செய்திகள் :

பெற்றோர்களே... உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டிய 10 பண ரகசியங்கள் இவைதான்!

post image

‘‘என் மகனை நல்லா படிக்க வச்சேன். படிச்சுட்டு கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சு கைநிறைய சம்பளமும் வாங்குறான். ஆனா என்ன பிரயோசனம்? இன்னைக்கு 20 லட்சம் ரூபாய் கடனாளியா நிக்கிறான்!’’ என மனம் கலங்கிச் சொன்னார் கோவையைச் சேர்ந்த பரசுராமன்.

‘‘என் அப்பா வியாபாரத்த என்கிட்ட ஒப்படைக்கிறப்ப, அதோட மதிப்பு வெறும் 30,000 ரூபாய். ஆனா நான் அந்த பிசினஸ வளர்த்து என் பிள்ளைகிட்ட ஒப்படைச்சப்ப அதோட மதிப்பு 3 கோடி ரூபாய். ஆனா, சொகுசா வளர்ந்துட்ட அவனுக்கு பணத்தோட அருமை புரியல. பிசினஸை மொத்தமா அழிச்சுட்டான்’’ என மனம் நொந்து சொன்னார் திருச்சியைச் சேர்ந்த சேதுபதி.

குழந்தைகள் நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, கைநிறையச் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் கனவு. ஆனால், அதிகம் சம்பாதிப்பது மட்டுமே போதுமா என்றால் போதாது என்றுதான் சொல்ல வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை எப்படிச் செலவிடுவது, எப்படிச் சேமிப்பது, எப்படிப் பெருக்குவது என்பதைத் தெரியாவிட்டால், சம்பாதிக்கும் பணத்தைக் காப்பாற்ற முடியாமல் போகும் நிலையே வரும்.

மாடல் படம்

பணத்தின் மதிப்பையும், அதன் வலிமையையும் பிள்ளைகளுக்குச் சொல்லித் தராமல் போனதால்தான் மேற்கண்ட இரண்டு அப்பாக்களும் கலங்கி நிற்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல... பணத்தைக் காப்பாற்றும் சூட்சுமத்தைச் சொல்லத் தவறிய பெற்றோர்கள் பலரின் நிலையும் இதுதான். சிறு வயதில் இருந்தே பிள்ளைகளுக்குப் பணம் பற்றிய சில பழக்கங்களைச் சொல்லி வளர்த்தால் பெரும்பாலும் சம்பாதிக்கும் காலத்தில் பணத் தவறுகளைச் செய்யாமல் தப்பித்துக்கொள்வார்கள். நிதி ஆலோசகர்கள் வலியுறுத்தும், குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டிய 10 முக்கியமான பணப் பழக்கங்கள் இதோ...

1. பாக்கெட் மணியைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொடுங்கள்!

‘என் குழந்தைகளுக்குப் பணமே தரமாட்டேன். எதுவாக இருந்தாலும் நான்தான் வாங்கித் தருவேன்’ எனப் பெருமையாகச் சொல்பவரா நீங்கள்? அப்படிச் செய்வது தவறு. உங்கள் குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட தொகையைப் பாக்கெட் மணியாகக் கொடுங்கள். வாரம் 100 ரூபாய் கொடுத்து, அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று கவனியுங்கள். கிடைத்த பணத்தை ஒரே நாளில் செலவழிக்காமல், வாரம் முழுவதும் திட்டமிட்டுச் செலவு செய்யவும், அவசியமான செலவைச் செய்யவும் கற்றுக்கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் பணத்தின் மதிப்பைப் புரிந்துகொள்ள இதுதான் முதல் படி பெற்றோர்களே.

2. இரண்டு உண்டியல் வாங்கிக் கொடுங்கள்!

குழந்தைகளுக்குச் சிறிய இரண்டு உண்டியல்களை வாங்கிக் கொடுங்கள். ஒன்று செலவுக்காக, இரண்டாவது சேமிப்புக்காக. கிடைக்கும் பணத்தை முழுவதையும் செலவு செய்துவிடாமல், கொஞ்சம் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதே இந்த இரண்டு உண்டியல் பழக்கத்தின் நோக்கம். வருமானத்தைப் பிரித்துப் பயன்படுத்தும் பழக்கம், எதிர்காலத்தில் பட்ஜெட் போட்டுச் செலவழிக்கும் பழக்கத்தை உருவாக்க உதவும்.

மாடல் படம்

3. ஆசை வேறு, தேவை வேறு என்பதை உணர்த்துங்கள்!

பள்ளிக்குச் சென்றுவர கைக்கிள் தேவையாக இருக்கலாம்; எழுத பேனா தேவையாக இருக்கலாம். ஆனால், நண்பர்கள் வைத்திருக்கும் விலை உயர்ந்த சைக்கிள், விலை உயர்ந்த பேனா வேண்டும் என நினைப்பது தேவை அல்ல... அது ஆசை! இந்த வேறுபாட்டைச் சிறு வயதிலேயே விளக்குங்கள். ஒரு பொருளை வாங்குவதற்கு முன், ‘இது எனக்கு உண்மையிலேயே தேவையா, நம்மிடம் இருக்கும் பணத்தைத் தாண்டிய ஆசையா என்பதையெல்லாம் குழந்தைகளே சிந்திக்கும் வகையில் சூழல்களை உருவாக்கிக் கொடுங்கள்!

4. காத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்!

‘என் மகன் எதைக் கேட்டாலும், அடுத்த நிமிடமே வாங்கிக் கொடுத்துவிடுவேன்’ எனப் பெருமைப்பட வேண்டாம். விலை உயர்ந்த பொம்மையையோ, விளையாட்டுப் பொருள்களையோ உடனே வாங்கித்தர வேண்டாம். அதற்காகப் பணத்தைச் சேமிக்கச் சொல்லுங்கள். உதாரணமாக, ரூ.1,000 மதிப்புள்ள பொருளை வாங்க வேண்டும் என்றால், ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையைச் சேமிக்க வேண்டும் எனச் சொல்லுங்கள். ஆசையை உடனே நிறைவேற்றாமல், திட்டமிட்டுக் காத்திருந்து வாங்கும் பழக்கம், வளர்ந்த பிறகு தேவையற்ற கடன்களைத் தவிர்க்க உதவும்.

5. உழைத்தால்தான் பணம் கிடைக்கும் என்பதைப் புரியவையுங்கள்!

வீட்டில் வயதுக்கு ஏற்ற சிறிய பொறுப்புகளை வழங்குங்கள். பொருள்களை ஒழுங்குபடுத்துவது, வீட்டுத் தோட்டத்தைப் பராமரிப்பது போன்ற செயல்களைச் செய்யச் சொல்லி பழக்குங்கள். செய்யும் செயல்களுக்கு ஏற்ப சின்னச் சின்ன ஊக்கத்தொகை வழங்கலாம். பணம் சும்மா கிடைப்பதில்லை; உழைப்புதான் பணத்தை ஈட்ட உதவும் என்பதை மனதில் பதிய வையுங்கள்.

6. சிறிய இலக்குகளை நிர்ணயிக்கச் சொல்லுங்கள்!

புதிய சைக்கிள் வாங்க வேண்டும், லேப்டாப் வாங்க வேண்டும் எனக் குழந்தைகளையே இலக்குகளைத் தேர்வு செய்ய வழிகாட்டுங்கள். அதற்குத் தேவையான தொகை எவ்வளவு, மாதம்தோறும் எவ்வளவு சேர்க்க வேண்டும், எப்போது இலக்கை எட்ட முடியும் என்பதைக் கணக்கிட உதவுங்கள். இப்படி இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படுவதன் மூலம் எதிர்காலத்தில் வீடு வாங்குவது, கார் வாங்குவது, தொழில் தொடங்குவது போன்ற பெரிய நிதி இலக்குகளுக்கும் திட்டமிட முடியும்.

7. வட்டியின் அடிப்படையைக் கற்றுக்கொடுங்கள்!

உங்கள் குழந்தைகளின் சேமிப்பில் இருந்து 100 ரூபாய் கடன் வாங்குங்கள். அடுத்த மாதம் திரும்பத் தரும்போது 1 ரூபாய் அதிகமாகக் கொடுங்கள். அந்த கூடுதல் 1 ரூபாய் கடனுக்கான வட்டி எனச் சொல்லிக் கொடுங்கள். குறிப்பிட்ட வயது ஆனதும் வங்கியில் ஆர்.டி ஆரம்பித்து பணம் செலுத்தச் சொல்லுங்கள். வருட இறுதியில் கூடுதலாகக் கிடைக்கும் பணம் எப்படிக் கிடைத்தது என விளக்கிச் சொல்லுங்கள். பணம் சேமிக்கப்படும்போது காலப்போக்கில் எப்படி வளரக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டால், எதிர்காலத்தில் முதலீட்டின் முக்கியத்துவத்தை எளிதாக உணர்வார்கள்.

8. கடன் வாங்குவது சுமை என்பதைச் சொல்லுங்கள்!

கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் போன்றவற்றைப் பற்றிய அடிப்படை விழிப்புணர்வை வயதுக்கு ஏற்ற வகையில் ஏற்படுத்துங்கள். கடன் வாங்கினால் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும்; தாமதித்தால் கூடுதல் வட்டியும் கட்டணங்களும் சுமையாக மாறும் என்பதை விளக்குங்கள். தேவையில்லாமல் கடன் வாங்கி ஆசைகளை நிறைவேற்றுவதைவிட, திட்டமிட்டுச் சேமித்து வாங்குவதே நல்லது என்பதைப் புரியவையுங்கள்.

மாடல் படம்

9. விளம்பரங்களையும், ஆஃபர்களையும் புரியவையுங்கள்!

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போன்ற விளம்பரங்களைப் பார்த்து, தேவையில்லாத பொருள்களை வாங்கக் கூடாது என்பதைச் சொல்லுங்கள். தள்ளுபடி கிடைக்கிறது என்பதற்காகத் தேவையற்ற பொருளை வாங்கினால், அது வீண்செலவு என்பதை உணர்த்துங்கள். விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்கும் பழக்கத்தை வளர்த்திடுங்கள்.

10. பெற்றோர்களே, நீங்கள் முன்மாதிரியாக இருங்கள்!

குழந்தைகளுக்கு எப்போதுமே பெற்றோர்தான் ரோல்மாடல். நீங்கள் செய்வதைத்தான் அவர்கள் அதிகம் கவனிப்பார்கள். தேவையற்ற பொருள்களை அடிக்கடி வாங்குவது, கிரெடிட் கார்டை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது, சேமிப்பைப் பற்றி அலட்சியமாக இருப்பது போன்ற பழக்கங்களை நீங்கள் முதலில் தவிர்க்க முயலுங்கள். குடும்பத்தின் வரவு செலவு விஷயங்களிலும், பட்ஜெட் போடும்போதும் குழந்தைகளையும் பங்கேற்கச் செய்யுங்கள்.

குழந்தைகள் சின்ன வயதிலிருந்தே பணத்தின் மதிப்பு, சேமிப்பு, செலவுக் கட்டுப்பாடு, முதலீடு, கடன் விழிப்புணர்வு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டால், அவர்கள் நிச்சயம் பணம் சார்ந்த விஷயங்களில் எதிர்காலத்தில் சரியான முடிவுகளையே எடுப்பார்கள்!

எகிறும் விலைவாசி... 10,000 ரூபாயில் தீபாவளி பட்ஜெட்! கடனில் சிக்காமல் கொண்டாடலாமே..!

அரிசி முதல் பருப்பு வரை அத்தனை அத்தியாவசிய பொருள்களின் விலையும் எகிறிவிட்டது. புத்தாடைகள், இனிப்பு, பட்டாசுதான் தீபாவளியின் ஸ்பெஷலே. ஆனால், அவற்றின் விலையும் நடுத்தர, ஏழை மக்கள் அச்சப்படும் அளவுக்கு உ... மேலும் பார்க்க

Binance-க்கு விழுந்த அடி! கிரிப்டோ வரலாற்றின் மிகப்பெரிய கொள்ளையில் $6.3 பில்லியன் மாயம் - பின்னணி!

கிரிப்டோகரன்சி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு பிரம்மாண்டமான சைபர் தாக்குதலில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்சான Binance-இலிருந்து சுமார் $6.3 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 52,000 கோடி ர... மேலும் பார்க்க

ஃபின்ஃபுளூயன்சர்கள்: விழிப்புணர்வோடு பொறுப்புணர்வும் தேவை!

ஹலோ வாசகர்களே..!இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஃபின்ஃபுளூயன்சர்கள் (Finfluencers) முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆனால், அனுபவமின்மையும் பக்குவமின்மையும் சில ந... மேலும் பார்க்க

பணக் கஷ்டத்தை நோக்கித் தள்ளும் ஷாப்பிங் மைண்ட்செட்... ஜாக்கிரதை மக்களே!

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால்தான் துணிக்கடைகளிலும், மால்களிலும் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால், இன்றைக்கு எப்போது பார்த்தாலும் கடைகளில் பரவலாகக் கூட்டம் இருக்கவே செய்கிறது. காரணம், ஷாப்பிங் செ... மேலும் பார்க்க

பி.எஃப் பணத்தை அடிக்கடி எடுப்பவரா நீங்கள்? 60 வயதில் உங்களுக்குக் காத்திருக்கும் ஆபத்து!

குமரேசனுக்கு இப்போது 60 வயது. மூன்று நாள்களாக உடம்பு படுத்தி எடுக்க, ஆஸ்பத்திக்குப் போக பணம் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார். வேலைக்குச் சென்ற காலத்தில் மாதச் சம்பளம் வந்துகொண்டிருந்தது. தாராளமாகப... மேலும் பார்க்க

இந்த மைண்ட்செட் இருக்கிறவங்க கிரெடிட் கார்டு வச்சுக்கிட்டா, கடனாளி ஆவது கன்ஃபார்ம்!

“நான் அஞ்சு கிரெடிட் கார்டு யூஸ் பண்றேன். சரியா டியூ கட்டாம விட்டதால வட்டிக்கு வட்டி சேர்ந்து ஆறு லட்சத்துக்கு மேல கடன் சேர்ந்துடுச்சு. எல்லா பேங்குல இருந்தும் போன் பண்ணிக்கிட்டே இருக்காங்க. ஒரே மன உள... மேலும் பார்க்க