BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா
ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது?
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் பங்குச்சந்தையும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த நேரத்தில் எதில் முதலீடு செய்வது நல்லது என்கிற கேள்வியும், சந்தேகமும் எழலாம்.
அந்தக் கேள்விக்கான பதிலை தருகிறார் குடும்ப நிதி நிபுணர் லலிதா ஜெயபாலன்.
"அனைத்து முதலீடுகளையும் ஒரே விஷயத்தில் செய்துவிடக் கூடாது - இது முதலீட்டின் கோல்டன் ரூல்.
அதனால், தங்கத்தில் மட்டும் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்ட்டில் மட்டும் முதலீடு செய்வது என்றில்லாமல், தங்கம், போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் என கலந்து முதலீடு செய்வது சிறந்தது.

நடுத்தர வர்க்க மக்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் பெரிய ரிஸ்க்கை விரும்பமாட்டார்கள். அதை அவர்களால் கையாளவும் முடியாது. அதனால், இந்த மக்கள் பங்குச்சந்தை பக்கம் செல்லாமல், தங்கம் மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் கவனம் செலுத்தலாம்.
ஒருவேளை சம்பந்தப்பட்ட நபருக்கு பங்குச்சந்தை பற்றி தெரியும் என்றாலோ, அவர்களை வழிநடத்த வழிகாட்டி இருந்தாலோ, அவர்கள் பங்குச்சந்தை முதலீட்டிற்கு செல்லலாம்.
தங்கத்தில் யார் முதலீடு செய்யலாம்?
அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றாலும், பெரும்பாலான மக்கள் தங்கம் முதலீட்டிற்கு செல்வதென்னவோ, 'தங்கச் சீட்டு' பக்கம் தான். எனக்கு கண்டிப்பாக நகை வேண்டும் என்பவர்கள் தங்கச் சீட்டில் முதலீடு செய்யலாம்.
ஆனால், நீங்கள் சீட்டு போடும் நகை நிறுவனம் நம்பத்தகுந்தது தானா என்பதை ஒருமுறைக்கு பலமுறை செக் செய்வது கட்டாயம்.
தங்கம் முதலீட்டிற்கு இன்னொரு சிறந்த ஆப்ஷன், 'கோல்டு இ.டி.எஃப்'. இதில் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்துவரலாம். 'தங்க நகை வேண்டும்' என்கிற போது, இந்த முதலீட்டில் இருந்து பணம் எடுத்து நகை வாங்கிக்கொள்ளலாம்.

குழந்தைகளின் படிப்பிற்காக காசு சேர்க்கிறீர்களா?
பெண் குழந்தைகள் என்றால், 'செல்வ மகள் திட்டம்'. ஆண் குழந்தை என்றால் 'பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்' திட்டம். இதில் குழந்தைகளின் 7 வயதிலோ, 10 வயதிலோ முதலீடு செய்யாமல், அவர்களை எல்.கே.ஜி சேர்க்கும்போதே முதலீடு செய்துவிட வேண்டும்.
அப்போது அவர்களின் உயர்கல்விக்கு தேவையான பணம் சரியான நேரத்தில் உங்கள் கைக்கு கிடைத்துவிடும்.
நாம் நினைக்கும்போது பணத்தை வெளியே எடுத்து விட முடியாது. இது இந்தத் திட்டங்களின் மிகப்பெரிய ப்ளஸ். அதனால், இந்தப் பணம் சரியாக குழந்தைகளின் உயர்கல்விக்கே சென்று சேர்ந்துவிடும்.
இந்த முதலீடுகளில் ரிஸ்க் இல்லை. வரி இல்லை, கேரண்டி நிச்சயம். இந்த மூன்றையும் தங்கம் உள்ளிட்ட எந்த முதலீடுகளிலும் பார்க்க முடியாது.
யாருக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நல்லது?
'கொஞ்சம் ரிஸ்க்' எடுக்கலாம் என்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் வரலாம். ஆனால், அதிலும் நிபுணர் ஒருவரின் வழிகாட்டுதல் இருப்பது கட்டாயம்.
குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு அந்தப் பணத்தின் வருமானம் தேவையில்லை என்பவர்கள் மட்டும் மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் நல்ல வருமானத்தை பெற முடியும்.
ஏழு ஆண்டிற்குள்ளேயே பணம் வேண்டும் என்பவர்கள் ஆர்.டி நல்ல ஆப்ஷன்.
இடைக்கால முதலீடு, நீண்ட கால முதலீடுகளை தேர்ந்தெடுப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம்.
இந்த முதலீட்டிற்கு அதிகம் தெரியாத ஃபண்டுகள், புதிதாக அறிமுகமாகி உள்ள ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. நன்கு தெரிந்த ஃபண்டுகளையே எப்போதும் தேர்ந்தெடுப்பது நல்லது.

பங்குச்சந்தை இப்போது உச்சத்தில் இருக்கிறதே?
எஸ்.ஐ.பி முறையில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்பவர்கள் சந்தை உச்சத்தில் இருக்கிறதா, இறக்கத்தில் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டாம். அவர்கள் தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே வரலாம்.
ஆனால், லம்சம் முதலீடு செய்பவர்கள் சந்தையின் போக்கை கட்டாயம் கவனிக்க வேண்டும். நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
தங்கம் இப்போது உச்சத்தில் இருக்கிறது தான். இப்போது முதலீடு செய்யலாமா என்றால் சற்று யோசிக்க வேண்டும். இந்த ஆண்டு தங்கம் கொடுத்த வருமானத்தை, தொடர்ந்து அது அடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு என தொடர்ந்து கொடுக்குமா என்பதை யோசியுங்கள்.
எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்பவர்கள் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள்.
லம்சம் தொகையை போட நினைப்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு புத்திசாலித்தனமானது அல்ல.

ஆறு மாதம், ஒரு ஆண்டிற்குள் அதிகம் சம்பாதிக்க வேண்டுமா?
தங்கம், வெள்ளி, பங்குச்சந்தை உச்சம் - இவை குறுகிய காலத்திற்குள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் தான் கவனிக்க வேண்டும்.
இவர்களுக்கு 'டிரேடிங்' தான் சிறந்த முறை. ஆனால், அதில் ரிஸ்க் மிக மிக அதிகம்.
இவர்கள் 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதை கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்.
நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு எது நல்லது?
நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு கேரண்டியான வருமானம் வேண்டுமானால் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
இவர்களுக்கு கொஞ்சம் ரிஸ்க் குறைந்த, பணவீக்கத்திற்கு ஏற்ற முதலீடு 'தங்கம்'.
'இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம்... வருமானம் தொடர்ந்து வளர வேண்டும்' என்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் நல்ல சாய்ஸ்.
ஓய்வுபெற்றவர்கள் எதில் முதலீடு செய்யலாம்?
ஓய்வுபெற்றவர்கள் தங்களுக்கு வந்த பி.எஃப் பணம், கிராஜுவிட்டி பணத்தை ஒட்டுமொத்தமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல், தங்கம், போஸ்ட் ஆபீஸ் திட்டம், மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என பிரித்து முதலீடு செய்யலாம்.
இதனால், ரிஸ்க்குகளும் அவர்களுக்கு குறையும்".




















