ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு; பண்டிகை காலத்தில் மக்கள் அதிர்ச்சி; எந்தப் பொர...
தேனி: மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்; இரவோடு இரவாக மூவர் கைது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறை அமைந்துள்ளது. இந்தச் சிறையில் ஒரே அறையில் 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு, அந்த அறையில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக சிறைக் காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சிறை கதவைத் திறந்து காவலர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த கைதிகள் லிங்கபிரசாந்த் 25, ராஜா சிக்கந்தர் 24, கருப்பசாமி 25, சிலம்பரசன் 24, திருப்பதி 23, சபரிநாதன் 24, பொன்முத்து செல்வம் 26, பிரவீன் 27, மீனாட்சிசுந்தரம், நிஜந்த், கார்த்திக்ராஜா, முகிலன், செல்வா, தருண், ராஜ்குமார், முத்து இளங்கோ, ராஜீவின் ஆகியோர் எஸ்.ஐ., மதன்மோகனைத் தாக்கி வெளியே வந்தனர்.
இந்தத் தாக்குதலில் சிறைக் காவலர் ஒருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த காவலர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம், தேக்கம்பட்டி சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சிறை வளாகத்தைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல், மதுரை செல்லும் பேருந்துகள் பொது இடங்கள் மற்றும் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.
இதில் தப்பிய கைதிகளில் ஒருவரான பிரவீன் மீண்டும் சிறையில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தார். மேலும் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதி 13 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.















