அன்பில் மகேஸ்: `அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது; சட்டப்படி எதிர்கொள்வார்!'- கைதுக...
சிவகங்கை: நான்கு தலைமுறை கடந்தும் மாறாத நம்பிக்கை... `கல்லல் கிருஷ்ணா பவனின்' வெற்றிக் கதை!
அசைவ உணவுகளைத் தேடிச் சாப்பிடுபவர்கள் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், சிவகங்கை மாவட்டம், கல்லலில் உள்ள சைவ ஹோட்டல் ஒன்று 120 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது.
கல்லல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இந்த ஹோட்டலின் பெயர் கிருஷ்ணா பவன். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல், 21-ம் நூற்றாண்டிலும் தொடர்ந்து செயல்படுகிறது. நான்கு தலைமுறைகளாக ஒரே மெனுவில் மாற்றமின்றி உணவு வழங்கப்படுவது இதன் சிறப்பாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் கூறுகையில், "இந்த ஹோட்டல் 120 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினரால் பாரம்பர்யமாக நடத்தப்பட்டு வருகிறது.

என்னோட தாத்தா போத்தி ஐயா, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிவகங்கை மாவட்டம், கல்லல் கிராமத்தில் இந்தச் சைவ உணவகத்தைத் தொடங்கினார். அன்றைக்கு அவருக்குச் சொந்த ஊரில் ஒரு உணவகத்தைத் தொடங்கி, அதைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. அவர் ஆரம்பித்த இந்தச் சிறிய உணவகம், இன்னைக்கு நான்கு தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
என்னோட தாத்தாவுக்குப் பிறகு, அவருடைய மகன் மீனாட்சி சுந்தரம் இந்த உணவகத்தைப் பார்த்துக்கிட்டார். அவர் ஒரு அரசு கிராம அதிகாரியாகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அரசு அதிகாரிகள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவு வந்ததால், அவர் தனது அரசு வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக உணவகத்தை நடத்த முடிவு செய்தார். அந்த அளவுக்கு எங்கள் குடும்பத்துக்கு இந்த உணவகம் முக்கியமானதாக இருந்தது.
அந்தக் காலத்திலேயே கல்லலில் முதன்முறையாகப் பத்து ரூபாய்க்கு வாழை இலையில் முழுச் சாப்பாடு வழங்கினோம். அன்றைக்கு அது மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு நிறைவான உணவை, நல்ல தரத்தில் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருந்தது.
அதற்குப் பிறகு, என்னோட தந்தை பஞ்சாபிகேசன் இந்த உணவகத்தைப் பொறுப்பேற்று நடத்தினார். அவரும் தன்னுடைய முன்னோர்கள் கடைப்பிடித்த அதே தரத்தையும் நம்பிக்கையையும் தொடர்ந்து காப்பாற்றினார். காலப்போக்கில் பல புதிய உணவகங்கள் வந்தாலும், எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை குறையவில்லை. தலைமுறை தலைமுறையாக மக்கள் எங்கள் உணவகத்தைத் தேடி வந்துகொண்டே இருந்தார்கள்.

இப்போது நான்காவது தலைமுறையாக நான், சிவராமகிருஷ்ணன், இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். உணவின் தரத்தையும் சுவையையும் பராமரிப்பதோடு, உணவுப் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI தொடர்பான சான்றிதழையும் பெற்றிருக்கிறோம். எங்களை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல உணவை வழங்க வேண்டும் என்பதுதான் இன்றைக்கும் எங்களுடைய முதன்மையான பொறுப்பு.
இப்போ காலம் மாறிப்போச்சு. எங்கு பார்த்தாலும் புதுப்புது உணவகங்கள், பலவிதமான உணவுகள் என்று உணவுத் துறை வளர்ந்துகிட்டே இருக்கு. ஆனாலும், இத்தனை மாற்றங்களுக்கு மத்தியிலும் எங்களுடைய உணவகம் தொடர்ந்து இயங்கிக்கிட்டு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் எங்கள் முன்னோர்கள் உருவாக்கிய நம்பிக்கையும், வாடிக்கையாளர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவும்தான்" எனப் பகிர்ந்தார்.
சைவ உணவாக இருந்தாலும், அதைச் சுவையாகவும் தரமாகவும் வழங்கினால், மக்கள் தொடர்ந்து விரும்பி வருவார்கள் என்பதற்கு கிருஷ்ணா பவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.













