"தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை" - மக்களவையில் திரும...
"திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.
இந்த ஆண்டு இந்து அமைப்புகள் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் மகா தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்றிருந்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், மலை உச்சியில் இருக்கும் தூணில் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என மறுத்தது தமிழ்நாடு காவல்துறை.
இதை மீறி மலை உச்சிக்குச் செல்ல முயற்சி செய்த இந்து அமைப்பினர் தடுக்கப்பட்டதால் காவல்துறை - இந்து அமைப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் மீது சிலர் தாக்குதலும் நடத்தினர்.
இந்தப் பதற்றமான சூழலில் மதுரை மாவட்ட ஆட்சியரால் 144 உத்தரவு போடப்பட்டு இப்பிரச்னை அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், தீபத்தூணா அல்லது சர்வே நில அளவைக் கல் தூணா என்பது விவாதப்பொருளாகியிருக்கிறது.
இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், நில அளவைக் கல் என்பதற்கான அனைத்து ஆதரங்களையும் நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம். அது தீபத்தூண்தான், அதில் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது என்பதற்கான எந்த ஆதரமும் இல்லை.

உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருக்கும் தீப மண்டபத்தில் இருப்பதுதான் தீபத்தூண். அதற்கான ஆதரங்களும் தெளிவாக இருக்கின்றன. அங்குதான் பல ஆண்டுகளாக கார்த்திக்கை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த வழக்கை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முறையாக கையாளவில்லை. விதிமீறல், சட்டமீறல் நடந்திருக்கிறது. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் அவரது எல்லையை மீறி செயல்படுகிறார், அதுதான் பிரச்னை.
ஜி ஆர் சுவாமிநாதன் பாஜகவில் இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மரியாதைக்குரிய நீதிபதியாக இருந்துகொண்டு அரசியல் சட்டத்தை மீறி செயல்படக் கூடாது, மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படக் கூடாது.
இதுபோன்ற செயல்பாடுகளால் பாஜக எப்படி அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துப் பயன்படுத்துகிறதோ, அதுபோல நீதிபதிகளையும் பயன்படுத்துகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரத்தான் செய்கிறது.

மதுரையில் மதம், சாதியைக் கடந்து மெட்ரோ, ஐடி பார்க்குகள் கொண்டுவரும் மக்களுக்குத் தேவையான வேலைகள் நடந்து வருகிறது. முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மதுரையில் இப்படியான பிரிவினைகளை ஏற்படுத்தும் பிரச்னைகளை கொண்டுவரவேண்டாம் " என்று பேசியிருக்கிறார்.














