ராதாரவியிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னாங்க; கோர்ட்டை நம்பினேன் - டப்பிங் யூனியன் த...
நடிகை பாலியல் கொடுமை வழக்கு... சிறை வைக்கப்பட்ட அம்புகள்... தப்பித்த வேடன்?
மலையாள நடிகை ஒருவர், 2017-ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, நாடு கடந்தும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மலையாள நடிகர் திலீப், `குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை’ என்று கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான தீர்ப்பு மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார். இது, பாலியல் வன்முறை களுக்கு எதிரான பெண்களின் போராட்ட மனநிலையில், கடும் அதிர்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூரிலிருந்து கொச்சிக்கு அந்த நடிகை காரில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்த சிலர், நடிகைக்கு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோவும் எடுத்தனர்.
நடிகையின் புகாரைத் தொடர்ந்து, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். ‘மூளையாகச் செயல்பட்டவர்’ என்கிற குற்றச்சாட்டில் நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். எட்டு ஆண்டு களுக்குப் பிறகு, எர்ணாகுளம் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஆறு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எட்டாவது குற்றவாளியான திலீப், `ஆதாரங்கள் இல்லை’ என விடுவிக்கப்பட்டுள்ளார். சமூகத்தின் பல தரப்பிலும் இந்தத் தீர்ப்பு விவாதப் பொருளாகியுள்ளது.
‘`நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ வெளியில் கசியவிடப்பட்டு நடிகையின் கண்ணியம் சிதைக்கப்பட்டது; வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி நடிகை மனு செய்யும் சூழல் உருவாக்கப்பட்டது; அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் இரண்டு பேர் வழக்கில் இருந்தே விலகினர்... இதெல்லாமே வழக்கில் பல தரப்பிலிருந்தும் கொடுக்கப்பட்ட அழுத்தங்களையே வெளிச்சம் போட்டன. இப்போதும் அதுவே நடந்துள்ளது. தண்டிக்கப்பட்டுள்ள அந்தக் கூலிப் படை, யாருக்காக இக்குற்றத்தைச் செய்தது? அம்புகளைச் சிறை வைத்துவிட்டு, வேட்டைக்காரரை விடுவிப்பதுதான் நீதியா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள்.
இவ்வழக்கு ஏற்படுத்திய அதிர்வலைகளின் காரணமாகவே, ‘டபிள்யூ.சி.சி’ என்ற பெயரில் மலையாள நடிகைகளுக்கான சங்கமே புதிதாக உருவானது. நாட்டிலேயே முதல் நகர்வாக, திரையுலகப் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டியை அமைத்தது, கேரள அரசு. அதன் அறிக்கை ஓராண்டுக்கு முன் வெளியாகி, தேசிய அளவில் கவனம் பெற்றது.
ஆகக்கூடி... இது தனிப்பட்ட ஒரு நடிகையின் வழக்காக இல்லாமல், நாடு முழுக்கத் திரைத் துறையிலும், மற்ற துறைகளிலும் பெண்களுக்கு நேர்கிற பாலியல் கொடுமைகளுக்கான பிரதிநிதித்துவ வழக்காகவே பார்க்கப்பட்டு வந்தது. அதனால்தான், இந்தத் தீர்ப்பு ஏமாற்றமும், சோர்வும் தந்துள்ளதாக அனைத்து தளங்களிலும் பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நடிகையும், கேரள அரசும் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ள சூழலில், 2017 முதல் சோஷியல் மீடியாவில் நடிகைக்காக அதிகம் பகிரப்பட்டு வந்த #அவளுக்கொப்பம் (#avalkkoppam - அவளுடன் நாங்கள் இருப்போம்) என்ற ஹேஷ்டேக், தீர்ப்புக்குப் பிறகும் பகிரப்பட்டு வருகிறது.
பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நாம் சொல்ல வேண்டியதும் இதையேதான் தோழிகளே... `உங்களுடன் நிற்கிறோம்... நீதி கிடைக்கும் வரை!’
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
















