`உங்க தம்பி கமல்சார்கூட இருக்காரே பரவால்லயா'ன்னு ஆனந்த் கேட்டார் - தவெகவில் சேர்...
தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ
சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்துள்ளார் . முன்னதாக நள்ளிரவிலேயே சைக்கிளில் வந்து வீட்டின் முன் வராண்டா பகுதியில், தனது முகம் தெரியாத அளவுக்குத் துணியால் முகம் முழுவதும் முகமூடி அணிந்தபடி பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டியின் கண்களைத் தனது கையால் பொத்தி, அவர் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் கம்மலைப் பறிக்க முயன்றுள்ளார். உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட மூதாட்டி மகேஸ்வரி உரத்துக் கூச்சலிட்டதுடன் மட்டுமல்லாமல், கொள்ளையனின் முகத்தில் வீட்டில் சொம்பில் இருந்த தண்ணீரை ஊற்றித் தாக்கி விரட்டியடித்துள்ளார். தனது முகத்தில் ஆசிட் போன்ற திரவம்தான் ஊற்றப்பட்டதோ என்று பயந்து பதறிப்போன முகமூடி கொள்ளையன், தலை தெறிக்க அங்கிருந்து சைக்கிளை விட்டுவிட்டு ஓடி மறைந்தான்.

இந்தச் சம்பவத்தின் முழு விவரங்களும் மூதாட்டியின் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ காட்சிகளில், நள்ளிரவில் சைக்கிளில் வந்த முகமூடி கொள்ளையன் வீட்டின் வராண்டாவில் பதுங்கியிருப்பது, அதிகாலையில் மூதாட்டி வாசல் பகுதியைச் சுத்தம் செய்யும்போது திடீரென பின்னால் இருந்து தாக்குவது, மூதாட்டி கூச்சலிட்டு எதிர்த்து தண்ணீரை ஊற்றுவது, பயந்து ஓடும் கொள்ளையன் ஆகிய காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு, தப்பியோடிய முகமூடி கொள்ளையனை வலைவீசித் தேடி வருகின்றனர்.
கொள்ளையன் விட்டுச்சென்ற சைக்கிளை பறிமுதல் செய்தனர். அந்தச் சைக்கிள் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சுற்றுப்புறத்தில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையன் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், எந்த வழியாகத் தப்பி ஓடினார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்று அதிகாலை நேரங்களில் தனியாக வசிக்கும் முதியவர்களை குறிவைத்துத் திருடர்கள் செயல்படுவது சிவகாசி பகுதியில் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாலை நேர வேளையில் தூக்கக் கலக்கத்திலும்கூட சுதாரித்துக்கொண்டு, துணிச்சலுடன் தனியாளாக முகமூடி கொள்ளையனை ஒரு செம்புத் தண்ணீரால் விரட்டியடித்த மூதாட்டி மகேஸ்வரியை காவல்துறையினர் உள்பட அனைவரும் பாராட்டினர்.
















