"வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை; முன்னாள் காதலனுடன் மனைவி சாட்டிங்" - லாலு பிரச...
’அதிமுக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்!
கோவை விமான நிலையத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நடந்து முடிந்த இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெற்றது. கடந்த காலங்களில் இடைத்தேர்தல் எல்லாம் எடைத்தேர்தல்களாக எடைக்கு எடை பணம் மற்றும் மதுபானம் கொடுத்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற கட்சிகளை பார்த்தோம். அதுபோல இல்லாமல் தற்போதைய தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் கடந்த பொதுத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அ.தி.மு.க தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு வெற்றிகளும் ஆளுங்கட்சிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவர்களை தவறாக சொல்லவில்லை, நல்ல எண்ணத்தில்தான் சொல்கிறேன்.
தமிழகத்தில் நீட் தேர்வு, காவிரி நீர்ப் பிரச்சினை, இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. அடுத்த நான்கு மாதங்களில் தமிழகத்தை எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். மேட்டூர் அணையில் தற்போது 30 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கர்நாடக அரசு உரிய தண்ணீரை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. தமிழகத்தில் அரிசி விலையும் உயர்ந்துள்ளதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செவிலியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். குரூப் 4 தேர்வின் மூலம் 15 ஆயிரம் பேரைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையர் தொடர்பான விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். கனிம வளக் கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசுக்கு நிர்வாக அனுபவம் குறைவாக இருப்பதால், ஏற்கெனவே பணியில் உள்ள அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்” என்றார்.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருந்தும் இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் தவிர்த்தது குறித்த கேள்விக்கு, ”சமூக வலைதளக் கருத்துகளுக்குப் பதிலளிக்க முடியாது” என்றார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க தொடர்கிறதா என்ற கேள்விக்கு, ”தற்போது பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறது” என பதிலளித்தார். தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ”அதுகுறித்த தகவல்கள் அனைத்தும் வதந்திகள். நாங்கள் அமைச்சர் பதவிகளைக் கேட்கவில்லை, கேட்கப்போவதும் இல்லை” எனக் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொடர்பாக மீண்டும் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, ”அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” எனப் பதிலளித்தார்.











