``சோனம் சார் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்; தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை..!...
TVK-வில் இணைந்த 6 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மீது `உரிய' நடவடிக்கை! சபாநாயகர் உறுதி அளித்ததாரா?
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்த 6 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் தெரிவித்தனர்.
இந்த 6 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக தரப்பில் ஏற்கனவே சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில் சில விளக்கங்களை கோரி சபாநாயகர் அலுவலகம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இதையடுத்து, அந்த விளக்கங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து பதில் கடிதத்தை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கும், அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் துரோகம் செய்துள்ளனர். குதிரைப் பேரத்தின் மூலம் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். எனவே, அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். சபாநாயகர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்துள்ளோம்,” என்றார்.
தொடர்ந்து பேசிய தளவாய் சுந்தரம், “புகார் மனுவில் இடம்பெற்ற சில அம்சங்கள் குறித்து சபாநாயகர் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கான பதிலை வழங்கியுள்ளோம். கட்சியின் பொதுச் செயலாளருக்கே கொறடா மற்றும் சட்டமன்றக் குழுத் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்,” என்றார்.
மேலும், “எந்த காரணத்திற்காக அந்த 6 பேர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்கள் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு பெற்று வெற்றி பெற்றவர்கள், தற்போது அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்,” என்று குற்றம்சாட்டினார்.
ராஜினாமா செய்துவிட்ட நிலையில் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தபோதே கட்சி தாவல் தடைச் சட்டத்தை மீறியுள்ளனர். இப்படியே ராஜினாமா செய்து கட்சி மாறும் நடைமுறையை அனுமதிக்க முடியாது என்பதால்தான் நடவடிக்கை கோரியுள்ளோம்,” என்றார்.

கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து கேட்கப்பட்டபோது, “எல்லா கட்சிகளிலும் மனக்கசப்பும் கருத்து வேறுபாடுகளும் இருக்கும். தற்போது நடப்பது பங்காளி சண்டை மட்டுமே. கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் வருவதும் வராததும் அவரவர் விருப்பம்,” என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தளவாய் சுந்தரம், “அவர் எங்கள் கட்சியில் அமைச்சராக இருந்தவர். அவர் மீது நாங்கள் ஏன் ஊழல் பட்டியல் வெளியிட வேண்டும்? சபாநாயகர் சட்ட விதிகளுக்குட்பட்டே செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மன்னிப்பு கடிதம் கொடுத்த பின்னரும் ராஜினாமா செய்த இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். அதற்கு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்,” என்றார்.
திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக திருமாவளவன் உள்ளிட்டோர் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டபோது, “அப்படி ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்திருந்தால் அதில் அவர்கள் இருந்தனரா? ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்,” என்று அவர் பதிலளித்தார்.














