ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களின் வீதியில் இறங்கிய இளைஞர்கள்!
"இப்போதெல்லாம் மின்கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்குது"- தவெக வை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
செங்கல்பட்டில் நேற்று(அக்.31) அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''தற்போதைய ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்றே தெரியாத ஒரு அவல நிலை நீடித்து வருகிறது. மின்சாரத்தை தொட்டால்தான் கடந்த காலங்களில் மக்களுக்கு ஷாக் அடிக்கும். ஆனால் இந்த ஆட்சியில் மின்கட்டணத்தைக் கேட்டாலே மக்களுக்குத் தூக்கிவாரிப் போடும் அளவிற்கு ஷாக் அடிக்கிறது.

நான் பேசி முடிக்கிற வரைக்குமாவது இந்த ஆட்சியில் மின்சாரம் தடைப்படாமல் இருக்க வேண்டும். நமது மாவட்டச் செயலாளர் மிகவும் உஷாராக இருக்கிறார். இந்தத் தறிகெட்ட ஆட்சியைப் பற்றி நன்றாகத் தெரிந்ததால், எதற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று சொந்தமாக ஜெனரேட்டர் வசதி செய்து வைத்துள்ளார்.
மக்கள் நிம்மதி வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கச் சென்ற இடத்தில் கூட மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் கோவிலுக்குச் சென்றபோது கூட இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் கடந்த திராவிட முன்னேற்ற ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்று கூறிவிட்டு, தற்போது அதற்குப் பதிலாக 41 ரூபாய் 50 காசுகளுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது ஏன்?.
இது சுமார் 110 சதவீத விலை உயர்வு இல்லையா? மக்கள் வரிப்பணத்தில் இப்படி ஆயிரம் ஆயிரம் கோடிகளை வீணடிப்பது ஏன்?. மின்சாரத் துறையில் ஏற்கனவே 2 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படித் தவறான நிதி மேலாண்மை மூலம் மக்களைத் துயரத்திற்கு உள்ளாக்கும் தற்போதைய அரசுக்கு, வரும் நாட்களில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அதிமுக மீண்டும் எழுச்சி பெறும்'' என்று பேசியிருக்கிறார்.

















