'வியந்து பார்த்த ஹீரோவுடன், இப்போது இணைந்து நடிப்பதென்பது..!' - ஹிருத்திக் ரோஷன்...
ஒன்றிய - மாநில உறவு குறித்து திமுக அரசு அமைத்த கமிட்டி; கிடப்பில் போடும் தவெக அரசு? - பின்னணி என்ன?
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்த சிக்கல்களை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கமிட்டியை தவெக அரசு கிடப்பில் போடுவதாகவும், கமிட்டியின் ரிப்போர்ட்டை முடித்து வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் `ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்து அறிய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு' ஒன்றை அறிவித்தார். அந்தக் குழுவின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி, முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் மு.நாகநாதன் போன்றோர் நியமிக்கப்பட்டனர்.
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்தக் குழு இடைக்கால அறிக்கையை 2026 ஜனவரியில் தாக்கல் செய்யும் என்றும் அறிவித்தார். அதன்படி குரியன் ஜோசப் தலைமையிலான இந்தக் குழு 10 அத்தியாயங்களை கொண்ட இடைநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. திமுக அரசு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் முன்பும் இந்த அறிக்கையை வைத்தது. மே 2027 க்குள் எஞ்சிய பணிகளை முடித்து அடுத்தக்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் இந்தக் குழுவுக்கு கால நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து தவெக அரசு ஆட்சியைப் பிடித்தது. தவெக ஆட்சியமைத்து விஜய் முதல்வரானதிலிருந்து இந்தக் குழுவின் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை எனும் பேச்சு எழுந்தது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி கடந்த செப்டம்பரில், “ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.
பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக் குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2-ஆவது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் – ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த Dummy அரசு உருவாக்கி இருக்கிறது" எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
தவெகவுடன் கூட்டணியில் இருக்கும் விசிகவை சேர்ந்த அமைச்சர் வன்னி அரசுவும் சட்டமன்றத்தில் அவரின் அறிமுக உரையின் போது, "குரியன் ஜோசப் தலைமையிலான கமிட்டி அவர்களின் பணிகளை தொடர அரசு ஒத்துழைக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

குரியன் ஜோசப் குழுவுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்கிற விவகாரம் ஏற்கெனவே சர்ச்சையாகியிருக்கும் நிலையில், அந்தக் குழுவின் மீதான அரசின் ஆர்வமின்மை இன்னமும் தொடர்வதாக அதிகாரிகள் வட்டத்தினர் தகவல் கூறுகின்றனர். நம்மிடம் பேசிய தலைமைச் செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர், ``தவெக அரசு அமைந்தவுடன் இந்தக் குழுவிடம் உங்களின் பணியை அப்படியே தொடருங்கள் என்றுதான் கூறினர். ஆனால், பணிகளை தொடர்வதற்கான ஒத்துழைப்பை அரசு கொடுக்கவில்லை. அந்தக் கமிட்டியின் அலுவலகத்தில் மூன்று அலுவலக உதவியாளர்கள் பணியாற்றினார்கள். அவர்களின் ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகும் வெறும் 3 மாதங்களுக்கு மட்டுமே அவர்களுக்கு பணி நீட்டிப்பு கொடுத்தார்கள். இப்போது அவர்களின் பணிக்காலம் முடிந்துவிட்டது. அந்த மூன்று பேருக்கும் பணி நீட்டிப்பு வழங்கவில்லை. குழுவின் அறிக்கை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மட்டுமே தயாரிக்கப்படும். அதை தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்ய மொழிப்பெயர்ப்பாளர் ஒருவர் பணியில் இருந்தார். அவரின் ஒப்பந்தக்காலம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதியோடு முடிவடைந்தது. அவருக்கும் பணி நீட்டிப்பு வழங்கவில்லை. அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். மொழிப்பெயர்ப்பாளர் இல்லாமல் குழுவின் அறிக்கையை தமிழில் எப்படி கொண்டு வர முடியும்? ஒப்பந்தக்காலம் முடிந்த பணியாளர்களுக்கு பணிக்காலத்தை நீட்டித்து கொடுக்குமாறு குரியன் ஜோசப்பும் அசோக்வர்தன் ஷெட்டியும் அரசுக்கு கடிதம் எழுதிவிட்டார்கள். அரசுத் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. நவம்பர் இரண்டாம் வாரத்தில் 'Research Officers' பணியில் இருக்கும் மூவரின் ஒப்பந்தக் காலம் முடிவடைகிறது. இவர்கள்தான் அறிக்கை தயாரிப்பதில் முக்கியமானவர்கள். இவர்களை கட்டாயமாக பணி நீட்டிப்பு செய்தே ஆக வேண்டும். ஆனால், அரசு அந்த முடிவை எடுப்பது சந்தேகமே. சத்தமே இல்லாமல் இந்தக் குழுவை செயலிழக்கச் செய்யும் மனநிலையிலேயே அரசு செயல்படுகிறது" என்றனர்.
இந்தக் குழுவின் பணிகளையும் பரிந்துரைகளையும் பற்றி நன்கறிந்த வட்டத்தினர் நம்மிடையே பேசுகையில், ``அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்ட குழு இது.
திமுக, பாஜக என குறுகிய அரசியல் நோக்கோடு செயல்படாமல் எல்லா மாநிலங்களுக்கும் பயன்படும் வகையில் விசாலமான பார்வையோடு இந்தக் குழு அறிக்கையை தயார் செய்து வருகிறது. நிதிப்பகிர்வு, தேர்தல்கள், தொகுதி மறுவரையறை, போக்குவரத்து, கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு என எக்கச்சக்கமான தலைப்புகளில் ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் சிக்கல்களை விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்தியாவை ஒத்த ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிய - மாநில உறவுச் சிக்கல்களுக்கு தீர்வை கூறவும் முனைந்திருக்கின்றனர். திமுக ஆட்சியில் இந்தக் குழுவின் இடைநிலை அறிக்கை மத்திய அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களே இந்தப் பணியை பாராட்டி மனமுவந்து பாராட்டினார்கள்.

ராஜமன்னார் கமிட்டிக்கு பிறகு கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகள் கழித்து ஒன்றிய - மாநில உறவு குறித்து விசாலமாக பேச அமைக்கப்பட்ட குழு இது. ஏனைய மாநிலங்களுக்கும் இந்தக் குழு முன்னோடியாக திகழ்கிறது. அப்படிப்பட்ட குழுவின் செயல்பாடுகளை அரசியல் எண்ணத்தோடு முடக்குவது நியாயமல்ல. இரண்டாம் கட்டமாக 15 அத்தியாயங்களை இந்தக் குழு தயாரித்து வருகிறது. அரசியலை கடந்து இந்தக் குழுவின் அறிக்கை தாக்கலாக அரசு ஒத்துழைக்க வேண்டும்" என்கின்றனர்.
'தவெக அரசு பாஜகவின் மனம் நோகாதபடிக்கு நடக்கவே விரும்புகிறது. நீட் போராட்டம், SIR போராட்டம், இப்போது இந்த குழுவை அமைதியாக செயலிழக்கச் செய்யும் தன்மை என எல்லாமே அதைத்தான் நிரூபணப்படுத்துகின்றன. தவெக அரசின் சில அமைச்சர்களே இந்தக் குழுவுக்கு ஒத்துழைக்க விரும்பவில்லை. முதல்வர் கையில் இருக்கும் பொதுப்பிரிவின் கீழ்தான் இந்த குழுவுக்கான நிதி செல்கிறது. இந்தக் குழு அறிக்கையை முடிக்க முடியவில்லையெனில் முதல்வருக்குத்தான் கெட்டப்பெயர்.' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இது தொடர்பாக குழுவின் உறுப்பினரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டியை தொடர்புகொண்டோம். 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை. திட்டமிட்டப்படி எங்களின் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்' என குறுஞ்செய்தி அனுப்பி முடித்துவிட்டார்.
ஒன்றிய - மாநில உறவுச் சிக்கலை அறிய அமைக்கப்பட்ட கமிட்டிக்கே சிக்கல்(?)















