சீர்காழி: மனைவி, மகனைக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை; மகளின் வளைகாப்பு நாளில் நடந்த கொடூரம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலேந்திரன்(58) மீனவர். முன்னாள் கிராமத் தலைவர். இவரது மனைவி மலர்செல்வி(48). இவர்களது மகள் அனு(29) மகன் அதிகுணன்(25). ஜலேந்திரனுக்கும், மலர்செல்விக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மலர்செல்வியும், அதிகுணனும் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது ஜலேந்திரன் தூங்கி கொண்டிருந்த மகன் அதிகுணனை இரும்பு பைபால் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் அடித்துள்ளார்.
வலி தாங்காமல் அதிகுணன் அலறியதுடன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தூங்கி கொண்டிருந்த மலர்செல்வி மகனின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்துள்ளார்.
அப்போது மகனை தன் கணவர் ஜலேந்திரன் அடித்து கொலை செய்ததைக் கண்டு கதறியிருக்கிறார். இதையடுத்து, ஜலேந்திரன் அதே இரும்பு பைபால் மலர்செல்வியையும் அடித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் வீட்டுக்குப் பின் பகுதியில் இருந்த மரத்தில் ஜலேந்திரனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விடிந்ததும், ஜலேந்திரன் தூக்கில் தொங்குவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் வந்து பார்த்து விசாரணை நடத்தியபோது மனைவியையும், மகனையும் அடித்து கொலை செய்து விட்டு ஜலேந்திரனும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி. சினேகா பிரியா நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பேசும்போது, ''ஜலேந்திரன் வெளிநாட்டில் வேலை செய்தவர். ஊருக்கு வந்ததில் இருந்து மலர்செல்விக்கும், ஜலேந்திரனுக்கும் சண்டை நடக்கும்.
மலர்செல்வி மீதான சந்தேகத்தில் ஜலேந்திரன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார் என்கிறார்கள். எப்போதும் வீட்டுக்குள் சண்டை சச்சரவாகவே இருக்கும்.

மகள் அனுவிற்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆவதாகத் தெரிகிறது. இன்று வளைகாப்பு நடக்க இருந்தது. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வந்ததுடன், சொந்த பந்தங்களையும் அழைத்திருந்தனர்.
இந்நிலையில், என்ன நடந்தது என்று தெரியவில்லை. மனைவி, மகனைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். வளைகாப்பு நடக்க இருந்த தன் மகளைக் கூட நினைத்து பாக்காமல் இப்படிச் செய்து விட்டார்'' என்றனர்.





















