தவறி பல வருடங்களாகி விட்டது. அந்த முதியவர் யாருன்னே எனக்குத் தெரியாது. அவங்க உறவினர்கள் ஏன் என் போட்டோவைக் காட்டி மகன்னு சொன்னாங்கனும் தெரியலை. இந்தச் செய்தி ரெண்டு மூணு நாள் பயங்கர அப்செட் ஆக்கிடுச்சு. அதேநேரம் அந்த முதியவர் நிலையை நினைச்சு வருத்தப்படவும் செஞ்சேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்தனையும் செஞ்சேன்'' என்கிறார் ராகவ்.
















