ரூ.15 கோடி குதிரை பேர புகார்: MLA முஸ்தபாவின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை; அதி...
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: `ஆட்சி அமைக்கப்போவது யார்?' - தொடரும் இழுபறி - என்ன நடக்கிறது?
இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசை அமைப்பதில் பெரும் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 27-ம் தேதி 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நெதன்யாகுவும், கெடி ஐசன்காட்டும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில், எந்தவொரு கட்சியின் கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. நெதன்யாகுவின் லிகுட் கட்சி 27 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அவரது மதவாத-தேசியவாதக் கூட்டணிக்கு 53 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

மறுபுறம், ஐசன்காட்டின் வலது மற்றும் இடதுசாரி எதிர்க்கட்சிகளின் கூட்டணி 48 இடங்களைக் கைப்பற்றியது. அதேவேளையில், இஸ்ரேலின் சிறுபான்மை அரபு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு முக்கியக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 19 இடங்களை வென்று திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன.
இப்படியான சிக்கலான சூழல்களில் நெதன்யாகுவின் நீண்டகால கூட்டாளியான தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதக் கட்சியின் பரிந்துரையும் முக்கியத்துவம் பெரும். ஆனால், இந்தக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு யாரையும் பரிந்துரைக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, புதிய அரசை அமைக்கும் வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கும் முக்கியப் பொறுப்பு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிற்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, அதிபர் ஐசக் ஹெர்சாக்கி நாடாளுமன்றத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தீவிர ஆலோசனை நடத்தினார். அரபு சமூகக் கட்சிகள் கெடி ஐசன்காட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், 67 ஆதரவு உறுப்பினர்களுடன் கெடி ஐசன்காட் முன்னிலை வகிக்கிறார். 46 உறுப்பினர்கள் மட்டுமே நெதன்யாகுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், புதிய அரசை அமைப்பதற்கான வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பது குறித்து இன்னும் தெளிவு பிறக்கவில்லை என நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டங்களின் முடிவில் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் ஹெர்சாக், ``எண்ணிக்கை ஆதரவு பார்ப்பதற்குத் தெளிவாகத் தெரிந்தாலும், பல்வேறு கட்சிகளுக்கு இடையே பரஸ்பர எதிர்ப்புகளும், கூட்டணிகளுக்குள் உட்கட்சிப் பூசல்களும் நிலவுவதால் அரசை அமைப்பதில் சிக்கல் நீடிப்பதற்குக் காரணம். எனவே, வார இறுதி நாட்களில் சில முக்கியக் கட்சித் தலைவர்களுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும் நபரின் பெயரை அறிவிப்பேன்" என்றார்.
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும் வேட்பாளருக்குப் புதிய கூட்டணியை உருவாக்க 28 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 14 நாள்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். புதிய அரசு அமையும் வரையிலோ அல்லது மீண்டும் தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டாலோ, அதுவரை பெஞ்சமின் நெதன்யாகுவே இடைக்காலப் பிரதமராகத் தொடர்வார். ஆட்சி அதிகாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ள பிரதமர் நெதன்யாகு, தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, வாக்கு எண்ணிக்கையைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கி வருகிறார்.

மேலும், கெடி ஐசன்காட்டுக்கு ஆதரவு தெரிவித்த அரபுக் கட்சித் தலைவர்களை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டாளிகள் கோரிக்கை விடுத்து வருவது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தேர்தலில் எந்தவொரு முறைகேடும் நடக்கவில்லை என்றும், ஜனநாயகத்தின் அடித்தளமான அமைதியான அதிகார மாற்றத்தைப் பாதுகாக்க தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் இஸ்ரேல் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் நீதிபதி நோம் சோல்பர்க் தெளிவுபடுத்தியுள்ளார்.
அடுத்த பிரதமர் யார் என்பது இஸ்ரேலில் தொடர் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














