Kiara Advani: " 'டாக்சிக்' படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் ஏமாற்றத்தை அளித்தன!" ...
ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து தாக்குதல்கள்: மாயமான 2 சிறப்புக் காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியான டச்சான் (Dachhan) வட்டாரத்தில் உள்ள கியார் கிராமத்தில், உள்ளூர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையில் (SOG) பணியாற்றி வந்தவர்கள் பாபி சந்த் (57) மற்றும் ரஷ்பால் குமார் (45). இவர்கள் இருவரும் புதன்கிழமை அன்று தங்களது முகாமிலிருந்து தர்ணா-மர்வா பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குச் சென்றபோது மாயமாகினர்.
இந்நிலையில், இன்று அதிகாலை இவர்கள் இருவரின் உடல்களும் பல இடங்களில் குண்டுகள் துளைத்த நிலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த காவலர்களின் துப்பாக்கிகள் (Service weapons) அங்கிருந்து மாயமாகியுள்ளதால், இதன் பின்னணியில் பயங்கரவாதிகளின் சதி இருக்கலாம் எனப் பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு ஒரு நாள் முன்னதாக, நேற்று (புதன்கிழமை) அன்று தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப்-ன் 46-வது பட்டாலியனைச் சேர்ந்த மூன்று வீரர்கள் காயமடைந்தனர்.
பாலம் ஒன்றின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப் குழுவினர் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடினர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, பயங்கரவாதிகள் முதல் 15 வினாடிகளில் சுமார் 30 தோட்டாக்களையும், அடுத்த ஒரு நிமிடத்திற்குள் மேலும் 12 தோட்டாக்களையும் என மொத்தம் 40-க்கும் மேற்பட்ட குண்டுகளைச் சுட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியது தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த தலைமைக் காவலர் சோம்வீர் சிங், காவலர்கள் ராகேஷ் தாஸ் மற்றும் சந்தோஷ் சந்துரு ஆகியோர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கவச வாகனங்களுடன் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதோடு, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.













