தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை...
எரிபொருள், மரம் மற்றும் நிலக்கரி தேவைகள்! மீன்வளம்; சுர்க்கி உற்பத்தி| மேட்டூர் அணை ஓசை 33
அணையின் கட்டுமானத்திற்கு சுண்ணாம்புக் கலவைக்குப் பதிலாக சிமெண்ட் கலவை பயன்படுத்துவது என்று முடிவு எடுத்த பிறகு முன்னர் முடிவு செய்திருந்த படி சுண்ணாம்பை எரிப்பதற்கு அதிக அளவு எரிபொருள் தேவைப்படாது என்ற நிலை ஏற்பட்டது. மேலும் எரிபொருள் தேவை ஒப்பீட்டளவில் குறைந்த தேவையுள்ள பொருளாக மாறியது. அதற்காக மர எரிபொருள் பயன்படுத்தப்பட்டது.
இந்த எரிபொருளின் முக்கிய மூன்று நோக்கங்கள்:
1. சுர்க்கி தயாரிப்பதற்காக செங்கல் உற்பத்தி.
2. பணியாளர்களுக்கு உள்ளூர் விற்பனை.
3. நீராவியில் இயங்கும் ஆலையில் தீயை உண்டாக்க!
இந்த எரிபொருள் மேட்டூருக்கு அருகில் பல ஆதார இடங்களில் இருந்து பெறப்பட்டது.
1. அணையில் நீரில் மூழ்கக்கூடிய பகுதிக்குள் இருந்து பெறப்பட்ட மரங்கள்.
2. அருகில் உள்ள பாலமலை பகுதி மலைகளில் இருந்து பெறப்பட்ட மரங்கள்.
3. வருவாய் துறையில் புறம்போக்கு நிலங்களில் இருந்து.
4. முகாம் பகுதியில் உள்ள பழைய மரங்கள்.
வனப்பகுதியில் உள்ள "கூபேக்கள்" ஒரு ஏக்கருக்கு ரூ 7/- என்ற அளவில் அங்கிருந்து ஏழு டன் மரங்கள் மகசூல் கிடைத்தது. வருவாய் புறம்போக்குகள் ஒரு ஏக்கர் ரூ 5/- க்கு குத்தகைக்குப் பெறப்பட்டு அதில் மகசூல் ஒரு ஏக்கருக்கு 5 டன் கிடைக்கப்பெற்றது. வனத்துறை மிகக் கடுமையான விதிகளை பின்பற்றியதால், அணைத் திட்ட ஊழியர்களின் மேற்பார்வையில் மரங்கள் வெட்டப்பட்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் மரங்கள் பெறப்பட்டது!

அணைத் திட்ட ஆரம்பத்திலிருந்து மார்ச் 1934-ம் ஆண்டு வரை பல்வேறு வழிகளில் பெறப்பட்ட எரிபொருள்களில் மொத்தம், 13,763 டன்கள் மரங்கள் பயன்படுத்தப்பட்டன! இதில் மீதமிருந்த மரம் 76 டன்கள் என அரசு பதிவேட்டில் இருப்பாக குறிக்கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டில் இப்போது சொந்த லாபத்திற்காக காட்டையே அழித்து மரங்களை முழுவதுமாக வெட்டி லாரிகள் மூலம் கடத்துவதை தொழிலாக கொண்டவர்களை செய்திகளின் மூலமாக நம்மால் தொடர்ந்து அறிய முடிகிறது. ஆனால், ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் நன்மைக்காக கட்டப்பட்ட அணைக்காக மிகவும் தேவையென பயன்படுத்திய மரங்களின் எடை மிகக் குறைவு என்பதை கண்ணுற்றாலும், மீதமுள்ள மரங்களையும் ஒழுங்காக கணக்கு வைத்து அதை பாதுகாத்து வைத்த இந்த முன்னோர்களுக்கு நாம் ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம்.
நிலக்கரி மற்றும் மரக்கறி போன்ற ஒர்க் ஷாப் மேலும் ரயில் என்ஜின்களுக்குத் தேவையான எரிபொருட்கள் மெட்ராஸிலிருந்து ரயில் மூலமாக நேரடியாக மேட்டூர் அணை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மீன் வளர்ப்பு மேம்பாடு குறித்த சுருக்கமான ஆனால் சுவாரசியமான குறிப்பு சென்னை மீன்வளத்துறை இயக்குநரால் வழங்கப்பட்டுள்ளது. அணை கட்டி முடித்த பிறகு மீன் வளத்தை பெருக்கும் வகையில் இயக்குநர் அந்தக்காலத்தில் வழங்கிய அந்த குறிப்பை வாசிக்கும் முன், மேட்டூர் அணை கட்டும்போது மேட்டூரில் காவிரி ஆற்றில் காணப்பட்ட மீன்களின் தகவல்கள் குறித்து அறிந்து கொள்வது பல வாசகர்களுக்கு ஆர்வம் தரும் விடயமாக இருக்கலாம்.
இன்றும் (2026ல்) மேட்டூர் அணையில் பிடிக்கும் மீன்கள் உள்ளூரிலும் பல வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வளர்ச்சி அன்றே திட்டமிட்டு செயல்படுத்தியதின் நல் விளைவாகும்!

அணை கட்டப்படுவதற்கு முன்பு ஆற்றில் உள்ள மீன்கள் ஆற்றின் வழியாக மேலும் கீழும் சுதந்திரமாக செல்ல முடியும். இது மீனின் இயல்பு குணம். ஆனால் ஆற்றின் சுவர் ஒரு அளவுக்கு ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமாக கட்டப்பட்ட பிறகு அவற்றால் மேல் நோக்கி செல்ல முடியவில்லை. செயற்கையான சுவர் இயற்கையான மீன்களின் செயல்பாட்டை தடுத்தது. அதன் விளைவாக மிக அதிக அளவிலான மீன்கள், கீழே உள்ள ஆற்று நீரில் அப்போது வளர நேரிட்டது.
1932-ல் கீழ்மட்ட சப்ளை கால்வாய் வெட்டப்பட்டு, மேல்நிலை மதகுகள் வழியாக நீர்த்தேக்கத்தை ஆற்றுடன் இணைக்கும் போது அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டன. அப்போது வெவ்வேறு வகைகளில் அனைத்து வகையான மீன்கள் கால்வாயை நீந்தி மதகுகளின் மறுபுறம் குதித்தன. அந்த சமயத்தில் லட்சக்கணக்கான மீன்கள் ஏரியை சென்றடைந்தன.
மதகுகள் வழியாக தண்ணீர் பாய்வது மிகவும் அதிக பாய்ச்சலாக இருந்தது. தன்னியல்பாக மீன்கள் நீரோட்டத்தை எதிர்த்து மதகுகள் வழியே அணைக்குள் குதிப்பது காண்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது என்று தன் சுய அனுபவத்தை எழுதுகிறார், அப்போது மேற்பார்வை பொறியாளராகப் பணியாற்றிய "பார்பர்". அதைக் கண்ட அவர் மீன் தாவி குதித்து நீர்த்தேக்கத்தை அடைய தற்காலிகமாக "ஸ்லீப்பர் கட்டைகளைக்" கொண்டு ஒரு ஏணி போன்ற அமைப்பை மதகுகளுக்கு இடையில் ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஏராளமான மீன்கள் அணையின் கீழ் உள்ள ஆற்றில் இருந்து, நீர் தேக்கத்திற்கு தாவிச் சென்றது!
ஒரு நிமிடத்திற்கு சுமார் 40 மீன்கள்
ஒரு நிமிடத்திற்கு சுமார் 40 மீன்கள் என்ற அளவில் நல்ல "சைஸ்" உள்ள மீன்கள் இரவு பகல் எந்நேரமும் தொடர்ந்து இரண்டரை மாத கால அளவு நீர் தேக்கத்திற்குள் தாவிக்குதித்து சென்றன! இவை 3 அல்லது 4 மில்லியன் அளவுக்கு அதாவது சுமார் 40 லட்சம் மீன்கள் ஏணியைப் பயன்படுத்தி ஆற்றிலிருந்து நீர்த்தேக்கத்துக்குள் குதித்தன என்று அளவிட்டனர்! இதை கணக்கெடுத்து குறித்தும் வைத்துள்ளது பிரிட்டிஷ் SYSTEM எனும் அமைப்பு முறையின் சிறப்பை வெளிப்படுத்துகிறது அல்லவா?
இந்த நிகழ்வு ஒரு ஆச்சரியமான செய்தியை தெரிவிக்கிறது. மீன்கள் எப்போதும் நீரோட்டத்தை எதிர்த்து எதிர்த் திசையில் பயணம் செய்யவே விரும்பும். அதுவே மீன்களின் இயல்பு. அது இங்கு நிரூபணம் ஆனது. அதற்கடுத்த வருட சீசன்களில் இது போன்ற அமைப்பு ஏற்படுத்திட இயலவில்லை என்கிறார் பொறியாளர். காரணம் தொடர்ந்து எழுப்பப்பட்ட அணையின் உயரம் வேகமாக உயரே சென்றது. ஏணி அமைப்புகளை ஏற்படுத்த இயலா வண்ணம் சூழ்நிலை மாறியது. அந்த சமயத்தில் ஏணியை பயன்படுத்தி கடந்து சென்ற மீன்களின் பெரும்பாலானவை "கர்னாட்டிக் கெண்டை" மற்றும் "லேபியோ" ஆகும். "மஹசீர்" என்ற வகை மீன்கள் காணப்பட்டன. இந்த வகை மீன்களில் ஒரு மீன் 25 பவுண்டு எடை வரை வளரும் என்ற செய்தி பெறப்பட்டாலும் அதுவரை பிடிபட்ட மீன்களில் அதிகபட்சமாக ஒரு மீன் 13 பவுண்டு எடை கொண்டதாக கிடைத்தது என்பது தரவு.

மேட்டூர் அணையின் ஆய்வுப் பயணத்தில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளின் ஊடே காவிரி ஆற்றில் பயணிக்கும் போதும், ஒகேனக்கல் அருவியின் கீழ் பள்ளத்தாக்குகளில் ஏராளமான மீன்கள் மிதந்து செல்வதை பார்க்க முடிந்தது என்ற குறிப்பின் மூலம் ஆற்றிலும், அணையிலும் அபரிமிதமான மீன் இருப்பு இருந்ததில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் பதிவு செய்திருக்கின்றனர்.
மீன்வளத்துறை இயக்குநர் சில முன்மொழிவுகளை பிரிட்டிஷ் அரசுக்கு அப்போது சமர்ப்பித்தார். முறையாக அமைப்பு ரீதியில் செயல்பட்டால் அரசுக்கு ஏராளமான நிதி வருவாய் கிடைக்கும் என்ற அவரது முன்மொழிவு அக்கறையுடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் இந்த முக்கியமான விஷயம் அரசால் இன்னும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது எனவும் அவரது ஆதங்கத்தையும் அதில் காண முடிகிறது. ஆனால் இது நடந்தது 1936ல்.
இயக்குநரின் அறிக்கை:-
மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மீன்பிடி வளர்ச்சி குறித்து அதன் மீன்வளத்துறை இயக்குநர் ஓர் அறிக்கையை அப்போதைய அரசுக்கு சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் சுருக்கமான விவரங்கள் :
1. மேட்டூர் நீர்த்தேக்கம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் நான்காவது பெரிய அணையாகும். 60 சதுர மைல் பரப்பளவில் நீர் தேங்கி நிற்பதும், அணையின் சராசரி ஆழம் 50 அடியாகவும் இருக்கிறது.
2. அணை கட்டப்பட்ட காவிரி ஆற்றில் நிறைய மீன்வளம் இருப்பது அனைவரும் அறிந்ததே!
3. 1919 -ல் "கர்னல் ரிவர்ட் கர்னாக்" என்ற பிரிட்டிஷார் 119 பவுண்டு எடையுள்ள "மஹசீர்" என்ற வகை மீனை தற்போது அணை அமைந்திருக்கும் பகுதிக்கு சற்று மேல் புறம் பிடித்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. இந்த எடையை கொண்ட மீன் பிடிபட்டது இந்தியாவில் ஒரு சாதனையாக அப்போது போற்றப்பட்டது. இதோடு சேர்ந்து கார்ஃப், லேபியோ, கேட் ஃபிஷ் மற்றும் இந்திய கெண்டை வகை மீன்கள் மேட்டூர் ஏரியில் காணக் கிடைக்கின்றன.
5. கவனமாக எடுத்த ஆய்வுகளின் படி இந்த மேட்டூர் ஏரியில் சுமார் 60 வகையான மீன் இனங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொருளாதார ரீதியில் நல்ல விலை கிடைக்கக்கூடிய வகைகளாகும்.
6. மேட்டூர் அணையில் மீன் வளர்ப்பு லாபம் தரும் தொழிலாக இருக்குமா என்ற சந்தேகமே தேவையில்லை. ஏனெனில், இதே காவிரி ஆறு பாயும் தஞ்சையில் "வல்லம்" என்ற கிராமத்தில் ஆழமில்லாத ஒரு குளம் வெட்டி அதில் திரு. H.S. தாமஸ் என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் 1000 பவுண்ட் எடை உள்ள மீன்களை வளர்த்து விற்பனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அது அப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
7. அதே சமயத்தில் 60 சதுர மைல் சுற்றளவு நீர் கொண்ட மேட்டூர் அணையில் நல்ல உணவாகக் கூடிய பலதரப்பட்ட மீன் வகைகளை அறிவியல் பூர்வமாகவும் வளர்க்க முற்பட்டால் சுமார் 17,000 டன் மீன்கள் இதில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
8. ஜெர்மனியில் நன்றாக பராமரிக்கப்படும் ஒரு மீன் வளர்ப்பு குளத்தில் இயற்கையான உணவளித்து நல்ல மகசூல் பெறுகிறார்கள். அந்த அடிப்படையில் மேட்டூர் நீர்த்தேக்கம் ஆண்டுக்கு 3840 டன் மீன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். ஆனால், ஜெர்மனி போன்ற குளிர் பிரதேசங்களில் கோடை மாதங்களில் மட்டுமே மீன்கள் நன்கு வளரும். இந்த மீன்கள் இந்தியா போன்ற வெப்ப மண்டல பிரதேசங்களில், மகசூல் இதற்கும் அதிகமாகவே எதிர்பார்க்கலாம்.
9. மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு பவுண்டு விற்கும் விலையில் 25 சதவீதம் விலை என்று ஒரு பவுண்டுக்கு ஒரு அனா என்ற விகிதத்தில் கணக்கிட்டால் கூட குறைந்த பட்சம் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் ஒரு வருடத்திற்கு விற்று ஐந்தரை லட்சம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
10. இயக்குநர் அவர்களின் புள்ளி விவர அடிப்படையில் கணக்கிட்டால் ஆண்டுக்கு இரண்டரை கோடி வருமானம் கிட்டும். இது நிச்சயமாக அந்த அளவு விரிந்த பரந்த பகுதியைக் கொண்டது.
11. ஒப்பீட்டளவில் மிகச் சிறிய நீர் பாசன நீர்த் தேக்கமான மதுராந்தகம் குளம் சுமார் 4 சதுர மைல் பரப்பளவு கொண்டது. அடிக்கடி இங்கு நீரின்றி வறண்டு விடும். குத்தகை தாரர்கள் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 2500-க்கு குத்தகைக்கு வழங்கப்படுகிறது. அதோடு மீனவர்கள், காவலாளிகள் மற்றும் வலைகளை அவர் வழங்க வேண்டும். அதற்கு மேல் குத்தகைதாரர் லாபம் ஈட்ட வேண்டும். இந்த வகையில் அங்கு மீன்பிடி வருமானம் வருவதை ஒப்பிட்டு பார்க்கலாம். அங்கேயே குத்தகைதாரர் லாபம் பார்க்கும் போது அளவில் பெரிய மேட்டூர் அணையில் பெரிய அளவில் லாபம் கிடைப்பது உறுதி!

12. மேட்டூர் அணையை பொறுத்தவரை பல சாதகமான விஷயங்கள் உள்ளன. இதனால் அதிக உற்பத்தி திறன் அவசியம் கிடைக்கும்.
13. ஒகேனக்கல் அருவிக்கு கீழே சுமார் 5 மைல் தொலைவுக்கு கடந்த 20 வருடமாக (1936-க்கு முன்பு) மீன்களின் சரணாலயம் போல அந்த இடம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முதலைகள் அந்த இடத்துக்குச் சென்று தங்கள் உணவுக்காக வேட்டையாடுதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
14. இந்த சூழ்நிலையில் ஒகேனக்கல் அருவி மற்றும் மேட்டூர் நீர்த்தேக்க சுவற்றுக்கு இடையில் உள்ள ஏராளமான விரிந்த பகுதிகளில் சிறப்பான அளவில் மீன் வளர்க்க முடியும்.
15. மேலும் இந்த அமைப்பில் 1914 -ம் ஆண்டு முதல் மீன்வளத்துறை காவிரி ஆற்றில் இந்திய கெண்டை வகை மீன்கள் அதிக அளவில் வளர்க்க நடவடிக்கை எடுத்து வந்தது. எனவே, குறைந்த செலவில் புதிய வகை மீன்களை இப்போது மேட்டூர் அணை ஏரியில் விஞ்ஞான பூர்வ அடிப்படையில் வளர்க்கும்போது "கட்லா" வகை உட்பட பல வகை மீன்களின் மகசூல் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கலாம்.
16. மிகக் குறைந்த செலவில் மீன் பண்ணைகள் அமைத்து மீன் வளர்ப்பின் மூலம் பெரும் ஆதாயம் அடைய முடியும். மேட்டூர் அணையில் மோட்டார் படகு மற்றும் நவீன மீன் வலைகள் இதற்கு பெரிதும் உதவும்.
17. அடுத்த கட்டமாக இங்கு கிடைக்கும் மீன்களை சந்தைப்படுத்தல் மிகவும் முக்கியம். அங்கிருந்து மிக குறைந்த தூரத்தில் சென்றடையக்கூடிய நகரங்களாக பெங்களூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், போத்தனூர் போன்றவை உள்ளன. இங்கு மீன்கள் ரயில் மூலம் எளிதில் அனுப்பி வைக்க இயலும்.
மேலே உள்ள நகரங்களுக்கு மோட்டார் வாகனங்கள் மூலம் ஒரு சில மணி நேரங்களில் சென்றடைவதை உறுதி செய்ய இயலும்.
18. அப்போது எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் மேற்குறிப்பிட்ட நகரங்களில் தேவைக்கு மிகவும் குறைவாகவே இதுவரை மீன்கள் கிடைக்கின்றன என்று தெரிய வந்தது. எனவே, மேட்டூர் அணையில் மீன்வளத்துறை மூலம் மிகச் சிறப்பான முன்னேற்றம் காண இயலும் மற்றும் பொருளாதார ரீதியில் பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையாக இது மாறும் என்பதை உறுதியாக கூற இயலும்.
19. மேட்டூரில் அமைக்கப்பட்ட 'ஐஸ்' கம்பெனி (ICE) மூலம் மீன்களை பாதுகாப்பாக பத்திரமாக பதப்படுத்தி தேவைப்படும் நகரங்களுக்கு மதிப்பு மிகுந்த உணவாக அனுப்பி வணிக ரீதியில் லாபம் ஈட்ட முடியும் என்ற நிலை உள்ளது.
இவ்வாறு மீன்வளத்துறை இயக்குநர் அரசுக்கு அணை கட்டி முடித்த பிறகு இப்படி ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார். அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அங்கு ஒரு துறை ஏற்படுத்தி தேவையான அலுவலர்களை நியமித்தது. பொறுப்புணர்வுடன் நடந்த இந்த ஆய்வு மற்றும் அறிக்கை மூலம், மிகச்சரியான நடவடிக்கைகளை அன்றைய அரசு எடுத்ததின் பலனாக, 100 ஆண்டுகளை நெருங்கும் இந்த காலத்தில், இன்றளவும் பல்லாயிரக்கணக்கான டன் மீன்கள் இங்கிருந்து தமிழ்நாட்டின் நகரங்கள் மட்டுமின்றி வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
விருந்தாளி முதலை
காவிரி ஆற்றில் ஒரு குடிமகனின் விசித்திரமான சாகசம் ஒன்று அதிகாரப்பூர்வமாக பதிவாகி இருக்கிறது. 1936- ம் ஆண்டு மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு நாள் இரவு அணையின் இடது புறம் உள்ள மலைப்பகுதி (சீத்தாமலை) பழைய சாலையில் மாட்டு வண்டிகள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. குறுகலான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட அந்த மலைப்பாதையில் கவனமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது முதல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த நபர் எச்சரிக்கை ஒலியை எழுப்பினார்.

சாலையின் நடுவே ஒரு விருந்தாளி அவர்களின் பாதையை மறித்து அவர்கள் அனைவரையும் வண்டிகளோடு வரவேற்றது. அப்போது, அந்தக் கூட்டத்தில் சென்று கொண்டிருந்த அனைவரும் அந்த விருந்தாளியை கண்டு பயந்து நடுங்கினார்கள்.
அவர்கள் சென்று கொண்டிருந்த சாலையின் மத்தியில் வழியை மறைத்தவாறு இருந்த விருந்தாளி ஒரு பெரிய முதலை. தரையில் ஊர்ந்து நின்று அவர்களை பயமுறுத்தியது.
எச்சரிக்கை மற்றும் மனிதர்களின் பயத்தின் பலத்த ஒலி காரணமாக அங்கே பதற்றம் தொடர்ந்து பரவியது. முகாமில் உறங்கிக் கொண்டிருந்த பொறியியல் ஊழியர்கள் அவசரமாக எழுந்து கையில் துப்பாக்கியுடன் அந்த இடத்துக்கு விரைந்தனர். ஊழியர்களுக்கும் அந்த முதலைக்கும் நேருக்கு நேர் சமர் என்று தான் கூற வேண்டும்.
அந்த முதலை சுடப்பட்டு பின் அப்புறப்படுத்தப்பட்டு, மாட்டு வண்டிகள் தொடர்ந்து அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது.
அந்த முதலை குண்டடிப்பட்டு இறப்பதற்கு முன்பு மலைப்பாதையில் இரண்டு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து ஆற்றிலிருந்து அணையின் நீர் உள்ள பக்கத்தை நோக்கி வேகமாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது என்பதுதான் இதில் சிறப்பு!
இந்த நிகழ்ச்சி எப்படி ஏன் நடந்தது என்பது குறித்து ஆராய்ந்த போது ஒரு தெளிவான விடை கிடைத்தது. ஆற்றில் இருந்த முதலை, ஆற்றின் நீரோட்டத்தில் மேற்புறம் செல்ல விளைந்திருக்கிறது. நடுவில் அணைக்கட்டு சுவர் இருந்ததால் வேறு வழியின்றி 200 அடி உயரம் இருந்த சீதா மலையில் ஏறி பின்புறம் சென்று அணையின் ஏரியில் உள்ள நீரில் ஐக்கியமாவதற்கு முடிவெடுத்து மலை மீது ஏறி இருக்கிறது. மிகுந்த புத்திசாலியான முதலையாக இருக்கும் போல! இப்படி ஒரு சுவை மிகுந்த சாகசம் 1936 ஆம் ஆண்டு அணை கட்டி முடித்த பிறகு நடந்தேறியிருக்கிறது. பாவம் முதலை! வண்டிக்காரரின் கண்களில் படாமல் இருந்திருந்தால் உயிர்தப்பி அணையைக் கடந்து அணை நீரில் விழுந்து உயிரோடு இருந்திருக்கும். அந்த முதலையின் சந்ததிகள் ஒரு வேளை இன்னும் பல ஆண்டுகள் இன்று வரை கூட தொடர்ந்து உயிர் வாழ்ந்து வந்திருக்கலாம். பாவம் முதலை!
1928- ல் கல் உடைக்கும் ஆலை தொடங்கப்பட்டதை நாம் முன்பே கண்டோம். முதலில் அணையின் வலது கரையோரம் இது அமைந்தது. கல்லுடைக்கும் இயந்திரங்கள் பின்னாளில் மின்சாரம் மூலம் இயங்குபவையாக மாற்றப்பட்டது. தேவைக்கேற்ப மூன்று பிரதான கல் நசுக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டன. அவற்றுள் இரண்டு அணையில் இடது பக்க கரையிலும், ஒன்று வலது பக்க கரையிலும் அமைக்கப்பட்டன. அனைத்து மோட்டார்களும் காற்றோட்ட குழாய் பொருத்தப்பட்டு இவை பிரிட்டனின் புகழ்பெற்ற ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி (GENERAL ELECTRIC COMPANY) மூலம் தயாரித்து பெறப்பட்டது. தூசுகளை மட்டுப்படுத்த துணிகளால் ஆன தூசு வடிகட்டிகள் ( CLOTH FILTERS) பொருத்தப்பட்டிருந்தன.

கிரஷர் இயந்திரங்களுக்கு அதன் அருகில் உள்ள குவாரியிலிருந்து கற்களை வேகன்களின் மீது ஏற்றி, ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு கற்கள் 'கிரஷர்' இயந்திர மெஷின்களில் தள்ளப்பட்டது. ஒவ்வொரு கல்லும் மூன்று கன அடி எடை கொண்டதாக இருந்தது. இந்த கற்களை ரயில் நிற்காமலேயே கீழே தள்ளிவிட்டு தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் படி அமைக்கப்பட்டது. ஒரு ரயில் தொடரியில் 16 வேகன்கள் இணைக்கப்பட்டு அவை 20 வினாடிகளில் கற்களை நிரப்பி கிரஷர் யூனிட்டுக்கு புறப்படும் படி ஓரளவு தானியங்கி முறையில் செயல்பட்டன.
மிகப்பெரிய கட்டுமானத்திற்கு பெரிய அளவிலான சுர்க்கி உற்பத்தி அவசியமானதாக ஏற்பட்டது. சுமார் 53,000 டன்கள் சுர்க்கி மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்டது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. அதன் மொத்த மதிப்பு ரூபாய் 2,78,000/- எனவும் மதிப்பிடப்பட்டது. சுர்க்கி தயாரிக்கும் தொழிற்சாலை கட்டடம் ஒன்று 137 அடி x 31அடி என்ற அளவில் மேட்டூரில் SMITH KNOLL என்ற குறியீட்டு இடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டது.
அங்கிருந்து "டிராம்வே ரயில்" அணை கட்டுமான முக்கிய ரயில் பாதையுடன் இணைக்கப்பட்டது. இரட்டை ரயில் பாதை இங்கு அமைக்கப்பட்டது. இதற்கென அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையின் நீளம் சுமார் ஒரு மைல், செங்கல் சூளை களையும் சுர்க்கி தொழிற்சாலையையும் இணைத்தது.
ஒரு கன அடி வேகன்களை கொண்ட எட்டு வேகன்களை நிரப்பி அனுப்ப 16 பெண் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். இந்த இடத்தில் பெண்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், திறன் மிகுந்தும் வேலை பார்த்தனர். இந்த சுர்க்கி தயாரிக்கும் கொட்டகையில் ஏற்பட்ட புகை மண்டலமானது அந்த கொட்டகை முழுவதும் எப்போதும் படர்ந்து இருக்கும்.
வெறும் கண்களால் கொட்டகையின் முழு நீளத்தையும் பார்க்க இயலாத அளவுக்கு புகை மண்டலமாக காட்சியளிக்கும். மேலும், தூசுகள் (DUST) இந்த வேலை செய்த அனைவருக்கும் பெரும் தீங்கு விளைவிப்பதாகவும் இருந்தது. சுர்க்கி தயாரிக்கும் மெஷினை ஆன் செய்தவுடன் பெரும் தூசு கொட்டகை முழுவதும் படர்ந்து விடும். அனைத்து தொழிலாளர்களுக்கும் முகக் கவசம் அளித்து அவர்கள் அணிந்திருந்த போதும் மிகப்பெரிய அளவில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டார்கள் என்பது உண்மை.
அதுவும் கோடை காலங்களில் முகக் கவசத்தை இயல்பாக தவிர்த்து விடுவார்கள். எதிர்காலத்தில் இது போன்ற பெரிய அளவிலான சுர்க்கி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் போது இன்னமும் விஞ்ஞான பூர்வ முறைகளை கையாண்டு இந்த பாதிப்பு ஏற்படாத வண்ணம் வேலைக்கான சூழ்நிலைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று ‘படிப்பினை’ கிடைத்ததாக பதிவிடுகிறார் கண்காணிப்புப் பொறியாளர்.

10 டன் செங்கற்களை சுடுவதற்கு ஒரு டன் விறகுகள் தேவைப்பட்டன. சூளைகளில் தொடர்ந்து செங்கற்கள் சுடப்பட்டு, அவற்றை கைகளால் சுத்தியல் வைத்து உடைக்கப்பட்டு சுர்க்கி தயாரிக்க கொண்டு செல்லப்பட்டன.
இந்த செங்கல் சூளைகளுக்கு பதிலாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு முறைகள் ஆரம்பத்தில் வெவ்வேறு விதமாக முயற்சித்துப் பார்த்து அவை அனைத்தும் தோல்வியில் முடிந்ததாகவும் இறுதியாக நம் நாட்டில் பின்பற்றப்பட்ட கிராமத்துப் பாணியிலான செங்கல் சூளைகள் மாதிரி மட்டுமே சிறந்த பலனை அளித்ததாகவும் பொறியாளர் பதிவு செய்திருப்பது நமது முன்னோர்களின் அறிவு மற்றும் செயல்திறனை பறைசாற்றும் விதமாக அமைந்திருக்கிறது. இது குறித்து இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம்.
தயாரித்த சுர்க்கியை சணல் சாக்குப் பைகளில் நிரப்பி எடையிட்டு முனைகளை தைத்து அடுக்கி வைக்கப்பட்டன. சுமாராக 50 கிலோ எடை உள்ளதாக ஒவ்வொரு சுர்க்கி மூட்டையும் இருக்கும். இவ்வனைத்து செயல்பாடுகளும் பெரும்பாலும் பெண்களே செய்து முடிப்பார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் இந்த சுர்க்கித் தூளை ஒவ்வொரு மெஷினிலிருந்து மாதிரி எடுத்து பரிசோதனை செய்ய ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். தர நிலை சரியாக உள்ளதா என சோதித்து அறியப்படும். இந்த சுர்க்கி தயாரிப்பில் மிகவும் நுண்ணிய துகள்கள் காற்றில் பறந்து கரைவதால் அதனால் ஏற்படும் பொருளின் மொத்த எடை இழப்பு மூன்று சதவீதமாக இருந்தது என்கிறது தரவு.
மிகவும் கடினமான பணியாக இது அப்போது உணரப்பட்டது. இந்த கடின மிக்க பணியை பெரும்பாலும் பெண்களே செய்து முடித்ததால் அதுவும் தங்கள் உடல்நலத்தை பணயம் வைத்து கடமையாற்றிய இவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.
தொடர்ந்து பயணிப்போம்!
காவிரி நன்னீர் சிறப்பு




















