இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு; மகளுக்கு பிரியாணியில் விஷம் வைத்த அப்பா
`சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலை: இப்போது தேவைதானா?' - உயர் கல்வித்துறையின் சிக்கல்கள்| ஓர் அலசல்
தமிழ்நாட்டில் முதல் வெளிநாட்டு பல்கலைக் கழகமாக மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்துக்கு, UGC ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆஸ்திரேலியாவின், 'குரூப் ஆப் எய்ட்' அமைப்பின் உறுப்பினராக திகழும், மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை (University of Western Australia), சென்னை வேளச்சேரியில் பல்கலைக் கழகம் அமைக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த ஒப்புதல் கல்வியாளர்களிடம் கடும் எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது.

இது தொடர்பாக அரசு கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ், ``அக்டோபர் 5-ம் தேதி யுஜிசி தனது இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளதாக University of Western Australia இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் இப்பல்கலைக்கழகத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்க இளநிலை பாடப்பிரிவுகளான டேட்டா சயின்ஸ் முதலாமாண்டு கல்விக்கட்டணம் மட்டும் தலா ரூ.14.52 லட்சம். ஏ.ஐ. பாடப்பிரிவுக்கு ரூ.17.93 லட்சம். எம்பிஏ படிப்புக்கு ரூ.23.10 லட்சம் என்பதையும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தொடங்க அனுமதி வழங்கப்படும்' என்ற தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் ஒரு அம்சம்தான் இப்போது தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் தொடங்கப்படுகிறது. செப்டம்பர் 8-ம் தேதி, தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, தனியார் பல்கலைக் கழகங்கள் அதிக அளவில் தொடங்குவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசு, தற்போது வெளிநாட்டு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளது.
மிகக் குறைந்த கட்டணத்தில் சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயிலும், தமிழ்நாட்டின் 21 பல்கலைக்கழகங்களில் பாதிக்கு மேல் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை. உதாரணத்துக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் 515 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் இப்போது இருப்பதோ வெறும் 180 பேர், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தித்தில் 405 ஆசிரியர்களுக்கு 202 பேர்தான் இருக்கிறார்கள். திருச்சி பாரதிதாசன் பல்கலக்கழகத்தில் 230 ஆசிரியர்களுக்கு 119 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மேலும், 188 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 7198 காலியிடங்கள் உள்ளதாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு பல்கலைக்கழகங்களிலும், அரசு கல்லூரிகளிலும் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறாமல், ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் 90 சதவிகித ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயிலும் அரசு பல்கலைக்கழகங்களிலும், அரசு கல்லூரிகளிலும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், இக்கல்வி நிலையங்களில் பெரும்பான்மையான ஆசிரியர் பணியிடங்களை பத்தாண்டுகளாக நிரப்பாமல், வெளிநாட்டு பல்கலைக் கழகத்தை தமிழ்நாட்டுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தமிழ்நாடு அரசின் உயர்கல்விக் கொள்கை, சமூக நீதிக்கு எதிரானது.

தமிழகத்தின் சமூக நீதி பாரம்பரியத்தில் பற்று கொண்டுள்ள அனைவரும், தமிழகத்தில் வெளி நாட்டு பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்." என அறிக்கை மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள உயர் கல்வி ஆலோசகரும், கல்வியாளருமான நெடுஞ்செழியனிடம் பேசியபோது, ``உலகளவில் முன்னணியில் இருக்கும் ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட் போன்ற புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் திறக்க வாய்ப்பில்லை.
ஏனெனில், அவர்களுக்குச் சொந்த நாடுகளிலேயே லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கக் காத்திருக்கின்றனர். மாறாக, தங்கள் சொந்த நாட்டில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாமலும், சிறப்பாகச் செயல்பட முடியாமலும் திணறும் நிறுவனங்களே இந்தியாவில் காலடி எடுத்து வைக்கின்றன.
மேலும், வெளிநாடுகளில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் கல்விச் சூழல் இந்தியாவில் கிடைக்காது என்பதால், அங்கிருக்கும் சிறந்த பேராசிரியர்கள் இங்கு வந்து பணியாற்றவோ அல்லது தங்கியிருக்கவோ மாட்டார்கள்.
இதனால் தகுதியற்ற நபர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்தும் சூழலே உருவாகும். தகுதியான பேராசிரியர்களை உறுதி செய்வதற்கான தரக் குறியீடுகள் அரசிடம் தெளிவாக இல்லை. மேலும், இத்தகைய பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான பரந்த நிலப்பரப்பை வழங்குவதிலும் சிக்கல் உள்ளது.
பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைக் ஒரே வளாகத்தில் ஒருங்கிணைத்து இயக்கும் முறையைத் துபாய் முயற்சித்துப் பார்த்தது. உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தபோதிலும், தகுதியான பேராசிரியர்கள் கிடைக்காததால் அத்திட்டம் அங்குப் பெரும் தோல்வியைத் தழுவியது. இங்கு வரும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் கல்விச் சேவையை மேம்படுத்துவதற்காக வரவில்லை. மாறாக, இந்தியக் கல்விச் சந்தையைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதையே நோக்கமாக்கிக் கொண்டுள்ளன.
அதனால், இந்தியாவில் இத்திட்டம் அமலுக்கு வந்தால், தனியார் அமைப்புகளுடன் கைகோர்த்து மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மையங்களாகவே இவை மாறும். ஸ்டான்ஃபோர்ட் போன்ற உலகத்தரப் பல்கலைக்கழகங்கள் கூகுள் போன்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கி, அதிலிருந்து நிதியைப் பெற்று வளர்ச்சியை எட்டுகின்றன. ஆனால், இங்குள்ள கல்வி முறை வெறும் கட்டண வசூலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது வருந்தத்தக்கது.
மாநிலத்தின் முதன்மை நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தைக்கூட ஐஐடி (IIT) தரத்திற்கு உயர்த்த அரசு தவறிவிட்டது.

மேலும், தமிழ்நாட்டில் 15-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமலேயே இயங்கி வருகின்றன. ஆட்சிக்கு வந்து 120 நாட்களுக்கு மேலாகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்காமல் தள்ளிப்போடுவது, கல்வித் துறைக்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
தேசியக் கல்விக் கொள்கையை (NEP) எதிர்ப்பதாகக் கூறும் தமிழ்நாடு அரசு, அதே கொள்கையின் ஒரு பகுதியான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகையை மட்டும் அனுமதிப்பது பெரும் முரண்பாடாகும். தேசியக் கல்விக் கொள்கையின்படி (NEP) பெரும்பாலான மாநிலங்களில் இளநிலைப் பட்டப்படிப்புகள் (B.A., B.Sc., B.Com போன்ற) 4 ஆண்டுகள் என மாற்றப்பட்டுள்ளன.
ஆனால், தமிழ்நாட்டில் 3 ஆண்டு பட்டப்படிப்பு முறை பின்பற்றப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ஐஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களிலோ அல்லது சில குறிப்பிட்ட உயர்கல்விப் பாடத்திட்டங்களிலோ சேருவதற்குத் தடைகள் உருவாகின்றன. இந்த முரண்பாடுகள் மற்றும் எதிர்காலப் பாதிப்புகள் என ஏராளமான சிக்கல்களை மாணவர்கள் சந்திக்கிறார்கள். இந்த அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்காமல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை வரவேற்பது எவ்விதத்திலும் நியாயமாகாது.

இன்று கல்வியே நாட்டின் மிகப்பெரிய ஊழல் மண்டலாக மாறியுள்ளது. உதாரணமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 28 லட்சமாக இருந்த கட்டணம், இந்த ஆண்டு ஒரே அடியாய் 35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 7 லட்சம் ரூபாய் வரை கட்டணம் உயருவதை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிக்கும் அளவுக்கு கல்வித்துறை பலவீனமாக உள்ளது. உள்நாட்டு அமைப்புகளுக்கே முறையான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கதவைத் திறப்பது எவ்வகையிலும் நியாயமில்லை.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதில் முறையான விதிமுறைகளோ (Regulations), கட்டணக் கட்டுப்பாடுகளோ அல்லது தரக் குறியீடுகளோ (Quality Parameters) தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதால் இந்தத் திட்டம் வெற்றிகரமான ஆலோசனையாக இருக்காது.
தற்போதைய இந்தியக் கல்விமுறை வெறும் கற்பித்தலோடு நின்றுவிடுகிறதே தவிர, சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆராய்ச்சி சார்ந்த ஒன்றாக (Teaching-cum-Research) மாறவில்லை. விவசாயம் அல்லது பொருளாதாரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள், நடைமுறைச் சமூகப் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் கல்வி முறை அமைய வேண்டும். கல்வி அமைப்பின் முக்கிய தூண்களான அணுகல் (Access), தரம் (Quality), மற்றும் சமத்துவம் (Equity) ஆகிய மூன்றும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களில் அரசு கவனம் செலுத்தலாம்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் கல்வி தனித்து, தூய்மையாக இருந்தது. ஆனால், இன்று கல்வியோடு அரசியலும், சினிமாவும் கலந்துவிட்டது. பொழுதுபோக்கிற்கும் அரசியலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கல்விக்குக் கொடுக்காததால், தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் தங்களின் பெருமையையும் தரத்தையும் இழந்து வருகின்றன.
எனவே, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்வித் துறைக்கும் கண்டிப்பான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். கல்வியாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் இத்தகைய முடிவுகளை எடுப்பது தவறானது. வெளிநாட்டினருக்குக் கதவைத் திறப்பதற்கு முன்பாக, உடனடியாகத் துணைவேந்தர்களை நியமித்து, உள்ளூர் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுப்பதே தற்போதைய அவசியத் தேவையாகும்." என்றார்.
உயர் கல்வித்துறையின் சிக்கல்களை கவனிக்குமா அரசு?


















