அனுமதியின்றி கட்டுமானம்: நடிகர் அஜய் தேவ்கன் வீட்டில் சட்டவிரோதமாக கட்டியதை இடித...
"ஒன்றுமில்லாதவரை அமைச்சராக்கினேன்"- ரூ.210 கோடிக்கு ஊழல் செய்ததாக BJP பெண் அமைச்சர்மீது கணவர் புகார்
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ரேகா ஆர்யா, தனது கணவர் பப்பு கிர்தாரி என்று அழைக்கப்படும் கிர்தாரி லால் சாஹு தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும், தனது மைனர் குழந்தைகளை அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
அதோடு இது தொடர்பாக காணொலி ஒன்றை வெளியிட்டு போலீஸிலும் புகார் செய்துள்ளார். 2004 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி பரேலியில் சாஹுவை திருமணம் செய்து கொண்டதாகவும், மேலும் அவர் திருமணமாகாதவர் என்று கூறி தன்னை ஏமாற்றியதாகவும் ரேகா குற்றம் சாட்டி இருந்தார்.
ரேகாவின் இக்குற்றச்சாட்டுக்கு கிர்தாரி அளித்துள்ள பதிலில் தனது மனைவி மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி இருக்கிறார். ரேகாவைப் போன்று கிர்தாரியும் காணொலி ஒன்றை வெளியிட்டு தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து இருக்கிறார்.

கிர்தாரி வெளியிட்டுள்ள காணொலியில், ''அமைச்சர் பதவி இருப்பதால் அவர் இதுபோன்று நடந்து கொள்கிறார். அவர் அதிக அளவில் ஊழல் செய்து ரூ.210 கோடி அளவுக்குச் சொத்து சேர்த்து இருக்கிறார். குடும்பத்தில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆடியோ ஆதாரங்களை உருவாக்கி இருக்கிறார்.
ஆர்யாவின் ஊழல் குறித்து முதல்வர் புஷ்கர் சிங்கிடம் தெரிவித்தேன். இது மாநிலத்திற்குக் கெட்ட பெயரைக் கொண்டுவரும் என்று கூறினேன். ஊழல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். ஆர்யாவின் அரசியல் வளர்ச்சிக்கு நான் உதவிய பங்கை மறந்துவிட்டார். நீங்கள் வாழும் வரை அமைச்சராகவும் தலைவராகவும் இருப்பீர்கள் என்று தவறான எண்ணத்தில் இருக்கிறீர்கள்.
அது அப்படியல்ல. வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இந்த நேரத்தில் நீங்கள் சக்தி வாய்ந்தவர். ஆனால் உங்களிடம் எதுவும் இல்லை என்பதை மறந்துவிட்டீர்கள், இவ்வளவு உயரத்தை எட்ட நான் உதவினேன். தெருவில் இருந்த உங்களை இந்த உயரத்திற்குக் கொண்டு வந்து அமைச்சராக்கினேன். இது முழு உத்தரகண்ட் மாநிலத்திற்கும் தெரியும். எனவே ஆர்யா என் மீதான போலி புகாரைத் திரும்பப் பெறவேண்டும். என் மீதான குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால் சர்வவல்லமையுள்ளவர் உங்களை மன்னிக்கமாட்டார். எல்லாவற்றிற்கும் பதில் சொல்லவேண்டியிருக்கும்'' என்று அவர் கூறினார்.




















