விஸ்வநாதன் ஆனந்த் போட்ட விதை... இந்திய செஸ்ஸில் 'செஞ்சுரி' அடித்த கிராண்ட் மாஸ்ட...
"தமிழகத்தில் பெருகி வரும் துப்பாக்கிக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்
"கடந்த ஆண்டு பாமக நிர்வாகி சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோதே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கிக் கலாசாரம் பரவி வருவது குறித்து எச்சரித்தேன்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பாமக நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
"பாமக நிர்வாகி ஞானவேலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பூவரசன் என்பவர் சட்டவிரோதமாக மான் வேட்டையாடியதை ஞானவேல் தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே முன்பகை நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த பூவரசன், நேற்று மாலை ஞானவேலுடன் மோதலில் ஈடுபட்டு சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வில் ஞானவேலுவுடன் வந்த ரகு என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியும், வழக்கறிஞருமான சக்கரவர்த்தி, கடந்த ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி பிரபு என்பவரால் இதேபோல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதன்பின் கொலையாளி பிரபுவை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது அவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கிக் கலாசாரம் பரவி வருவது குறித்து அப்போதே எச்சரித்தேன். ஆனால், இப்போதும் அதே நிலைதான் தொடர்கிறது.
துப்பாக்கிக் கலாசாரம் பெருகுவது மிகவும் ஆபத்தானது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மேலும் மோசமடைந்து விடாமல் தடுக்க தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாசாரத்தை அடியோடு வேரறுக்க அதிரடியான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.




















