''நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்'' - அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துற...
`மழையில் நெல் மூட்டைகளை பாதுகாப்பதை விட என்ன வேலை?' - அலட்சிய அதிகாரிகளை கடிந்த அமைச்சர் வினோத்!
டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில், அமைந்துள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின. இதே கிடங்கில் சில மாதங்களுக்கு முன்பு ஏராளாமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின. அப்போது வேளாண்மை துறை அமைச்சர் வினோத் நெல் மூட்டைகளைப் பார்வையிட்டு பாதுகாப்பதற்கான நவடிக்கை மேற்கொள்ளவில்லை என சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து நெல் சேமிப்பு கிடங்கில் அமைச்சர் வினோத் பார்வையிட்டதுடன் நெல்லைப் பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அப்போது சில ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதும் அதே கிடங்கில் மழையில் மூட்டைகள் நனைந்து நெல் மணிகள் வீணாகியிருப்பதாகவும், தார்ப்பாய் போட்டு சரியாக மூடாததால் அடிப்பகுதியில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து நெல் மணிகள் முளைத்து விட்ட தகவலும் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் வினோத், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்காமல், திடீரென திறந்தவெளி கிடங்கிற்கு ஆய்வுக்குச் சென்றார். அப்போது, நெல் மூட்டை அடுக்குகளில், தார்ப்பாய்கள் கிழிந்து, நெல் மூட்டைகள் மழையில் நனைந்திருந்ததுடன் சாக்குகள் கிழிந்து நெல் மணிகள் கீழே கொட்டியும் வீணாகி கிடப்பதைப் பார்த்தார். உடனடியாக நுகர்பொருள் வாணிபக் கழக, மண்டல மேலாளரை தொடர்பு கொண்டு, நெல் மூட்டைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும், எத்தனை முறை உங்களுக்கு அறிவுறுத்துவது எனக் கடிந்து கொண்டார். மேலும், அங்குள்ள பணியாளர்களை அழைத்து நெல் மூட்டைகளைப் பாதுகாப்பதை விட உங்களுக்கு என்ன வேலை என்றும் கேட்டார்.

பின்னர் அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம், ``தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால், அனைத்து நெல் சேமிப்பு கிடங்குளை, ஆய்வு செய்து நெல் மூட்டைகள் மழையில் பாதிக்காத வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப வேளாண்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான வயல்களில் மழை நீர் தேங்கி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையில், மழைநீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து, நீர் வெளியேறும் வகையில், நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகள் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். விவசாயிகளை பாதிக்கும் வகையில், அலட்சியமாகச் செயல்படும் வேளாண் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களில், நெல் சேமிப்பு கிடங்கில் உள்ள நெல்லைப் பாதுகாக்க எந்த செயல்பாடுகளும் இல்லை. தேக்கமடைந்த நெல்லை என்ன செய்வது என்பதற்கான தீர்வு மழைகாலம் முடிந்தவுடன் செயல்படுத்தப்படும். அனைத்து துறைகளிலும், அதிகாரிகள் இடமாறுதல் நடந்து வருகிறது. இடமாறுதல் இருந்தால்தான் பணிகள் சிறப்பாக நடக்கும்" என்றார்.





















