திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும...
திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ``திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதனால், அப்பகுதியில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே நேற்றிரவு பதட்டம் ஏற்றப்பட்டது.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதோடு, நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
அதனை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கத் தீர்ப்பளித்தது.
அதன்படி இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 144 தடை உத்தரவை ரத்து செய்து, ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க தி.மு.க நாடகமாடுவதாக விமர்சித்திருக்கிறார்.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) December 4, 2025
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, ``மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.












