பெற்றோர்களே... உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டிய 10 பண ரகசியங்கள் இவைதான...
மானிய பணம் மக திருமணக்கு போதும்னு இருந்தேன், மறுத்துட்டாங்க!- பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ துரை மனைவி
குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மானியம் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடை பெற்றது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் 2015 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் வெளியான படங்களுக்கு மானியம் வழங்கப் பட்டது.
சிறந்த கருத்தைச் சொல்லும் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் போனால், தயாரிப்பாளர் நஷ்டமடையக் கூடாது என்கிற நல்ல நோக்கத்தில் இந்த மானியத் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப் படுத்தப் பட்டது. ஆனால் ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்தால் இந்த மானியத்தை வாங்கி விடலாம் என்கிற போக்குதான் கடந்த சில வருடங்களாக நிலவி வருவதாகச் சொல்கிறார்கள்.
நடந்து முடிந்த இந்த வருட சம்பவத்துக்கு வருவோம்.
வருடத்துக்கு 28 படங்கள் வீதம் 8 ஆண்டுக்கும் சேர்த்து 224 படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
இதில் சில சர்ச்சைகளும் உண்டாகியிருக்கிறது என்பதுதான் இங்கு செய்தி.
2016 ல் வெளியான 'காகிதக் கப்பல்' படம் மானியம் பெறத் தகுதியானதாக அறிவிக்கப்பட்டு, ' தயாரிப்பாளர் வி.ஏ துரை மனைவி லக்ஷ்மிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவரும் அரசு கேட்ட ஆவணங்களைக் கொண்டு போய்க் கொடுத்திருக்கிறார்.
ஆனால் விழா நடக்கும் நாளுக்கு முந்தைய நாள் வரை அவருக்கு மேற்கொண்டு தகவல் ஏதும் வராததால், அவரே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்.
அப்போது 'உங்களது அந்தப் படம் பட்டியலில் இல்லை' எனச் சொல்லி விட்டார்களாம்.
'என்ன நடந்தது'? லக்ஷ்மியிடமே பேசினோம்.
''அதுதான் எனக்கும் ஒண்ணும் புரியல சார். 'பிதாமகன்', 'என்னம்மா கண்ணு', 'கஜேந்திரா', 'லூட்டி', 'விவரமான ஆளு'ன்னு பல படங்களைத் தயாரிச்சார் அவர். ரஜினி சார் நடிச்ச 'பாபா' படத்துல நிர்வாகத் தயாரிப்பாளரா இருந்தார். உடல்நலன் பாதிக்கப்பட்டு ரொம்பவே கஷ்டப்பட்டு 2023ம் வருஷம் இறந்துட்டார்.
அவர் இருந்தப்பவே 2016 ம் ஆண்டு வெளியான படங்களின் வரிசையில் அனுப்பி வச்சார். மானியம் லேட்டா வந்தது. மானியம் அறிவிச்சப்ப அவர் இறந்துட்டதால என் ஒரே பொண்ணு பேருக்குதான் தகவல் அனுப்பி வச்சாங்க.
ஏன்னா அவர் உயிருடன் இருந்தப்பவே எனக்குப் பிறகு என் கம்பெனியை என் பொண்ணுதான் நிர்வகிப்பா'னு தயாரிப்பாளர் சங்கத்துல கடிதமெல்லாம் கொடுத்திருந்தார்.
பொண்ணு பேருக்கு வந்திருந்த அந்த கடிதத்தில் கேட்டிருந்த ஆவணங்களையெல்லாம் கொண்டு போய்க் கொடுத்தோம். அடுத்த சில தினங்கள்ல செய்தித் துறை பி.ஆர். ஓ போன் பண்ணி, உங்க மகள் பேருல இருக்கிற ஆவணங்கள் வேண்டாம், உங்க பேருல இருக்கிற ஆவணங்கள் கொடுங்கனு கேட்டார். சரின்னு அதையும் போய்க் கொடுத்துட்டு வந்தேன்.

ஆனா கடைசி வரைக்கும் எனக்கு தகவல் வரவே இல்லாததால் போன் பண்ணிக் கேட்டேன். 'உங்க படம் பட்டியல்ல இல்லை'னு சொல்லிட்டு உடனே போனைக் கட் செய்துட்டாங்க. மேற்கொண்டு போன் பண்ணினா ரெஸ்பான்ஸே இல்ல.
நான் தயாரிப்பாளர் சங்கம் தொடர்புல இருக்கிற சிலர்கிட்ட விசாரிச்சப்ப, 'உங்க படம் லிஸ்டுல இருந்துச்சே'னு சொன்னாங்க
படத்தை தேர்வுக் குழு போட்டுப் பார்த்த பிறகுதான் எங்களுக்கு கடிதமே வந்தது. அப்படி இருக்க, கடைசி நிமிடத்துல என்ன நடந்ததுனு தெரியல. நான் அவருக்கு சட்டபூர்வ வாரிசு இல்லனு ஏதோ சொன்னதா சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன். மானியம் பெறத் தகுதிகள்னு அரசு சொல்லியிருக்கிற அத்தனையும் இருக்கு. படத்தின் தயாரிப்பாளர் என் பொண்ணுதான். இப்படியிருக்கிறப்ப இல்லாத விதிகளைக் காரணம் காட்டி எதுக்கு தடுத்தாங்கனு தெரியலை. நான் இப்ப இருக்கிற பொருளாதார சூழல்ல நீதிமன்றத்துக்கெல்லாம் போக முடியாது.
கடைசிக் காலத்துல அவர் உடல்நிலை சரியில்லாம இருந்ததால் சிகிச்சைக்கே ரொம்ப செலவாச்சு. அதுவும் பலன் தராம இறந்தே போயிட்டார். அவரது மறைவுக்குப் பிறகு நானும் என் மகளும்
ரொம்பவே கஷ்டப்படுறோம். வாடகை வீட்டுலதான் குடியிருக்கோம். நான் ஒரு தனியார் கம்பெனியில வேலைக்குப் போயிட்டிருக்கேன். மகளுக்கு இப்பதான் காலேஜ் முடிஞ்சிருக்கு, இப்ப தங்கம் விக்கிற விலையில அவளைக் கல்யாணம் முடிச்சுக் கொடுக்கறது கூட எனக்கு பெரிய மலைப்பா இருக்கு.
சினிமாவுல இருந்து வந்திருக்கிற முதலமைச்சர்கிட்ட நான் ஒரு கோரிக்கை வைக்குறேன். படத்தைத் தயாரிச்சவங்கங்கிற முறையில எல்லா ஆவணமும் சமர்ப்பிச்ச பிறகும் ஏதோவொரு காரணத்தைச் சொல்லி மானியத்தை மறுத்திருக்காங்க. என் குடும்பம் இப்ப படுற கஷ்டத்துக்கு அந்த 7 லட்சம் பெரிய உதவியா இருக்கும். அதனால அவர் இந்த விஷயத்துல தலையிட்டு எனக்கு உதவி செஞ்சா நல்லா இருக்கும்' என ரொம்பவே நொந்து போய் பேசுகிறார்.


















