``கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.!" - கார்த்தி சிதம்...
உத்தரகாண்ட் தேர்தல்: "5.2 லட்சம் பெண்களுக்குத் தலா ரூ.20 ஆயிரம்" - பாஜக அரசு அறிவிப்பு
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாநில அரசு 10 ஆயிரம் நிதியுதவி திட்டத்தை அறிவித்தது. இதே போன்று ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெண்களுக்கு மாத அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வரை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது.
அதே முறையைப் பின்பற்றி உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. அங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க முதல்வர் புஷ்கர் சிங் பெண்களுக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.
இதன் கீழ் சுயஉதவி குழுக்கள் (எஸ்எச்ஜி) மற்றும் சுயவேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 5.23 லட்சம் பெண்களுக்குத் தலா ரூ.20,000 வழங்கப்படும். முதல் தவணை ரூ.10,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு டிசம்பரில் நேரடியாக வரவு வைக்கப்படும். இரண்டாவது தவணை தேர்தலுக்குப் பிறகு வழங்கப்படும்.

இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பாரத் சிங் செளதரி கூறுகையில், ''சுய உதவிக்குழுக்கள், சுயதொழில், கிராமப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட பெண்களுக்கு முதல் தவணையாக 523 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இது தவிர மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலம் தனிநபர்களுக்கு வட்டியில்லாமல் ரூ.1 லட்சமும், சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சமும் வட்டியில்லா கடன் வழங்கப்படும். நகர்ப்புற பெண்களுக்கெனத் தனி நிதி உதவி திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தும்'' என்று தெரிவித்தார்.
உத்தரகாண்ட் வாக்காளர்களில் பெண்கள் கிட்டத்தட்ட 48% ஆகும். மொத்தமுள்ள 72.8 லட்சம் வாக்காளர்களில் 37.93 லட்சம் ஆண்கள் மற்றும் 34.84 லட்சம் பெண்கள்.
அவர்களில் 5.2 லட்சம் பேருக்குத் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இது போன்ற மகளிர் குழுக்களில் சேராத பெண்களுக்கு ஒரு லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்து இருப்பது பெண் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் அறிவிக்கப்பட்டது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஐந்தாண்டுகளில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க இத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் கூறுகையில், “கடந்த ஒரு வருடமாக, தேர்தலுக்கு முன்பு, பாஜக அரசு தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் எங்கள் சகோதரிகளுக்குக் கொஞ்சம் பணம் தரும் என்று நான் கூறி வந்தேன்.
அது இறுதியில் உண்மையாகி விட்டது. பீகாரில் அது வெற்றிகரமாக இருந்தது, ஆனால் அது இங்கு நடக்காது. பணம் கொடுத்தால் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் பெண்கள் அதை ஏற்க வேண்டும். வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து அந்தப் பணம் வழங்கப்படுகிறது. எனவே, பயனாளிகள் அதை ஏற்றுக்கொண்டு, வளர்ச்சி மற்றும் நலனுக்காக மட்டுமே வாக்களிக்க வேண்டும்” என்றார்.













