`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழ...
குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படுத்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அது திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த ராஜூ (60) என்பவருக்கு சொந்தமான லாட்ஜ் என்பது தெரியவந்தது. அங்கு குமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த கோகுல் (33) என்பவர், தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முன்பதிவு செய்திருந்தார். அதுகுறித்து கோகுல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அழைப்பிதழும் பதிவு செய்துள்ளார்.

நேற்று நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கியது. இதில் கோவை, கேரளா, மும்பை என பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் இதில் கலந்துள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களும் அதில் கலந்துகொண்டனர். அந்த கொண்டாட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட உயர்ரக போதை பொருள்களான கஞ்சா, எம்.டி.எம், எல்.எஸ்.டி உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ரிசார்ட் உரிமையாளர் ராஜூ, பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்த கோகுல், அவரது மனைவி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போதை பொருட்களையும் போலீசார் தேடினர். ரிசார்ட் வளாகத்தில் மண்ணில் போதைப்பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என தோண்டி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் போதை ஊசிகள் உட்பட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை, கேரளா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த இளம் பெண்களும் மீட்கப்பட்டனர். பிறந்தநாள் என்ற பெயரில் போதை கூடுகை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















