செய்திகள் :

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

post image

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்களை பேட்டிக்காக அணுகினோம். அவர் பேசியவை.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

திருப்பரங்குன்றத்தில் மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டிருக்கிறார். தமிழக அரசின் வாதங்கள் நீதிமன்றத்தில் எடுபடாமல் போயிருக்கிறதே?

நீதிமன்றத்தின் உத்தரவை கடுகளவும் ஏற்க முடியாது. தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்கிற பிடிவாதத்தில் இயந்திரத்தனமாக நீதிபதிகள் இந்த வழக்கை அணுகுகின்றனர். வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டுவிட்டு, தர்காவுக்கு அருகே புதிய இடத்தில் தீபத்தை ஏற்ற இப்போது என்ன தேவை இருக்கிறது? அதை இந்த நீதிமன்றம் ஆய்ந்து பார்க்க வேண்டாமா? நீதிபதி தான் கூறிய உத்தரவை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டுமென மத்திய தொழில்பாதுகாப்பு படையையே அனுப்புகிறார். இப்படி ஒவ்வொரு நீதிபதியும் கிளம்பினால் இதற்கான எல்லைதான் என்ன?

அரசியல் சாசனப்படி சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கையில் இருக்கிறது. பதட்டமான சூழல் ஏற்படும் போது இந்த அரசை கைக்கட்டி வேடிக்கைப் பார்க்க சொல்கிறீர்களா? இப்படி ஒவ்வொரு நீதிபதியும் ஒரு உத்தரவைப் பிறப்பித்து ஒரு படையை அனுப்பினால் அது மாநிலங்களின் அதிகாரத்துக்குதான் கேடு விளைவிக்கும். நீங்கள் அவர்கள் கூற்றுப்படியே யோசித்துப் பாருங்கள்.

திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு
திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு

ஆகமவிதிப்படி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பார்கள். அந்த நாள்தான் முடிந்துவிட்டதே. இன்று ஏற்றப்போவது சுவாமிநாதன் தீபம். தன்னுடைய உத்தரவை தமிழக அரசு பின்பற்றாதது அவருக்கு கோபம். அந்த நீதிபதியின் பிடிவாதக் குணத்துக்காக ஏற்றும் தீபம்.

நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. தமிழக அரசுக்கும் எங்களுக்கும்தான் பிரச்னை. அரசு நீதிமன்றத்தை பின்பற்றியிருந்தால் எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது என வலதுசாரிகள் கூறுகிறார்களே?

இதை எப்போது சொல்கிறார்கள்? இன்றைக்குதான் சொல்கிறார்கள். மதவாதிகள் எப்போதும் இப்படித்தான் தந்திரமாக சூட்சமமாக பேசுவார்கள். நேற்று அவர்களை மலைக்கு அனுமதித்திருந்தால், அயோத்தியில் நடந்ததுதான் இங்கேயும் நடந்திருக்கும். சிக்கந்தர் தர்காவின் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றிவிட்டு அந்த தர்காவையே இல்லாமல் ஆக்கியிருப்பார்கள்.

திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம்
திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம்

உச்சநீதிமன்றத்தில் உறுதி கொடுத்துவிட்டுதான் பாபர் மசூதியை நோக்கியும் சென்றார்கள். ஆனால், எதையாவது மதித்தார்களா? ஒருவேளை அவர்களை மலைக்கு மேல் அனுமதித்திருந்தால் இன்று தமிழகம் எப்படியிருந்திருக்கும்? இவ்வளவு நாள் முஸ்லீமுக்கும் எங்களுக்கும் பிரச்னை என்றுதானே அவர்கள் பேசி வந்தார்கள்? அந்த விதத்தில் தமிழக அரசு நேற்றைய சூழலை திறம்பட சமாளித்து பதட்டத்தை தணித்தது.

தொடர்ச்சியாக வலதுசாரி அமைப்புகள் மதுரையை தங்களின் இந்துத்துவா சோதனைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்களே. அதைப் பற்றிய உங்களின் எண்ணம் என்ன?

பலவிதமான கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் பாஜகவால் தமிழகத்தில் அரசியல்ரீதியாக எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. அதனால்தான் அயோத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி பல மாநிலங்களில் அரசியல் லாபத்தை அறுவடை செய்ததைப் போல இங்கேயும் முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு கோவில். அந்த விதத்தில் திருப்பரங்குன்றத்தையும் அயோத்தியாக மாற்ற வேண்டும் என்கிற அவர்களின் தீய நோக்கம் என்றைக்கும் பலிக்காது.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

திமுக அரசுதான் வலதுசாரிகளை இவ்வளவு பெரிதாக வளர இடம் கொடுக்கிறது. இது அவர்களும் அரசியல்ரீதியாக பலனை கொடுக்கிறது என ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறதே?

இது மேம்போக்கான பார்வை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் அரசியலைத் தாண்டி நீண்ட கால நோக்கத்தோடு நுணுக்கமாக தீவிரமாக செயல்படுபவை. ஒரு ஊரில் 'வெறுங்கையோடு வாங்க வெள்ளிக்குடத்தோடு போங்க...' என ஒரு போஸ்டர் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். கோவிலில் கலசம் தூக்குவதற்காக அழைப்பு விடுக்கும் போஸ்டர் அது.

வெள்ளிக்குடம் கிடைக்கும் என நூற்றுக்கணக்கான பெண்கள் செல்வார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கும் அரசியல் அவர்களுக்கு தெரியாது. இந்த மாதிரி தந்திரமாக நுணுக்கமாக ஏராளமான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். சாம, பேண, தான, தண்டம் என எல்லாவிதத்திலும் அவர்களுக்கு முயற்சிக்கிறார்கள். மத்திய அரசில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதிகாரம் கையில் இருக்கிறது. அளவுக்கதிகமான பணம் இருக்கிறது. அதனால் தமிழகத்தில் நுழைய கடுமையான முயற்சிகளை எடுக்கத்தான் செய்வார்கள்.

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபம் விவகாரம்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். அடுத்தக்கட்டமாக இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்?

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய பல்வேறு தீர்ப்புகள் பாரபட்சமானதாகவும் ஒரு தரப்பாகவும் இருந்திருக்கிறது. குறிப்பாக,அவை மதவாத சக்திகளுக்கு ஆதரவானதாக இருந்திருக்கிறது. அது அரசியல் சாசனத்துக்கும் அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கும் எதிரானது. அதனால் அவர் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவை. தலைமை நீதிபதியை சந்தித்து சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து வலியுறுத்துவோம்.

மதுரை மக்கள் இந்த விவகாரத்தை எப்படி அணுகுவதாக பார்க்கிறீர்கள்?

நேற்று பதட்டத்தை ஏற்படுத்திய அந்த கும்பலில் பெரும்பாலானோர் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். பொதுமக்கள் வழக்கம்போல கோவிலுக்கு செல்லத்தான் வந்தார்கள். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். பாரத் மாதா கீ ஜே என கோஷம் போட்டவர்களை காவல்துறை அப்புறப்படுத்துகையில் அங்கே எப்படியொரு கைத்தட்டல் கேட்டதென்று. மதுரையின் பொதுமக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்களின் வெறுப்பரசியலுக்கு அவர்கள் இரையாகமாட்டார்கள்.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

மதம் சார்ந்த இந்த மாதிரியான விவகாரங்கள் 2026 தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக ஏற்படுத்தாது. 2021 லும் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில்தான் இருந்தார்கள். என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதேதான் இப்போதும். சேராத இடம்தனில் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததை போல நிற்கிறது அதிமுக. மாநிலமே விவாதிக்கும் இந்த விவகாரத்தில் மக்கள் பக்கம் நின்று பேசாமல் இருக்கிறது அதிமுக. குறுகிய தேர்தல் லாபங்களுக்காக நீண்ட கால அடிப்படையில் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்காமல் இருப்பது மோசமான அணுகுமுறை.

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க